வெள்ளி, 7 மே, 2021

ஸ்டாலின் அமைச்சரவை: சீனியர்கள் மத்தியில் சலசலப்பு?

minnambalam : தமிழக முதல்வராக திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை (மே 7) அதிகாரபூர்வமாக சென்னை ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார். பிரமாண்டமாக நடக்க வேண்டிய நிகழ்வு, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எளிமையாக நடக்கிறது. கலைஞர் இல்லாத நிலையில் பத்து வருடங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியைப் பிடித்து பதவியேற்கிற இந்த நிலையில், நேற்று ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அமைச்சரவைப் பட்டியல் கட்சியின் சீனியர்களிடையே பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் சலசலப்புக்குக் காரணம், கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் துறை. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படும் செந்தில் பாலாஜி மின்சாரம் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்று கசண்டு (மொலாசஸ்) துறைகளை நிர்வகிப்பார் என்று பட்டியல் தெரிவிக்கிறது.

கடந்த ஆட்சியில் தங்கமணி வகித்து வந்த இந்தத்துறை, அதிகார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிக வலிமையான முதன்முறைத் துறைகளில் ஒன்று.

செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்து அமமுக சென்று, அமமுகவில் இருந்தும் விலகி, கடந்த 2018 டிசம்பர் 14ஆம் தேதி திமுகவில் சேர்ந்தார். அவர் திமுகவில் சேர்ந்து இப்போதுதான் இரண்டரை வருடங்கள் ஆகின்றன. அவருக்கு இவ்வளவு வலிமையான துறையா என்பதுதான் திமுக சீனியர்களுக்கு ஷாக்.

அடுத்து ராஜ கண்ணப்பன். ஜெயலலிதாவின் 1991அமைச்சரவையில் முப்பெருந்துறை எனப்படும் முக்கிய துறைகளை வைத்திருந்தவர். பின் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தார். 2006இல் திமுக அமைச்சரவையில் இடம் இல்லை என்றதும் மீண்டும் அதிமுகவுக்குப் போனவர். பின் மீண்டும் திமுகவுக்கு வந்து இப்போது வென்று அமைச்சராகிவிட்டார். திமுகவுக்கும் அதிமுகவுக்குமான போக்குவரத்தையே அரசியலாக வைத்திருந்த ராஜ கண்ணப்பனுக்கு ஸ்டாலின் அமைச்சரவையில் மிக முக்கிய துறையான போக்குவரத்துத்துறை கொடுக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் முன்னதாகவே அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவரான ஈரோடு முத்துசாமிக்கு வீட்டு வசதித்துறை, சி.எம்.டி.ஏ. என்று வலிமையான துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது,

ஆனால் இதே நேரம் நல்லதோ, கெட்டதோ திமுகவிலேயே ஊறி, திமுகவிலேயே திளைத்துக் கொண்டிருக்கிற சீனியர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் ஆங்காங்கே விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஐ.பெரியசாமி தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார். நடந்து முடிந்த தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். தனக்கு எதிராக போட்டியிட்ட எல்லா வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்யும் அளவுக்கு வெற்றியைக் குவித்தவர். திமுகவின் துணைப் பொதுச் செயலாளர், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவருக்கு புதிய அமைச்சரவையில் கூட்டுறவுத் துறை கொடுக்கப்பட்டிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் அர.சக்கரபாணி சட்டமன்றத்தில் கொறாடாவாக இருந்தவர்.

96 தேர்தலில் இருந்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறவர். இந்த முறை அமைச்சரவையில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அவருக்கு உணவுத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள துறைகளின் மீது ஐ.பெரியசாமியும், அர.சக்கரபாணியும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். எந்த அளவுக்கு என்றால் அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்ற போதும் இந்த இருவரும் உடனடியாக ஸ்டாலினைப் பார்க்க செல்லவில்லை.

ஐ.பெரியசாமிக்கு நேற்று முன்தினம் வரை, ‘மின்சாரத் துறை’ என்றுதான் தகவல் கிடைத்திருந்தது. ஆனால், தனக்கு கூட்டுறவும் மின்சாரத்துறை செந்தில் பாலாஜிக்கு என்றும் அறிவிப்பு வரவும்தான் அவர் அதிர்ச்சியாகிவிட்டார். இடையில் அதிகார பீடத்தில் பேச வேண்டியவர்களிடம் பேசி செந்தில் பாலாஜி தனது துறையை மாற்றிக்கொண்டார் என்றும் சீனியர்களிடையே தகவல் பரிமாறப்பட்டு வருகிறது.

இதேபோல தலைமைக்கழக முதன்மை செயலாளரான கே.என். நேருவுக்கு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மேம்பாடு, குடிநீர் வழங்கல் துறை கொடுக்கப்பட்டிருக்கிறது. நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டம் திமுகவில் வெற்றியை அப்படியே அள்ளியதற்குக் காரணமாக இருந்தவர். அதிமுகவின் ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்கூட திருச்சி மாவட்டத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தவர்.

நேருவுக்கு உள்ளாட்சித்துறை ஒதுக்கப்படுவதாக சில நாட்களாக அவருக்கே தகவல்கள் சென்று கொண்டிருந்தன. அதனால் உத்வேகமாக இருந்தார். ஆனால், அமைச்சரவைப் பட்டியலில் உள்ளாட்சியையே இரண்டாகப் பிரித்து நகராட்சி நிர்வாகம், நகர குடிநீர் வழங்கல் துறை என்ற துறை கொடுக்கப்பட்டது நேருவின் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

அமைச்சரவைப் பட்டியல் தயாரிக்கப்படும்போதே சீனியர்கள் தங்களுக்கு என்ன துறை கேட்டுத் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். அப்போது, அவரவருக்கும் முக்கியமான முதன்மையான துறை என்றுதான் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அமைச்சரவைப் பட்டியல் வெளியான பிறகுதான் தங்களுக்கே தவறான தகவல் தரப்பட்டிருப்பதாக அவர்கள் புலம்புகிறார்கள்.

ஆனால், துரைமுருகன் மட்டுமே ஸ்டாலினிடம், ‘நான் கலைஞர் அமைச்சரவையிலேயே பொதுப்பணித்துறை அமைச்சரா இருந்தவன். எனக்கு சட்டம் சிறைத்துறை கொடுக்கப் போறதா வேலூர்லயே பேசிக்கிறாங்க. அது எனக்கு வேணாம். என் சீனியாரிட்டிக்கு ஏத்த இலாகாவை கொடுங்க’ என்று நேரடியாகவே கேட்டிருக்கிறார். அதனால்தான், அவருக்கு சிறுபாசனம், கனிமம், சுரங்கத்துறை என முக்கியத் துறைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

’ஒருவேளை துரைமுருகன் போல நாமும் நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்தால்தான் முக்கியத் துறை கிடைத்திருக்குமோ என்னவோ’ என்று சீனியர்கள் மத்தியில் பேச்சாக இருக்கிறது.

இப்படிப்பட்ட துறை ரீதியான ஒரு மன அழுத்தத்தில்தான் இன்று (மே 7) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவையில் சீனியர்கள் பதவியேற்கிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக