வியாழன், 6 மே, 2021

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் மூச்சுத்திணறி சாவு

dhinakaran : உறவினர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள் போராட்டத்தால் பரபரப்பு
* தேர்தல் நேரத்தில், உயிர் காக்கும் கருவிகள் வாங்காமல் அதிமுக அரசு அலட்சியம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு

சென்னை: செங்கல்பட்டு  அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 கொரோனா நோயாளிகள்  மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர். இதை கண்டித்து நோயாளிகளின் உறவினர்கள்  மற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. தேர்தல் நேரத்தில் மக்களை கண்டு கொள்ளாமல் அதிமுக அரசு பாராமுகமாக செயல்பட்டதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றின் 2வது அலை நாளுக்கு நாள்  அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. பலி எண்ணிக்கையில் முதலிடத்தில்  இருந்த அமெரிக்காவை மிஞ்சி நிற்கிறது இந்தியா. தினசரி பாதிப்பு லட்சத்தை  தாண்டி நிற்கிறது. குறிப்பாக டெல்லி, அசாம், மகாராஷ்டிரா, ஜம்மு, பீகார்,  குஜராத், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றால்  இறப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. பல  மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டாலும், நோயாளிகளை அனுமதிக்க இடங்கள்  இல்லாததாலும் வீதிகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அவல நிலை  தொடர்கிறது.

அதேநேரத்தில் தொற்றால் இறப்பவர்களின் உடல்களை  அடக்கம் செய்ய இடம் இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. பல இடங்களில்  இரவு-பகலாக இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படுகிறது. இந்த காட்சிகளை  எல்லாம் பார்க்கும்போது என்ன செய்வதென்றே தெரியாமல் உறவினர்கள் கண்ணீர்மல்க  திகைக்கின்றனர்.  சமீபத்தில் 600 ரூபாய்க்கு 1.5 கோடி தடுப்பூசி வாங்க ஆர்டர் கொடுத்துள்ளதாக அதிமுக அரசு கூறியது. ஆனால், பணமும் ஒதுக்கவில்லை. ஆர்டரும் கொடுக்கவில்லை. தேர்தலில் தோற்க இருப்பதாக நினைத்து கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். இதேபோலதான் தமிழகத்தில் பல மருத்துவமனைகளையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பத்திரிகைகளில் எழுதியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக செங்கல்பட்டு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறை என்று கூறியும் அரசு கண்டுகொள்ளவில்லை. செங்கல்பட்டு கலெக்டர், அதிமுக உறுப்பினராகவே மாறி மறுப்பு மட்டுமே தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றிரவு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 2 பெண்  உள்பட 13 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் பற்றிய விவரம்  வருமாறு: செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, விபத்து, பொது சிகிச்சை, அவசர  சிகிச்சை, பிரசவ வார்டு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளதால்  செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும்  சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தற்போது, சென்னைக்கு அடுத்தபடியாக  செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்த வண்ணம்  உள்ளது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.  தற்போது, புதிதாக 500 படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டு  அமைக்கப்பட்டுள்ளது. இதில் 300 படுக்கைகள் ஆக்சிஜன் உதவியுடன் இயங்குகிறது.  ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு, இங்கு சிகிச்சை  அளிக்கப்படுகிறது. இருப்பினும் தொற்றால் சில நாட்களாக தினமும் 6 முதல் 10  பேர் வரை உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலையில்  திடீரென ஆக்சிஜன் அனைத்தும் தீர்ந்து விட்டது. இதனால் கொரோனா வார்டில்  ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மூச்சு திணறலால் கடும்  அவதிக்குள்ளானார்கள். இந்நிலையில் திடீரென 13 நோயாளிகள் மூச்சு திணறலால்  பரிதாபமாக இறந்தனர். இவர்கள், திருநெல்வேலி, தேனி, மதுராந்தகம்,  தூத்துக்குடி, நாகர்கோவில்,  திருக்கழுக்குன்றம், மாமண்டூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 பெண்கள் உள்பட  13 பேர் ஆவர். இதை அறிந்ததும் நோயாளிகளின் உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையில் இறந்த 13 பேரின் உறவினர்கள், மருத்துவமனை  வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர், டாக்டர்கள், நர்ஸ்களை  கடுமையான வார்த்தையால் பேசினர். இதனால் மருத்துவர்கள் பணியை புறக்கணித்தனர். தகவல் அறிந்து மாவட்ட கலெக்டர் ஜான்  லூயிஸ், எஸ்.பி. சுந்தரவதனம் உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு  விரைந்தனர். மருத்துவமனை டீன் முத்துகுமரனிடம், ஆக்சிஜன் தட்டுப்பாடு பற்றி  கேட்டனர். இதையடுத்து அவசரமாக 2 மணி நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பப்பட்ட  வாகனம் வரவழைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்  பணி தொடங்கியது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து  காலையிலேயே டீனுக்கு தகவல் தெரிவித்து விட்டோம். அவர்கள், எந்தவித  நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும்  எங்கள் மீதுதான் கோபப்படுகின்றனர். எப்படி பணியாற்ற முடியும்’ என்று கூறி கலெக்டரிடம் வாக்குவாதம்  செய்தனர். பின்னர் காலை 4 மணியளவில்  டாக்டர்கள், நர்ஸ்கள் பணிக்கு திரும்பினர். இந்த சோக சம்பவம் குறித்து நோயாளிகளின் உறவினர்கள்  கூறுகையில், கொரோனா வார்டில் அனைத்து வசதிகளும் இருக்கிறது  என்கிறார்கள். தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதற்காகத்தான் வருகிறார்கள். ஆனால் இப்படி ஆக்சிஜன் தட்டுப்பாடு என்றால் எப்படி.  நல்ல மருத்துவ வசதி என்று பெயரெடுத்த தமிழகத்தில் இப்படி என்றால் என்ன  சொல்வது. நாங்கள் கடும் பீதியில் உள்ளோம். தேர்தல் நேரத்தில் தோல்வியை தழுவப் போகிறோம் என்று தெரிந்து அதிமுக அரசு கண்டுகொள்ளாமல்விட்டு விட்டது. பல மருத்துவமனைகளில் உயிர்காக்கும் கருவிகள் இல்லை ‘ என்று குற்றம்சாட்டினர்.

இந்நிலையில்,  நேற்று காலை 10 மணி முதல் 2 மணி வரை மீண்டும் டாக்டர்கள், நர்ஸ்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல்  அறிந்து மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, கலெக்டர் ஜான் லூயிஸ்  ஆகியோர் விரைந்தனர். மருத்துவமனையில் ஆய்வு செய்து விட்டு போராட்டத்தில்  ஈடுபடும் டாக்டர்கள், நர்ஸ்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது,  டாக்டர்கள் கூறுகையில், தனியார்  மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பி விட்டு இங்கு நிரப்பப்படுகிறது. அதுவும்  குறைவாக ெகாண்டு வரப்படுகிறது. அதனால்தான் இறப்பு எண்ணிக்கை அதிகமாகிறது’  என்றனர். இதையடுத்து நாராயணபாபு கூறுகையில், ‘ஆக்சிஜன் பற்றாக்குறையால்  சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. தற்போது அதுவும் சரி செய்யப்பட்டு விட்டது.  இந்த தவறுக்கு காரணமானர்களை கண்டு பிடித்து துறை ரீதியாக நடவடிக்கை  எடுக்கப்படும். தற்போது, மருத்துவமனைக்கு கூடுதல் ஆக்சிஜன்  வரவழைக்கப்பட்டுள்ளது. இனிமேல் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்காது’ என்றார்.  இதையடுத்து அனைவரும் பணிக்கு திரும்பினர்.  ஒரே இரவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 கொரோனா நோயாளிகள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக