ஞாயிறு, 9 மே, 2021

கொரோனா சிகிச்சைக்கு டி.ஆர்.டி.ஓ. தயாரித்த 2-டியாக்சி- டி-குளுக்கோஸ் மருந்து: இந்திய அரசு ஒப்புதல்

2-deoxy-D-glucose
  BBC :,தற்போதைய இரண்டாம் கொரோனா அலையால் இந்தியாவில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை தட்டுப்பாடு பெரும் அளவில் உள்ளது. இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்து ஒன்றை அவசரகால தேவைக்கு பயன்படுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் (டிசிஜிஐ) அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. 2-டியாக்சி- டி-குளுக்கோஸ் (2-deoxy-D-glucose (2-DG)) எனப்படும் இந்த மருந்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் ஓர் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் சயின்ஸ் (INMAS-DRDO), ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் லெபோரட்டரீஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கோவிட்-19 தொற்றாளர்களுக்கு செலுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், இந்த மருந்தில் உள்ள 2-DG மூலக்கூறு, அவர்கள் விரைவில் குணமடையவும் செயற்கை ஆக்சிஜன் தேவையை குறைக்கவும் பயன்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மருந்து செலுத்தப்பட்ட கோவிட்-19 தொற்றாளர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டபோது, அவர்களில் அதிகமான விகிதத்தினருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வந்ததாக இந்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விரிவான செய்திக் குறிப்பொன்றை இந்திய அரசின் பத்திரிகை தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் உள்ள தகவல்கள் பின்வருமாறு:

கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலை நிகழ்ந்த ஏப்ரல் 2020 காலகட்டத்தில் INMAS-DRDO ஆய்வகத்தின்அறிவியலாளர்கள், ஹைதராபாத்தில் உள்ள சென்டர் ஃபார் செல்லுலர் அண்ட் மாலிக்யூலர் பயாலஜி உடன் இணைந்து ஆய்வக பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

அப்போது கோவிட்-19 தொற்றை உண்டாக்கும் SARS-CoV-2 வைரசுக்கு எதிராக 2-டியாக்சி- டி-குளுக்கோஸ் மூலக்கூறு திறம்பட செயல்படுவது கண்டறியப்பட்டது.

இந்த முடிவுகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட சோதனைகளை மேற்கொள்ள மே 2020 இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஒப்புதல் அளித்தது.

இந்த மருந்தின் பாதுகாப்பு மற்றும் வீரியம் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லெபோரட்டரீஸ் நிறுவனத்தினர் இரண்டாம் கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.

நாடு முழுவதும் உள்ள 11 மருத்துவமனைகளில் இந்த இரண்டாம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 110 தொற்றாளர்கள் பங்கெடுத்தனர்.

இதிலும் நல்ல முடிவுகள் கிடைத்த பின்பு நவம்பர் மாதம் 2020 இல் மூன்றாம் கட்ட ஆய்வுகளுக்கு டிசிஜிஐ அலுவலகம் ஒப்புதல் அளித்தது.

டிசம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரை டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள 27 கோவிட் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 220 தொற்றாளர்களுக்கு செலுத்தப்பட்டு மூன்றாம் கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன.

மூன்றாம் கட்ட ஆய்வில் விரிவான தரவுகள் டிசிஜிஐ-யிடம் முன்வைக்கப்பட்டன.

வழக்கமாக பின்பற்றப்படும் சிகிச்சை முறைகளில், மூன்றாவது நாளில் அறிகுறிகள் தென்படுதல் மற்றும் செயற்கை ஆக்சிஜன் தேவை ஆகியவை ஒட்டுமொத்த நோயாளிகளில் 31 சதவீதம் பேரிடம் மட்டுமே குறைந்தது.

ஆனால் இந்த மருந்தை உட்கொண்ட நோயாளிகளில் இந்த விகிதம், அதே மூன்றாம் நாளில் 42 சதவிகிதமாக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 வயதுக்கும் அதிகமான வயதுடைய நோயாளிகளிடமும் இதையொத்த போக்கே காணப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மிதமானது முதல் தீவிரமானது வரையிலான கோவிட்-19 பாதித்த நோயாளிகளின் அவசரகால பயன்பாட்டுக்காக இந்த மருந்தை பயன்படுத்தலாம் என்று மே 1ஆம் தேதி டிசிஜிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

காப்புரிமை இல்லாத மூலக்கூறு என்பதாலும், குளுகோசை ஒத்த அமைப்புடைய மூலக்கூறு என்பதாலும் இந்த மருந்தை இந்தியாவில் எளிதாகவும் அதிகமான அளவிலும் தயாரிக்க முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக