வெள்ளி, 7 மே, 2021

தமிழகத்திற்கு ஆக்சிஜன்: மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்திற்கு ஆக்சிஜன்: மத்திய அரசுக்கு உத்தரவு!

 minnambalam :தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை தடையில்லாமல் வழங்குவதை நாளைக்குள் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் தற்போது தமிழகத்திலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினை பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆக்சிஜன் மற்றும் மருந்து தட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.   இந்த வழக்கு விசாரணை இன்று(மே 6) தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு நடந்தது. அப்போது ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தமிழகத்தில் நாளைவரை மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளதாகவும், நாளை மறுநாள் ஆக்சிஜன் தட்டுப்பாடு மோசமான சூழ்நிலையை எட்டிவிடும் என தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் தடையில்லாமல் வழங்குவதை நாளைக்குள் உறுதி செய்ய வேண்டும். வடமாநிலங்களுக்கு டிஆர்டிஓ மூலம் ஆக்சிஜன் விநியோகம் செய்ததுபோல, தென் மாநிலங்களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மே 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வினிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக