வெள்ளி, 21 மே, 2021

அழகிரியுடன் பேசிய ஸ்டாலின்: அமைச்சர்களை டென்ஷனாக்கிய மதுரை ‘சம்பவம்’!

அழகிரியுடன் பேசிய ஸ்டாலின்:  அமைச்சர்களை டென்ஷனாக்கிய  மதுரை ‘சம்பவம்’!

 minnamballam :தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் நேற்றிரவு (மே 20) மதுரைக்கு வந்தார். கொரோன தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று சுற்றுப் பயணத்தைத் துவக்கிய முதல்வர் ஸ்டாலின் சேலம், திருப்பூர், கோவையில் நிகழ்வுகளை முடித்துவிட்டு நேற்றிரவு மதுரைக்கு வந்தார்.

மதுரைக்கு வந்த முதல்வரை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பெரியகருப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து முதல்வர் காரில் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். நேற்றிரவு அங்கேதான் தங்கினார்.

முதல்வராக பொறுப்பேற்ற பின் மதுரைக்கு செல்வதால் ஸ்டாலின் பயணத்தை ஒட்டி முக்கிய அரசியல் சம்பவம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு தென் மாவட்ட திமுகவினர் மத்தியிலும், அமைச்சர்கள் மத்தியிலும் பலமாக எழுந்தது. தனது அண்ணன் மு.க. அழகிரியை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்புதான் அது.

ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே மு.க. அழகிரி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தம்பி நல்லாட்சி தருவார் என்றும் கூறினார். மேலும் மே 7 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்ற விழாவில் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி கலந்துகொண்டார். அவரை உதயநிதி ஸ்டாலின் கட்டித் தழுவி வரவேற்ற படங்கள் அப்போது வைரலானது. இந்தப் பின்னணியில் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையிலான மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக திமுகவினர் நம்பினார்கள்.

இதன் அடிப்படையில்தான் மதுரைக்கு முதன் முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும்போது தனது அண்ணன் அழகிரியை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு நேற்று முதலே எகிறியது. அழகிரி ஆதரவாளர்களும் அப்படி ஒரு சந்திப்பு நடக்குமா என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர்.

அதேநேரம் மதுரை மூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்கள் சற்று டென்ஷனாகத்தான் இருந்தார்கள். ஏனென்றால் அழகிரி நீக்கப்பட்ட பிறகான கடந்த ஆறேழு வருடங்களில் அவர்கள் அழகிரி எதிர்ப்பு அரசியலும் நடத்தியிருக்கிறார்கள். அதனால், ‘முதல்வர் தன் அண்ணன் அழகிரியை சந்திக்கச் செல்வாரோ அப்போது நம்மையும் அழைத்துச் சென்றுவிடுவாரோ’என்ற டென்ஷன் அவர்களுக்கு இருந்தது.

ஆனால் நேற்றிரவு முதல் மதுரையில் தங்கியிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அழகிரி செல்லவில்லை. முதல்வரும் அழகிரி வீட்டுக்கு செல்லவில்லை. இன்று காலை 10 மணிக்கு மதுரை கலெக்டர் அலுவலகம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கே தூத்துக்குடி எம்பி கனிமொழி முன்னிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டோர் குடும்பத்துக்கான அரசு வேலைக்கான ஆணைகளை வழங்கினார்.

பிறகு மதுரை மாவட்டத்துக்கான கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்த ஆய்வுக் கூட்டம் முடிந்த பிறகு ஏற்கனவே திட்டமிட்டபடி மதுரை அருகே உள்ள தோப்பூர் சென்று 500 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அதன் பின் 12.30 மணியளவில் அங்கிருந்தே திருச்சிக்குப் புறப்பட்டுவிட்டார் முதல்வர்.

இதற்கிடையே மதுரையில் தங்கிய முதல்வர் ஸ்டாலின் தனது அண்ணன் அழகிரியோடு தொலைபேசியில் பேசியதாக அழகிரி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“இன்று காலை முதல்வர் ஸ்டாலினும், அழகிரி அண்ணனும் தொலைபேசியில் பேசிக் கொண்டார்கள். அருகில் யாருமில்லாத சூழலில் தனியாகத்தான் இருவரும் பேசியிருக்கிறார்கள். இன்றைக்கு நாள் நன்றாக இல்லை என்பதால் ஸ்டாலினிடம் அழகிரி இதை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதனால்தான் அழகிரி வீட்டுக்கு ஸ்டாலின் வரவில்லை. ஜூன் 3 ஆம் தேதி தலைவரின் பிறந்தநாளன்று இருவரும் ஒன்றாக தலைவருக்கு மரியாதை செலுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதை அண்ணனே எங்களிடம் சந்தோஷமாகச் சொன்னார்” என்கிறார்கள் அழகிரிக்கு நெருக்கமான ஆதரவாளர்கள்.

ஜூன் 3 ஆம் தேதிக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அழகிரி-ஸ்டாலின் இணைப்புக் காட்சிக்காக காத்திருக்கிறார்கள் திமுகவினர்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக