திங்கள், 17 மே, 2021

கல்வி தந்தை’பூண்டி துளசி வாண்டையார் காலமானார்

toptamilnews.com : தஞ்சையின் கல்வி தந்தை என்று அழைக்கப்படும் முன்னாள் எம்.பி. பூண்டி துளசி வாண்டையார் இன்று அதிகாலை காலமானார்.கிருஷ்ணசாமி துளசி வாண்டையார் 1929ல் பிறந்தவர். தஞ்சை மாவட்டம் பூண்டியில் ஏவிவிஎம் புஷ்பம் கல்லூரி்யின் நிர்வாக குழு தலைவரான இவர், 1991ல் இருந்து 1996 வரையிலான காலகட்டத்தில் தஞ்சாவூர் மக்களவை தொகுதியின் உறுப்பினராக இருந்தார்.
வயது மூப்பின் காரணமாக தனது 93ஆவது வயதில் சென்னையில் இன்று அதிகாலையில் காலமானார். ஐயா என்று மரியாதையுடன் அழைத்து வந்த பூண்டி பகுதி மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமல்லாமல் திருவாரூர், நாகப்பட்டினம் என டெல்டா மாவட்டங்கள் எங்கிலும் பூண்டி வாண்டையார் குடும்பத்திற்கென தனி செல்வாக்கு இருக்கிறது.
கல்வி வள்ளலாகவும், காந்தியின் தீவிர சீடராகவும், திகழ்ந்தவர் பூண்டி துளசி அய்யா வாண்டையார். அவர் மகன் வழிப் பேரன் ராமநாதன் தான் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மருமகன்.

மகாத்மா காந்தியின் சீடராக வாழ்ந்து வந்த பூண்டி துளசி அய்யா வாண்டையார் காங்கிரஸ் கட்சி சார்பில் 1991-1996-ம் காலகட்டத்தில் தஞ்சை மக்களவை தொகுதி உறுப்பினராக பதவி வகித்தார். இவர் எம்.பி.யாக இருந்த போது நாடாளுமன்ற உறுப்பினருக்கு மத்திய அரசு வழங்கிய எந்த சலுகையையும் ஏற்கவில்லை. விமான டிக்கெட், ரயில் டிக்கெட், காருக்கு டீசல் என ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கிடைக்கும் அரசின் அனைத்து சலுகைகளையும் வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டு, தனது சொந்த நிதியின் மூலம் டெல்லி சென்று வந்தார்.

பூண்டியில் ஏ.வி.வி.எம்.ஸ்ரீ புஷ்பம் கலை அறிவியல் கல்லூரி நடத்தி வரும் வாண்டையார் குடும்பம் வருடத்திற்கு குறைந்தது ஆயிரம் மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி அளித்து வருகிறது குறிப்பிட்டத்தக்கது. 60 ஆண்டுகளை கடந்த பழம்பெருமை மிக்க ஸ்ரீ புஷ்பம் கலை அறிவியல் கல்லூரியில், இதுவரை ஒரு ரூபாய் கூட எந்த மாணவர்களிடமும் நன்கொடை பெற்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விவசாய கூலிகள், ஏழை எளியோர் வீட்டு பிள்ளைகள் பலர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் பூண்டி துளசி வாண்டையாரின் அன்பும் கருணையும்தான் காரணம் என்று நெகிழ்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாளான வெள்ளிக்கிழமை அன்று வாரம் தோறும் பிற்பகலுக்கு மேல் மவுன விரதம் கடைபிடித்து வந்தவர் பூண்டி துளசி வாண்டையார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக