செவ்வாய், 11 மே, 2021

அண்ணா பல்கலைக் கழகத்தில் மீண்டும் தேர்வு'' - அமைச்சர் பொன்முடி தகவல்!!

nakkeeran :கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பி.இ அரியர் தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். அதேபோல், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்றனர். பி.இ அரியர் தேர்வு முறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையில் ஆலோசிக்கப்பட்டது.

 இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ''மாணவர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் ஆன்லைன் தேர்வு எழுதலாம். அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம். அண்ணா பல்கலைக் கழகத்தில் நவம்பர், டிசம்பரில் எழுதிய பருவத் தேர்வில் 25 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். சுமார் 4.25 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் சுமார் 1.10 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆன்லைனில் 3 மணி நேரம் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். ஆன்லைன் தேர்வில் சுமார் 4 லட்சம் பொறியியல் மாணவர்கள் பயன் பெறுவர். ஆன்லைன் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மீண்டும் தேர்வு எழுதினாலும் எதில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அது எடுத்துக் கொள்ளப்படும். தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மதிப்பெண் குறைவு என்று கருதினால் மீண்டும் தேர்வு எழுதலாம்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக