சனி, 1 மே, 2021

கே வி ஆனந்த் என்றொரு கேமராக்காதலன்

May be an image of 1 person, standing, tree and outdoors
LR Jagadheesan : கே வி ஆனந்த் என்றொரு கேமராக்காதலன் ! >முகத்தில் எப்போதும் முகிழ்க்கும் சிரிப்பு; அதில் நிரந்தரமாய் ஒளிந்திருக்கும் குரும்பு; தோளில் தொங்கும் கேமெரா பை; கனமான சரீரம். ஆனால் அவனது சுறுசுறுப்புக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. அப்படித்தான் கே வி ஆனந்த் எனக்கு அறிமுகமானான். அடையாரில் இருந்த ASIDE என்கிற சென்னை நகர சஞ்சிகையின் அலுவலகத்தில். பார்த்த உடன் பிடித்துப்போகச்செய்யும் இயல்பு அவனுக்கு. எல்லோரோடும் நட்போடும் இயல்பாகவும் எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகக்கூடியவன். அவனோடு ஒரே ஒருமுறை பழக நேர்ந்தாலும் உங்களுக்கு அவனை கண்டிப்பாக பிடித்துப்போகும் அளவுக்கு கலகலப்பானவன். அவன் இருக்கும் இடத்தில் சிரிப்பு இருந்தே ஆகவேண்டும். பெரும்பாலும் அந்த சிரிப்பின் உற்பத்தியாளனே அவனாகத்தான் இருப்பான். ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அவனுக்கு ஈடுகொடுப்பது கடினம். அவ்வளவுக்கு கடினமான உழைப்பாளி. வாசிப்பும் தேடலும் ஒருங்கே கொண்டவன்.
சிறுவயதில் இருந்தே புகைப்படக்கலைஞனாக வேண்டும் என்பது அவனது ஆசை. அவனது உறவினர் ஒருவர் புகைப்படம் எடுப்பாராம். அவருக்கு சுற்றத்தாரிடமும் தன் குடும்பத்திலும் நிலவிய பெரும் மரியாதை அவனுக்கு புகைப்படக்கலை மீது ஒருவித கவர்ச்சியை உருவாக்கியதாக சொல்வான்.
வங்கி அதிகாரியாக இருந்த அவனது அப்பாவிடம் அவன் தனது பதின் பருவத்தில் விரும்பிக்கேட்ட பரிசுப்பொருள் கேமெரா. அவரும் தட்டாமல் அதை வாங்கித்தர தமிழ்நாட்டின் பல்துறை ஏகலைவர்களாக உருவான எங்கள் தலைமுறை ஆட்களில் (1980களின் இறுதி 1990களின் துவக்கம்) ஒருவன் கே வி ஆனந்த். முதலில் பத்திரிகை புகைப்படத்துறையிலும் அதன் நீட்சியாக காட்சி ஊடகமான சினிமாத்துறையிலும் உச்சங்களைத்தொட்டவன்.
பத்திரிகைகளுக்கு புகைப்படம் எடுப்பதில் அவன் காட்டிய அக்கறை அவனது தனித்துவத்தை தமிழ்நாட்டின் ஊடகத்துறையில் அப்போதே கவனிக்க வைத்தது. குறிப்பாக அட்டைப்படத்தை எடுப்பதில் அவன் மிகப்பெரிய புரட்சியே செய்தான்.
Aside என்கிற பத்திரிக்கைதான் இந்தியாவின் முதலாவது நகர சஞ்சிகை (City magazine). பேராசிரியரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான Abraham Eralyயும் அவரது மனைவியான சீதாவும் இணைந்து துவக்கிய பத்திரிக்கை. அதன் அடையாறு அலுவலகத்திற்கு அருகில் தான் ஆனந்தின் வீடு. Aside பத்திரிக்கையின் நிறுவனரும் முதன்மை ஆசிரியருமான Abraham Eraly மேற்குலக சஞ்சிகைகளைப்போல புகைப்படங்களில் செய்நேர்த்தியை எதிர்பார்ப்பவர். அவரை யாராலும் எளிதில் திருப்திப்படுத்த முடியாது. அவ்வளவுக்கு perfectionist. ஆனால் சிறுவயதான ஆனந்தின் புகைப்படங்களைக்கண்டு அவர் மிகவும் பிரமித்துப்பார்த்திருக்கிறேன். ஆனானப்பட்ட புகைப்பட ஜாம்பவான்களின் படங்களைக்கூட நிராகரித்தவர் ஆனந்தின் படங்களை அட்டைப்படங்களாக பலமுறை தேர்வு செய்தார்.
காரணம் ஆனந்தின் தனித்திறமை என்பது அவனது framing sense. ஒரு சட்டகத்துக்குள் காட்சியை அற்புதமாக காட்சிப்படுத்துவதோடு அதற்குள் மொத்த கதையையும் சேர்த்து சொல்லிவிடும் திறமை அவனுக்கிருந்தது. ஒரு cover story ஐந்து அல்லது ஆறுபக்கம் விவரிக்கும் செய்தியை அவனது ஒற்றை அட்டைப்படம் அநாயாசமாக சொல்லிவிடும். அது தான் ஆனந்தின் தனித்துவம். அதற்கு எத்தனையோ உதாரணங்கள்.
தமிழ்நாட்டின் ஜாதிய தீண்டாமை குறித்த அவனது அட்டைப்படம் 10 பக்க கட்டுரையைவிட வலிமையாக இருந்தது. சென்னை தாதாக்கள் பற்றிய அட்டைப்படத்தில் அப்போது தாதாக்கள் பயன்படுத்திய அத்தனை ஆயுதங்களையும் ஒருசேரக்காட்டி அசத்தியிருந்தான்.
பெண்கள் மீதான குடும்ப வன்முறைக்கு அட்டைப்படத்துக்கு பொருத்தமான அட்டைப்படம் அமையவில்லை. Aside அலுவலகத்தில் எல்லோரும் மண்டையை உடைத்துக்கொண்டிருந்தார்கள். அலுவலகத்தில் இருந்த ஒரு பெண் செய்தியாளரை வீட்டுக்கு அழைத்துப்போனான். நெற்றியில் குங்குமத்தை தெளித்தான். தலையை கலைத்துப்போட்டான். கேமெராவை பார்க்கச்சொன்னான். குடும்பவன்முறை அட்டைப்படம் தத்ரூபமாக வந்துவிட்டது. ஆண்மைக்குறைபாடு குறித்த அட்டைப்படம் முதல் கூவாகம் திருநங்கை கூடுகை வரை எத்தனையோ அட்டைப்படங்கள் அவனது தனித்துவமான காட்சியாக்கத்துக்கு சாட்சியங்கள்.
இந்த தனித்துவமே அவனது அட்டைப்படங்கள் சுபா என்கிற எழுத்தாளர்களின் சூப்பர் பாக்கெட் நாவல்களின் அட்டைகளை நிரந்தரமாக அலங்கரிக்கச்செய்தது. கல்கி, இல்லஸ்றேட்டட் வீக்லி, இந்தியாடுடே என அவனது ஊடக புகைப்பட பயணம் வெற்றிகரமாக தொடர்ந்தது.
ஒருகட்டத்தில் செய்தி ஊடகத்தில் முழுநேரமாக சேர விரும்பினான். அது கைகூடமல் போக பி சி ஶ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து திரைத்துறையில் நுழைந்தான். இன்று பலரும் அவனை பி சி ஶ்ரீராமின் சீடன் என்கிறார்கள். உண்மையில் அது தவறு. இருவரின் காட்சிப்படுத்தும் பாணிகளுமே வெவ்வேறானவை. ஶ்ரீராமிடம் இருந்து திரைத்துறையின் நெளிவுசுளிவுகளையும் networkingஐயும் தான் ஆனந்த் கற்றுக்கொண்டானே தவிர கேமெரா தொழில்நுட்பத்தில் அவன் ஶ்ரீராமிடம் சேரும் முன்பே நன்கு வித்தை தெரிந்தவன். மிகவும் நுணுக்கமான பார்வை கொண்டவன். கேமெரா தொழில்நுட்பத்தில் அவன் ஶ்ரீராமைவிட நூறடி முன்னால் இருந்தவன். சினிமாவில் அவனது தனித்துவமான காட்சிப்படுத்தும் முறைக்கும் அவன் புகுத்திய, பயன்படுத்திய தொழில்நுட்ப புதுமைகளுக்கும் ஶ்ரீராமுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஆனந்த் மட்டுமல்ல; அவனது சமகாலத்து சகாக்களும் புகைப்படக்கலைஞர்களுமான கோம்பை அன்வர், சாவித்திரிகண்ணன், wideangle ரவிஷங்கர், சிவபெருமாள், கோபிநாத் என எல்லோருமே ஒவ்வொருவகையில் தனித்துவம் மிக்கவர்களாக உருவானவர்கள். உண்மையில் இவர்கள் எல்லோருமே தம்மைத்தாமே உருவாக்கிக்கொண்டவர்கள். ஜாதிய networking எதுவும் இல்லாமல் ஊடகத்துறைக்குள் நுழைந்து நின்று நிலைபிடித்து சாதித்துக்காட்டியவர்கள். அவரவர் அளவில் சுயம்புகள். அவர்கள் சாதனையின் ஆழ அகலங்கள் இந்த தலைமுறைக்குத் முழுமையாய் புரிபட வாய்ப்பில்லை.
அதில் கே வி ஆனந்த் அதிகம் அறியப்பட்டவன். பிரபலமானவன். காரணம் சினிமா. ஆனந்துக்கான அஞ்சலிகளில் அவன் இயக்குநராகவே பெரிதும் பேசப்படுவது கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. அவனது மேதமை என்பதும் தனித்துவம் என்பதும் கேமெராமேனாக அவன் திரையில் தீட்டிக்காட்டிய கவித்துவமான செல்குலாய்ட் காட்சிகளே தவிர அவன் “இயக்கிய” படங்கள் அல்ல. அவன் கேமெராமேனாக பணிபுரிந்த படங்களை திரையரங்கில் அகலத்திரையில் பார்த்தவர்களுக்கு மட்டுமே கேவி ஆனந்த் என்கிற கேமெராமேனின் கவித்துவமும் மேதமையும் தனித்துவமும் புரிபடும்.
கே வி ஆனந்தின் இயக்குநர் அவதாரம் என்பது அவன் செய்த வெற்றிகரமான வர்த்தகம். பிரம்மாண்டமான வர்த்தகமும் கூட. ஆனால் மேலே பட்டியலிட்ட புகைப்பட நிபுணர்களுக்கும் எனக்கும் நல்ல நண்பனாக இருந்த ஆனந்த் அடிப்படையில் கேமெராவின் காதலன். அதுவே அவனது முதல் காதல்; முழுமையான காதலும் கூட. அவனது உண்மையான அடையாளமும் அதுவே. கே வி ஆனந்த் என்கிற கலைஞன் அடிப்படையில் காட்சி ஊடகத்தவன்.
அப்படியானால் அவன் இயக்கிய படங்கள்? அதில் இருந்தது பெரும்பாலும் அவனது ஆஸ்தான எழுத்தாளர்களான சுபா என்று அறியப்படும் இரண்டு எழுத்தாளர்களின் சூப்பர் பாக்கெட் நாவல்களின் திரைவடிவங்கள். அதில் ஆனந்த் என்கிற கலைஞனின் பங்கோ தனித்துவமோ மேதைமையோ பெரிதாய் ஒன்றும் இல்லை. திறமையான ஒருங்கிணைப்பைத்தவிர.
இதை வேறொரு உவமை மூலமும் விளக்கலாம். இந்தியாவில் வெற்றிபெற்ற குடும்ப வாழ்க்கையை அளக்க நல்ல வருமானம்; சொந்தவீடு; சொல்பேச்சுகேட்கும் நன்கு சம்பாதிக்கும் பிள்ளைகள் என எதையெதையோ கொண்டு அளப்பார்கள். ஆனால் அந்த கணவன் மனைவிக்கிடையே காதல் இருந்ததா? இன்னும் மிச்சம் இருக்கிறதா என்று பரிசீலிக்கமாட்டார்கள்.
பலரும் கே வி ஆனந்த் என்கிற “இயக்குநரை” கொண்டாடுகிறார்கள் — “வெற்றிகரமான இந்திய குடும்பத்தை” கொண்டாடுவதைப்போல. ஆனால் நண்பர்களின் கண்ணீர் கே வி ஆனந்த் என்கிற கேமெரா காதலனுக்கானது.
பிகு: அவன் இயக்கிய திரைப்படங்கள் பேசிய அரசியல் என்பது பெரும்பாலும் சுபா என்கிற இரண்டு எழுத்தாளர்களின் ஆன்மீக அரசியல் தான். இயற்கை விவசாயம் முதல் அர்னாப் கோஸ்வாமி வரை அவன் திரையில் உயர்த்திப்பிடித்த ஆதர்ஷங்களின் மூலம் என்பது “சுபா” என்கிற எழுத்தாளர்களின் சிந்தனை மரபின் நீட்சி. கொடுங்காலம் என்பது ஆனந்தின் அகால அநியாய மரணம் அர்னாப் கோஸ்வாமிகள் கொண்டாடும் மோடிகளின் ஆட்சியில் நடந்திருப்பது. ஆனந்தின் இந்த அகால மரணம் எதனால் ஏற்பட்டது என்பதில் சந்தேகம் இருப்பதாக சொல்கிறார் சாவித்திரி கண்ணன். கொரோனா தொற்றா? மாரடைப்பா? அல்லது வேறு காரணமா? தெரியவில்லை என்பதும் அதை தெரிந்துகொள்ள அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் முயலவில்லை என்பதும் கண்ணனின் மிகபெரிய குற்றச்சாட்டு. அர்னாப் கோஸ்வாமிகள் கண்ணனின் இந்த குற்றச்சாட்டை புலனாய்ந்து தவற்றை தட்டிக்கேட்க உதவினால் அதுவே கே வி ஆனந்துக்கான உண்மையான அஞ்சலியாக அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக