திங்கள், 24 மே, 2021

கல்லூரி தேர்வுகள் தேதி விபரம் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

 மின்னம்பலம் : கல்லூரி தேர்வுகள்: தேதியை அறிவித்த அமைச்சர் பொன்முடி
கொரோனா வைரசால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வை எழுத முடியாமல், தேர்வு நடைபெறுமா இல்லையா என்று குழப்பத்தில் இருக்கின்றனர்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (மே 24) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, “அண்ணா பல்கலைக் கழக தேர்வு நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.  
மேலும், “2017 ரெகுலேஷன்படி இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும். மூன்று மணி நேரம் தேர்வு நடைபெறும். ஜூலை மத்தியில் தேர்வுகள் நிறைவுபெறும்.



2013 ரெகுலேஷன்படி யுஜி மாணவர்களுக்கும் ஜூன் 14ஆம் தேதி தேர்வு தொடங்கி நடைபெறும்.

2013க்கு முந்தைய யுஜி, பிஜி மாணவர்களுக்கான தேர்வுகள், ஜூன் 21ஆம் தேதி தொடங்கி 30 வரை நடைபெறும்.  கடந்த முறை, தேர்வு எழுதாமல், பணம் கட்டாமல் இருந்த மாணவர்கள், இன்றிலிருந்து, ஜூன் 3ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே தேர்வெழுதிய மாணவர்கள் பணம் கட்டத் தேவையில்லை. மாணவர்களின் நலன் கருதிதான் தேர்வு நடத்தப்படுகிறது.

மற்ற பல்கலைக் கழகங்களில் ஜூன் 15ஆம் தேதி தொடங்கி ஜூலை 15க்குள் தேர்வுகளை முடிக்க வேண்டும். தேர்வு முடிவுகள் ஜூலை 30ஆம் தேதிக்குள் வெளியிட உயர் கல்வித் துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.
நீட் தேர்வு குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக