வியாழன், 6 மே, 2021

மு க அழகிரி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

 Hemavandhana  - tamil.oneindia.com : சென்னை: நாளை திமுக தலைவர் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், ஒரு சந்தோஷமான செய்தி கசிந்து வருகிறது..
அது உண்மையா பொய்யா என்று உறுதியாக தெரியாவிட்டாலும், பரவி வரும் தகவல் திமுக தொண்டர்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..!
இந்த முறை பாஜகவுக்கு முதல் குறியே திமுகவாகத்தான் இருந்தது..
அந்த வகையில், பலவித வியூகங்களை அமைத்து திமுகவுக்கு நெருக்கடியும், தர்மசங்கடத்தையும் தர முயன்றது.. அதில் ஒரு அம்புதான் முக. அழகிரி..!
அழகிரிக்கு ஸ்டாலின் மீது ஏற்கனவே இருக்கும் அதிருப்தியை வைத்து, பாஜக நிறைய கணக்குகளை போட்டது..
தனிப்பட்ட முறையில் அழகிரி மீது பாஜகவுக்கு மரியாதை இருந்தாலும், தாமரையை மலரவைக்க, அழகிரியை பயன்படுத்த நினைத்ததையும் மறுக்க முடியாது..
அதற்காக எம்பி பதவி முதல் பல்வேறு சலுகைகளை தர முன்வந்தும் அதை அழகிரி ஏற்கவில்லை.

குறைந்த பட்சம் தேர்தல் சமயத்திலாவது, திமுகவுக்கு எதிராக இல்லாவிட்டாலும், ஸ்டாலினுக்கு எதிராகவாவது பிரச்சாரத்தை கையில் எடுப்பார் என்று முணுமுணுக்கப்பட்டது..


அதுவும் தவிடுபொடியாகிவிட்டது.. தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து, அதன்மூலம் திமுகவில் தனக்கு நெருக்கமான மற்றும் சீனியர்களை தன்பக்கம் இழுப்பார் என்று பேசப்பட்டது..
அதுவும் சுக்குநூறாகிவிட்டது. கருணாநிதியின் மகன் திமுகவுக்கு ஒருபோதும் துரோகம் செய்யக்கூடியவர் அல்ல என்பதை கடைசி வரை நிரூபித்து காட்டி உள்ளார் அழகிரி.

இப்படிப்பட்ட சூழலில், 2 விஷயங்கள் அழகிரி குறித்து வெளிவந்துள்ளது..
முதல்வராக பதவி ஏற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மு.க. அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.. "முதலமைச்சர் ஆகவுள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன், எனது தம்பியான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார்" என்று கூறி வாழ்த்து கூறியிருக்கிறார் அழகிரி.

அதுமட்டுமல்ல, அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவு போட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது...
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் உள்ள அழகிரி வீட்டுக்கு பாதுகாப்பு தர வேண்டும், அவருக்கு பிஎஸ்ஓ எனப்படும் போலீஸ் செக்யூரிட்டி ஆபிசர் ஒருவரை போட வேண்டும்,
அதேபோல அவர் கேட்கும் அதிகாரியை போட வேண்டும் என்று மூத்த அதிகாரி ஒருவருக்கு ஸ்டாலினிடம் இருந்து வாய்மொழி உத்தரவு ஒன்று பறந்ததாம்.
இந்த தகவல் உடனடியாக மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்காவுக்கு சென்றதுமே, அவர் அழகிரியைத் தொடர்புகொண்டு, பாதுகாப்பு விஷயத்தை பற்றி பேசியிருக்கிறார்...
ஆனால், அதற்கு அழகிரியோ, தம்பி பதவியேற்கட்டும், அப்பறம் பார்த்துக்கலாம் என்றாராம்..

 பிரிந்தவர்கள் கூடினால் பேசவும் வேண்டுமோ என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இவர்கள் இருவரும் பேசுவதை பார்க்க உடன்பிறப்புகள் படுஆர்வமாக இருக்கிறார்கள்.. அத்துடன், திராவிட கட்சிகளுக்கு எதிராக யார் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் சரி, கருணாநிதியின் பிள்ளைகள் திமுகவுக்கு கடுகளவும் துரோகம் செய்துவிட மாட்டார்கள் என்பதுதான் மறுபடியும் நிரூபணமாகி உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக