சனி, 1 மே, 2021

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- முன்னணி நிலவரம் நாளை காலை 11 மணிக்கு தெரியும்

maalaimalar : நாளை பிற்பகலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரிந்து விடும். 20 முதல் 44 சுற்றுகள் வரை ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் நள்ளிரவு வரை ஓட்டு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு உள்ளது. சென்னை: தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளன. அறைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 75 மையங்களில் எண்ணப்படுகின்றன. இதற்காக தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு எந்திரங்களில் பதிவாகி உள்ள வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 14 மேஜைகள், அதிகபட்சம் 28 மேஜைகள் வாக்கு எண்ணிக்கைக்காக வைக்கப்பட்டுள்ளன. தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த மேஜைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் 75 மையங்களிலும் 3,372 மேஜைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 739 மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசாரின் தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தனியாக 309 மேஜைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 4,420 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

ஓட்டு எண்ணும் பணிகளில் சுமார் 16 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்களுக்கு ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு விட்டது. என்றாலும் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவருக்கும் முகக்கவசம், பாதுகாப்பு உடை போன்றவை வழங்கப்படும்.

ஓட்டு எண்ணும் இடங்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. இதற்காக ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையத்திலும் 4 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்கும் அரசியல் கட்சி முகவர்களுக்கும் முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உடைகள் வழங்கப்படும்.

குறிப்பிட்ட சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்படுவார்கள். ஒவ்வொரு சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதும் அடுத்த 30 நிமிடங்களில் அதன் முடிவுகளை அந்தந்த மைய அதிகாரி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார். இந்த பணிகள் அனைத்தும் தேர்தல் ஆணைய சிறப்பு அதிகாரிகளால் கண்காணிக்கப்படும்.

சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 28 மேஜைகள் வாக்கு எண்ணிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் முதல் 2 மணி நேரத்தில் முன்னணி நிலவரம் தெளிவாக தெரிய வந்துவிடும். அந்த வகையில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளின் முன்னணி நிலவரத்தை நாளை காலை 11 மணிக்கு அறிந்து கொள்ளலாம்.

நாளை பிற்பகலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரிந்து விடும். 20 முதல் 44 சுற்றுகள் வரை ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் நள்ளிரவு வரை ஓட்டு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே முழு விவரங்கள் திங்கட்கிழமை அதிகாலை தான் தெரிய வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக