வியாழன், 17 ஜூன், 2021

நடிகை ரோகிணி கிஷோர் கே.சாமி மீது போலீசில் முறையீடு : "ரகுவரன் பற்றியும் என்னைப் பற்றியும் அவதூறாக பதிவிட்டார்"

BBC :தன்னைப் பற்றியும் மறைந்த தன் கணவர் ரகுவரன் குறித்தும் அவதூறாக பதிவிட்டதாக கிஷோர் கே. சுவாமி என்பவர் மீது சென்னை நகரக் காவல்துறையில் திரைக்கலைஞர் ரோகிணி புகார் அளித்துள்ளார். ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் தொடர்ந்து எழுதி வந்த கிஷோர் கே சுவாமி, பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் ஆபாசமாகவும் அவதூறாகவும் எழுதிவந்த நிலையில், அவர் மீது பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் பெண்கள் புகார்களை அளித்தனர். இவற்றில் சில வழக்குகளில் கைது செய்யப்பட்ட கிஷோர் கே. சுவாமி, ஜாமீனில் விடப்பட்டார். இந்த நிலையில், தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை குறித்து சில நாட்களுக்கு முன்பாக அவதூறான கருத்து ஒன்றைப் பதிவுசெய்தார். இது தொடர்பாக புகார்கள் வந்த நிலையில், அவரை சென்னை சங்கர் நகர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் நீதிமன்றக் காவலில்சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்குப் பிறகு, பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஏற்கனவே அளித்திருந்த புகாரில் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் அவரை மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜூன் 30ஆம் தேதிவரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் திரைக்கலைஞர் ரோகிணி ஆன்லைன் மூலம் சென்னை நகரக் காவல் துறையிடம் ஆன்லைனில் புகார் ஒன்றைப் பதிவுசெய்துள்ளார்.

அதில், தன்னைப் பற்றியும் மறைந்த தனது கணவர் ரகுவரன் குறித்தும் ஃபேஸ்புக்கில் அவதூறாக கிஷோர் கே சாமி எழுதியுள்ளதாக ரோகிணி புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் கீழ்ப்பாக்கம் காவல்துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கிஷோர் கே. சுவாமி கைது செய்யப்பட்டபோது அரசியல் தலைவர்கள் சிலர் அவருக்கு ஆதரவாகப் பதிவிட்ட நிலையில், சில வருடங்களுக்கு முன்பாக கிஷோர் பல தலைவர்களைப் பற்றி மிக இழிவாகவும் அவதூறாகவும் எழுதிய ஃபேஸ்புக் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை முன்வைத்து சிலர் நியாயம் கேட்டனர்.

இந்தப் பதிவில்தான் ரோகிணி - ரகுவரன் தம்பதி குறித்து கிஷோர் மிக மோசமாக எழுதியிருந்தார். அதை முன்வைத்தே இப்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை ரோஹிணிக்கும் நடிகர் ரகுவரனுக்கும் 1996ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ரிஷிவரன் என்ற மகன் உள்ளார். 2004ல் இந்த தம்பதி விவகாரத்து பெற்றனர். இருப்பினும் ரகுவரனின் கடைசி காலத்தில் அவருடன் சுமூகாகவே ரோஹிணி பழகி வந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக