செவ்வாய், 15 ஜூன், 2021

ரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000- 14 மளிகை பொருட்கள் வினியோகம்

கொரோனா 2வது தவணை ரூ 2000, மளிகை பொருட்கள் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் பெண்கள்
ரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000- 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது
கொரோனா 2வது தவணை ரூ 2000, மளிகை பொருட்களை பெற்றுக்கொண்டவர்கள்
சென்னை:   தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதனால் பொதுமக்கள் பாதிக்கக்கூடும் என்பதால் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.4 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 2 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் கடந்த மாதம் வழங்கப்பட்டது. 2-வது தவணையாக ரூ.2 ஆயிரம் ஜூன் மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மளிகைப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

14 வகையான மளிகைப்பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரே‌ஷன் கடைகள் மூலம் இன்று முதல் வழங்கப்படும் என்று சிவில் சப்ளை துறை மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கான டோக்கன் கடந்த வாரம் வீடு, வீடாக வினியோகிக்கப்பட்டது. கொரோனா 2-வது கட்ட நிவாரண உதவி மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்குவதில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக தினமும் 200 பேர் வீதம் அழைக்கப்படுகின்றனர்.

கடந்த 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை டோக்கன் வினியோகிக்கப்பட்டது. இதற்கிடையில் 14 மளிகைப்பொருட்களும், ரே‌ஷன் கடைகளுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பார்சல் செய்யப்பட்டன. இந்த தொகுப்பு அனைத்தும் ஒரு பையில் போடப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் கடந்த 2 நாட்களாக இந்த பணி நடைபெற்றது.


தமிழகம் முழுவதும் உள்ள 33 ஆயிரம் ரே‌ஷன் கடைகள் மூலமாக ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவி மற்றும் மளிகைப் பொருட்கள் வினியோகிக்கும் பணி தொடங்கியது.

எந்தெந்த நாட்களில் உதவித்தொகை பெற அழைக்கப்பட்டார்களோ அந்த தேதியில் பொதுமக்கள் ரே‌ஷன் கடைகளுக்கு சென்று பணத்தையும், மளிகைப் பொருட்களையும் ஒரே நேரத்தில் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிவாரண உதவி மற்றும் மளிகைப் பொருட்களை இன்று முதல் இந்த மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ளலாம். வெளியூர் சென்று இருந்தவர்கள் வீடு திரும்பிய பிறகு பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனால் பொதுமக்கள் அவசரப்பட தேவையில்லை. நெரிசல் இல்லாமல் பொறுமையாக வாங்கி செல்லுமாறு சிவில் சப்ளை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இந்த மளிகைப் பொருட்களை வெளி சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி எச்சரித்துள்ளார்.

நிவாரண உதவி மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்கு ரே‌ஷன் கடைகளில் இன்று காலையிலேயே வரிசை காணப்பட்டது. முககவசம், சமூக இடைவெளிகளை பின்பற்றி பொதுமக்கள் இதனை வாங்கி சென்றனர்.

ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ரே‌ஷன் கடைகளுக்கு சென்று இதனை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டு இருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படவில்லை. ஒரு சில பகுதிகளில் உள்ள ரே‌ஷன் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அந்தந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் யாராவது ஒருவர் வந்து ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். தற்போது கைரேகை அவசியம் இல்லை, ஸ்மார்ட் கார்டு மற்றும் டோக்கன் கட்டாயம் தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக