திங்கள், 24 மே, 2021

பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ஆன்லைன் பாலியல் தொல்லை - சென்னை கே கே நகர்

BBC :சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் சர்ச்சையாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ென்னை கே.கே. நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து எழுதிய புகார் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நபர், மாணவர்களுக்கு அக்கவுண்டன்சி மற்றும் பிசினஸ் ஸ்டடீஸ் பாடங்களை நடத்தி வருகிறார். அந்தப் பள்ளியில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றியும் வருகிறார். அவர் தொடர்ச்சியாக மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுவது, பாலியல் அர்த்தங்களுடன் பேசுவது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுவதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வகுப்பறையிலேயே வைத்து மாணவிகளிடம் பாலியல் இரட்டை அர்த்தங்களுடன் கேள்விகளைக் கேட்பது, மாணவிகளின் உடல் அமைப்பு பற்றி விமர்சிப்பது, அவர்கள் அணிந்து வரும் உடையை வைத்து அவர்களது நடத்தை குறித்து விமர்சிப்பது ஆகியவற்றில் அவர் ஈடுபட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

பாலியல் நோக்கங்களுடன் மாணவிகளைத் தொடுவது போன்றவற்றில் ஈடுபட்ட நிலையில் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்தபோதும், அந்த அசிரியரைக் கூப்பிட்டு எச்சரித்ததோடு பள்ளி நிர்வாகம் வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என அந்தப் புகார் கூறுகிறது.

ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்ட அந்த ஆசிரியர், தன்னைப் பற்றி இனிமேலும் யாராவது புகார் அளித்தால், பதிலடி இருக்குமென எச்சரித்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்காக வந்த ஆசிரியர், கேமிரா முன்பாக வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாட்ஸப்பில் மாணவிகளின் போட்டோவைப் பார்த்து, "Very cute" என்றும் அவர்களுடைய தோற்றம் குறித்தும் கருத்துத் தெரிவித்து வந்திருக்கிறார். மாணவிகளை சினிமா காட்சிகளுக்கும் அழைத்திருக்கிறார்.

அவர் தேர்வுத் தாள்களைத் திருத்துபவராகவும் இருப்பதால், தன்னைப் பற்றிப் புகார் அளித்தால் தேர்வில் மிகக் குறைவான மதிப்பெண்களை அளித்துவிடுவேன் என மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இவருடைய நடத்தை போக்சோ சட்டத்தின் கீழ் தண்டிக்கக்கூடிய குற்றம் என்றும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிக்கூடத்தில், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குழந்தை பாதுகாப்புக் கொள்கை என்பது வெளிப்படையாக வைக்கப்படவில்லை. ஆகவே, அந்தக் கொள்கை மீறப்பட்டதா என்று இப்போது சொல்லமுடியவில்லை என்றும் இந்த முன்னாள் மாணவர்களின் புகார் கடிதம் கூறுகிறது.

ஆகவே, உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சிலவற்றை அந்த முன்னாள் மாணவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

அதன்படி, உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியரை இடைநீக்கம் செய்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணை முடியும்வரை அந்த நபர் எந்த வகுப்புகளையும் எடுக்கக்கூடாது. மேலும், அவர் எந்த மாணவருடைய தேர்வுத் தாள்களையோ, தேர்வு தொடர்பான விவகாரங்களிலோ தலையிடக்கூடாது. இந்த விவகாரத்தை பள்ளி தொடர்பில்லாத நபர்களை வைத்து விசாரிக்க வேண்டும்.

விசாரணைக்கு முன்பே அவர் பள்ளியை விட்டு விலகி விட்டால், அவர் விசாரணைக்கு ஆஜராவதை உறுதி செய்ய வேண்டும். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படக்கூடாது. அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் இன்று காலையில் சமூக வலைதளங்களில் வெளியான பிறகு, இதனை மேற்கோள்காட்டி, தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிரணி செயலாளருமான கனிமொழி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

"சென்னை பள்ளியில் ஒரு ஆசிரியர், மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸும் இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

"சென்னை பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் பற்றி ஓர் ஆசிரியர் அருவருக்கத்தக்க வகையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகம் எந்தக் கருத்தைத் தெரிவிக்கவில்லை. ஆனால், பள்ளியின் முதல்வர் பெயரில் வெளியாகியுள்ள கடிதம் ஒன்றில், "இப்படி சம்பவங்கள் நடந்ததாக கடந்த காலத்தில் தங்களுடைய பார்வைக்கு வரவில்லை. இருந்தபோதும் இந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் சுதந்திரமான, நியாயமான முறையில் விசாரிப்போம்" எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கடிதம் அவருடையதுதானா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதற்கிடையே, புகாருக்குள்ளான நபர் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிபிசி அறிந்தது.

குறிப்பு: போக்சோ சட்டத்தின் 23ஆவது பிரிவின்படி பாலியல் விவகாரங்களில் புகார் தெரிவிக்கும் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வகையிலும் வெளிப்படுத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக