செவ்வாய், 11 மே, 2021

புதுசேரியில் ரங்கசாமி அரசுக்கு எந்நேரமும் ஆபத்து ! பாஜகவின் பலம் 9 ஆக உயர்வு

 Mathivanan Maran  - /tamil.oneindia.com :  புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை மத்திய அரசு நியமித்தது மூலம் பாஜகவின் பலம் 9 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து காத்திருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
30 இடங்களைக் கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான பாஜக 6 இடங்களிலும் வென்றது.
திமுக 6 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இந்த முறை புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 6 சுயேட்சைகள் வெற்றி பெற்றனர்.
இதனடிப்படையில் புதுச்சேரி சட்டசபையில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக அணிக்கு 16 எம்.எல்.ஏக்களும், திமுக அணிக்கு 8 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.
அத்துடன் 6 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இருப்பதால் புதுவை அரசியலில் எதுவும் எந்த நேரத்திலும் நிகழலாம் என்கிற நிலைமைதான்.

பாஜக அடாவடி இப்படியான அரசியல் நிலையற்ற தன்மைக்கு மத்தியில்தான் புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். அதேநேரத்தில் 6 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் பாஜக, துணை முதல்வர் பதவி மற்றும் 2 அமைச்சர்கள் பதவி எனவும் தன்னிச்சையாகவே முடிவு செய்து கொண்டது. இது என்.ஆர். காங்கிரஸை அதிருப்தி அடைய செய்தது. இதுதான் ரங்கசாமி அரசுக்கான பாஜகவின் முதல் நெருக்கடி.



ரங்கசாமிக்கு கொரோனா ரங்கசாமிக்கு கொரோனா இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமிக்கு. கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ரங்கசாமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரங்கசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாஜக அடுத்த அஸ்திரத்தை ஏவி இருக்கிறது.

3 பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்துள்ளது மத்திய அரசு. இந்த 3 நியமன எம்.எல்.ஏக்களுமே பாஜகவை சேர்ந்தவர்கள். தங்களுக்கு ஒரு நியமன எம்.எல்.ஏ. தேவை என கூட்டணி கட்சியான அதிமுக விடுத்த வேண்டுகோளை பாஜக நிராகரித்துவிட்டது. தற்போது புதுச்சேரி சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சியின் பலம் 9 ஆக அதிகரித்துள்ளது

வாக்களிக்கும் உரிமை யூனியன் பிரதேசங்களில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு வாக்களிக்க உரிமை உண்டா? என்கிற விவாதம் நீண்டகாலம் நடந்து வருகிறது. 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உரிமை உண்டு என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில்தான் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நியமன எம்.எல்.ஏக்களையும் பங்கேற்க வைத்து ஆட்சியை கவிழ்த்தது என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக- அதிமுக அணி. இப்போது அதே நியமன எம்.எல்.ஏக்கள்தான் ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி தரும் ஆயுதமாகி உள்ளனர்.

9 எம்.எல்.ஏக்களுடன் பாஜக புதுச்சேரி சட்டசபையில் என்.ஆர். காங்கிரஸுக்கு 10; பாஜகவுக்கு 9 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதன் மூலம் என்.ஆர். காங்கிரஸுக்கு ஏறத்தாழ சமமான எண்ணிக்கையுடன் புதுச்சேரி சட்டசபையில் பாஜக உள்ளது. 6 சுயேட்சை எம்.எல்.ஏக்களைப் பொறுத்தவரை திரிசங்கு நிலைமைதான். எந்த நேரத்திலும் எந்த கட்சி பக்கமும் இணையலாம். தற்போதைய நிலையில் பாஜகவின் 9 எம்.எல்.ஏக்கள் பலம் என்பது ரங்கசாமி அரசின் தலைக்கு மேலே தொங்கும் கத்தியாகத்தான் இருக்கும்.

ரங்கசாமி அரசுக்கு ஆபத்து பாஜக நினைத்தால் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு அந்த கட்சியை காணாமல் போக செய்து ஆட்சியை கைப்பற்றிவிட முடியும் என்கிற நிலை உள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜக இந்த வியூகத்தைத்தான் கடைபிடித்து வருகிறது. புதுச்சேரியிலும் இந்த சித்து விளையாட்டை பாஜக எந்த நேரத்திலும் அரங்கேற்றும் என்பதுதான் இப்போதுள்ள நிலைமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக