வெள்ளி, 14 மே, 2021

இலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்திய பண்பாட்டு நீட்சியும்

May be an image of text that says 'இலங்கையில் சிங்களவர் இந்திய இனத் தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும் பக்தவத்சல பாரதி'

 Subashini Thf   : நூல் திறனாய்வு: இலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்திய பண்பாட்டு நீட்சியும்
நூலாசிரியர்: பக்தவச்சல பாரதி
முனைவர்.க.சுபாஷிணி
பகுதி 1
மானுடவியல் துறையில் சீரிய வகையில் செயலாற்றிக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களும் ஒருவர் பக்தவச்சல பாரதி. இவரது ஏனைய நூல்களான தமிழர் மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழகப் பழங்குடிகள் போன்ற ஏனைய சில நூல்களின் பட்டியலில் இணைவது தான் `இலங்கையில் சிங்களவர்` என்ற தலைப்புடன் வெளிவந்திருக்கும் இந்த நூல். ஏறக்குறைய 200 பக்கங்களைக் கொண்டிருந்தாலும் இந்த நூல் சிங்களவர் வரலாறு, பண்பாடு, சமூக நிலை, மரபணு ஆய்வு என்று நுணுக்கமாக பல தகவல்களை வழங்குவதால் இந்த நூல் கூறும் முக்கிய விஷயங்களைத் தனித்தனியே ஆராய்வது அவசியமாகின்றது.


தமிழக வரலாற்றை ஆராய முற்படும் பலரும் தமிழக நில எல்லைக்குள் ஆய்வுக் களத்தை அமைத்துக் கொள்வது இயல்பு. இதற்கு மாற்றாக தமிழகத்திற்கு அருகில் இருக்கும் இலங்கையில் தனது கவனத்தைச் செலுத்தியிருக்கிறார் நூலாசிரியர். இந்த நூலை அவர் எழுதுவதற்கு அவருக்கு கிடைத்த நேரடி அனுபவங்களும மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. நூலாசிரியர் மூன்று முறை வெவ்வேறு காரணங்களுக்காக இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்யக் கிடைத்த தனது வாய்ப்பையும் அதன் தொடர்ச்சியாக அவர் ஏற்படுத்திக் கொண்ட பல்வேறு தீவிர வாசிப்பு, கலந்துரையாடல்கள் மற்றும் நூல் ஆய்வு என்ற அடிப்படையிலும் இந்த நூல் அமைந்திருக்கின்றது.
இலங்கையைப் பற்றி ஆராய முற்படும் எல்லோருக்கும் பொதுவாகவே ஆய்வுக்கவனம் `தமிழர்கள், தமிழ் மொழி` என்ற அடிப்படையில் அமைவதுண்டு. ஆனால், இந்த நூல் இலங்கையில் சிங்களவர் பற்றி பேசுகிறது. `சிங்களவர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசுபவர்கள்; பௌத்தத்தைத் தனது சமயமாக கடைபிடிப்பவர்கள்; ஆயினும் திராவிட பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள்`, என்ற கருத்துடன் நூலைத் தொடங்குகிறார் நூலாசிரியர்.வரலாற்று ஆய்வுகளில் நமக்கு அருகில் இருக்கும் நாடுகளைப் பற்றிய, அங்கு வாழ்கின்ற மக்களின் சமுதாய நிலை பற்றிய ஆய்வுகளிலும் எந்தவித விருப்பு வெறுப்பு இன்றி ஆராய்ச்சி நோக்கம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்பதை நூலில் குறிப்பிடுகிறார்.
இலங்கை ஏறக்குறைய இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்திய நிலப்பகுதியின் ஒரு பகுதியாக இருந்து அதன் பின்னர் கடல் ஏற்றத்தால் தனித்தீவாகியது.  சிங்கள, சிஹல போன்ற சொற்கள் பொ.ஆ. 3 முதல் 5ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றிய சொல். ஆயினும் ஈழம் (ஈலம்) என்னும் சொல் மிகப் பழங்காலத்தில் வழக்கில் இருந்தது என்பதை சான்று கூற பல எடுத்துக்காட்டுகள் வழங்குகின்றார். சங்க இலக்கியத்தில் ஈழம் என்ற சொல்லைக் குறிப்பிட்டு வருகின்ற செய்யுட்கள் இடம்பெறுகின்றன. ஏறக்குறைய 4500 ஆண்டுகளுக்கு மேலாக இத்தீவினை ஈழம் என்று அழைக்கும் மரபு இருந்துள்ளது என்பதை நூலாசிரியர் முன்வைக்கின்றார்.
இலங்கை வரலாறு எனும் போது மகாவம்சமும், தீபவம்சமும், சூளவம்சமும் முக்கியத்துவம் பெறுபவை. இவை கூறும் செய்திகளின் அடிப்படையில் இலங்கையில் மக்கள் குடியேற்றம் பொ.ஆ. முதலாம் நூற்றாண்டில் விஜயனின் தலைமையில் நடந்தது எனக் குறிப்பிடப்படுகிறது. இதனை வாசிக்கும் போது எல்லோருக்கும் எழுகின்ற கேள்வி, இலங்கை தீவில் விஜயனின் வருகைக்கு முன்பு வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் பேசிய மொழி என்ன? அவர்களது இன அடையாளம் என்ன? அவரது பண்பாடு எது? போன்றவையாகும்.
இலங்கைத் தீவில் பன்னெடுங்காலமாக வாழ்ந்த மக்களுள் பூர்வகுடிகளான நாகர் இன மக்கள் என்னும் இக்கருத்தை வலியுறுத்தும்  வகையில் அமைந்த தொல்லியல் ஆய்வுகள் அண்மைய கால கண்டுபிடிப்புகளில் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக யாழ்ப்பாணத்திற்கு அருகே மன்னார் தீவுக்கு அருகே உள்ள கட்டுக்கரை பகுதியில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வில் நாகர் பண்பாட்டுச் சான்றுகள் பல கிடைக்கப் பெற்றமை குறித்து அந்த அகழாய்விற்குத்  தலைமை தாங்கிய பேராசிரியர் புஷ்பரட்ணம் அவர்களது கட்டுரைகள் நமக்கு நல்ல சான்றுகளாக அமைகின்றன. இந்த நாகர் மக்கள் தமிழர்களின் மூதாதையர்கள். தென்னிந்தியாவில் கிடைப்பது போல தொல்தமிழ்  தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள் இன்று இலங்கைத் தீவில் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக அனுராதபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் கிடைத்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக சிங்களமொழி உருவான பொ.ஆ 5ம் நூற்றாண்டுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தத் தீவில் தமிழ் மொழியும் தமிழ் பேசும் மக்களும் வாழ்ந்தார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இந்த அடிப்படையில் இலங்கைத் தீவிற்குக் குடிபெயர்ந்த சிங்கள மக்களின் மரபணு, பண்பாடு, சமயம், சமூக நிலை, வரலாறு ஆகியவற்றை ஆராய்வதே இந்த நூலில் அடிப்படை நோக்கமாக அமைகிறது.
மகாவம்சத்தை மொழிபெயர்த்த  ஜெர்மானியரான வில்கம் கெய்கர் (1938),  இலங்கைக்கு வந்த விஜயன் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் இருந்து புறப்பட்டு வந்தவன் என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். அதனடிப்படையில் காணும்பொழுது அனேகமாக பஞ்சாப், குஜராத் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் சிங்களவர்களின் மூதாதையர்கள் என்ற எண்ணம் ஏற்படக்கூடும். ஒரு சில ஆய்வாளர்கள் சிங்களவர்கள் இன்றைய ஒரிசா மாநில பகுதியில் இருந்து வந்தவர்கள் என்றும் ஒரு சிலர் இன்றைய வங்காளதேசம் நாட்டின் நிலப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்றும் குறிப்பிடுகின்ற ஆய்வுகளையும் காண்கிறோம். இத்தகைய குழப்பத்தைத் தெளிவு படுத்த மரபணு ஆய்வு என்பது முக்கியமாகிறது.
இந்த நூலின் இரண்டாம் அத்தியாயத்தில் நூலாசிரியர் சிங்கள இன மக்களின் மரபணு ஆய்வுகளை விரிவாக அலசுகிறார். இலங்கையில் இன்று நாம் காணும் போது அங்கு வாழ்கின்ற மக்களை சிங்களவர், இலங்கை தமிழர்கள், மலையகத் தமிழர்கள், மலாய்க்காரர்கள், வேடர்கள், பர்கர் (டச்சு போர்த்துகீசிய நாட்டவர்கள்) என்ற வகையில் பிரிக்கலாம். மரபினக் குழு C, F, H, L, R2, J2 O3, R1A1, என்ற வகையிலும் இன அடையாள கூறு M130, M89, M69, M20, M124, M172, M122, M17   அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சிங்களவர் மரபணு எந்த இனக் குழு மற்றும் மரபின குழு வட்டத்திற்குள் வருகிறது என்பதை நூலாசிரியர் இந்தப்பகுதியில் விளக்குகின்றார்.  M17 இன அடையாள கூறு கிழக்கு ஐரோப்பிய மக்களுக்கு உரியது. இதனை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசும் மக்கள். உதாரணமாக பஞ்சாபியர் குஜராத்தியர் மராத்தியர் ஆகியோரிடம் மிக அதிகமாக காணப்படுகின்றது. அதேபோல மேற்குவங்க பிராமணர்களிடம் 72% அளவும் பிராமணர்களிடம் 48% அளவு உள்ளன. அதேபோல தென்னிந்தியாவில் ஐயங்கார் பிராமணர்களிடம் 31% , செஞ்சு பழங்குடிகளிடம் 26% இது காணப்படுகிறது என்ற செய்தியையும் குறிப்பிடுகிறார். இதற்கு எதிர் மாறாக M20 இன அடையாளக் கூறு மத்திய கிழக்கில் இருந்து இந்தியாவுக்கு ஏறக்குறைய 32,000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த மிகப்பெரிய எண்ணிக்கையில் அமைந்த குழு என்றும்,  இந்த மரபணு மூலத்தைக் கொண்ட மக்களே இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் மிக அதிகம் இருக்கின்றனர் என்பதையும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
இலங்கை மானுடவியல் ஆய்வுகளில் குறிப்பாக மரபணு ஆய்வு எனும் பொழுது இந்த நூலில் நூலாசிரியர் 6 ஆய்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றார்.
1. டாக்டர் கிர்க் ஆய்வு - இவரது ஆய்வு The legend of Prince Vijaya: A study of Sinhalese origins.1976ம் ஆண்டு வெளிவந்தது. இவரது ஆய்வின் படி இன்றைய சிங்களவர்களின் மரபணுக்களை ஆராய்ந்தபோது சிங்களவருக்கும் தமிழருக்குமான தொடர்பு நெருக்கமாக இருப்பதும் ஏனைய பஞ்சாபியர் குஜராத்தியர் வங்காளியரோடு ஒப்பிடும்போது  நெருக்கம் குறைந்து இருப்பதும் வெளிப்பட்டது. சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையே உள்ள தூரமும் சிங்களவருக்கும் வங்காளியருக்கமான தூரமும் ஏறக்குறைய ஒரே அளவில் இருப்பதை இவரது ஆய்வுகள் சுட்டிக் காட்டின. ஆக வங்காளியர்கள் முன்னர் திராவிட மொழி சமூகத்தாராக இருந்து பின்னர் இந்தோ-ஆரிய மொழி தாக்குதலுக்கு ஆட்பட்டு அந்த மொழியை ஏற்றுக் கொண்டு இருத்தல் வேண்டும் என்கிறது இவரது ஆய்வு.
2. டாக்டர் சாஹா ஆய்வு - இவரது ஆய்வுகள் இலங்கை சிங்கள மக்கள் வங்காளியர்களைவிட இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழருடனும் மரபணு ரீதியில் நெருங்கி காணப்படுகின்றனர் என்பதைக் காட்டுவதாக அமைகின்றது. வங்காள மக்களோடு சிங்களவர்களுக்குத் தொடர்பு உண்டு எனும் பழங்கதை காலம் காலமாக இருந்து வந்தாலும் அதனை மெய்ப்பிக்கும் வகையிலான மரபணு நெருக்கம் இந்த இரண்டு இனக் குழுவினருக்கும் இல்லை என்று அவர் குறிப்பிடுகின்றார். ஆனால்,  வரலாற்றின் ஒரு காலகட்டம் வரை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும்  ஒத்த மரபணு (gene pool) கொண்டவர்களாக இருந்து பின்னர் பல்வேறு சமூக நிலை மாற்றங்களின் அடிப்படையில் சிங்களவர்களும் தமிழர்களும் பிரிந்தனர் என்று இவரது ஆய்வு குறிப்பிடுகிறது.
3. பாத்திஹா ஆய்வு (முதல் கட்டம்) - இந்த ஆய்வு மரபணு நெருக்கத்தை ஆராயும்போது சிங்களமக்கள் தமிழர்களுடன் மரபணு அடிப்படையில் மிகவும் நெருங்கி காணப்படுகின்றனர் என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றது.
4. பாத்திஹா ஆய்வு (இரண்டாம் கட்டம்) - சிங்களவர்களுக்கும் இந்தியாவின் மேற்குப் பகுதியில் வாழும் மக்களுக்கும் நேரடியான மரபணு உறவு ஏதும் இலலை என்று குறிப்பிடுவதோடு  மரபணு நெருக்கம் வங்காளியருடனும் தமிழருடனும் நெருக்கமாக இருக்கிறது என்றும் வெளிப்படுத்துகிறது.
5. டாக்டர் சத்ரியா ஆய்வு - genetic distance analysis என்ற ஆய்வு முறையின் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், தென்னிந்திய முஸ்லிம்கள் அனைவரும் நெருக்கமான உறவு கொண்டவர்கள் என்றும், குஜராத்தியர், பஞ்சாபியர், வடமேற்கு இந்திய பகுதியில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு குழுவாக காணப்படுகின்றனர் என்றும், வங்காளியர் தனி ஒரு குழுவாக காணப்படுகின்றனர்   என்றும், இலங்கை வேடர்கள் மரபணு ரீதியில் தனித்த ஒரு இனக்குழுவாக காணப்படுகின்றனர் என்றும்  ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தியது. சத்ரியா ஆய்வின் மிக முக்கிய பங்களிப்பாகக் கருதப்பட வேண்டியது சிங்கள மக்களின் இனக்குழு உருவாக்கத்தில் ஏறக்குறைய 70 விழுக்காடு மரபணு நெருக்கம் இந்தியத் தமிழரின் மரபு கொண்டதாக இருக்கிறது என்பதாகும்.
6. டாக்டர் டுமாஸ் கிவிசில்டு ஆய்வு -இந்த ஆய்வின் படி இலங்கை சிங்களவர் மரபணு அடையாளக் கூறுகள்,  இந்தியாவிற்கு ஆரியர்கள் வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வந்து சேர்ந்த தென்னாசிய திராவிட சமூகங்களுக்கு உரிய மரபணு அடையாளக் கூறுகள் M20, M124, M172 ஆகியவை மிக அதிகமாக, அதாவது ஏறக்குறைய 26.6% இருப்பதாக வெளிப்படுத்தியது.
மேற்குறிப்பிட்ட அனைத்து ஆய்வுகளையும் விரிவாக விளக்கி, சிங்களவர்கள் இதுகாறும் பொதுவாக குறிப்பிடப்பட்ட வகையில் பொ.ஆ முதலாம் நூற்றாண்டு வாக்கில் வட இந்தியாவிலிருந்து விஜயன் தலைமையில் பெரும் கூட்டமாக இலங்கைக்குப் புலம்பெயர்ந்தவர்கள் எனும் வாதம் தவறானது என்பதையும், சிங்களவர்கள் தென்னிந்தியாவில் தோற்றம் பெற்றவர்கள் தான் என்ற கருத்தையும் நூல் நிலைநாட்டுகிறது.
இத்தகைய ஆய்வுகள் இலங்கைத்தீவில் பெருவாரியாக வாழும் சிங்களவர்களும் தமிழர்களும் அடிப்படையில் ஒரே மரபணு கூறுகளைக் கொண்டவர்கள் என்ற கருத்தை வலுப்படுத்துவதாக அமைகின்றது.
தொடர்வோம்!
-சுபா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக