வியாழன், 17 ஜூன், 2021

7பேர் ... நீண்டகால பரோல் வழங்க தமிழக அரசு முடிவு?

puthiyathalaimurai.com : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிப்பதில், மத்திய அரசு முடிவெடுக்காத நிலையில், அவர்களுக்கு நீண்ட நாட்கள் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன், முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களை விடுவிப்பது என கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இந்த தீர்மானத்தை செயல்படுத்த வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார். அதில் இதுவரை எவ்வித முடிவும் வெளியாகாத நிலையில், 7 பேருக்கும் நீண்டகால சிறைவிடுப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 7 பேரில், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள், இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியாது என்பதால், அகதிகள் சான்றிதழ்களுடன், இலங்கை அகதிகளுக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

.>நளினி, பேரறிவாளன் உள்ளிட்டோர் ஏற்கனவே பரோல் பெற்றபோது, எவ்வித தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடாததால், நீண்டகால பரோலுக்கு மத்திய உள்துறை அமைச்சகமும் சம்மதம் தெரிவித்து விட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து 7 பேரையும் நீண்ட பரோலில் விடுவிப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக