ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

பிரான்ஸ் போலீஸ் நிலையத்துக்குள் பெண் அதிகாரி கழுத்தை அறுத்து படுகொலை! இஸ்லாமிய பயங்கரவாதி கொடூரம்

daylithanthi :பாரீஸ்: பிரான்சில் கடந்த 2015-ம் ஆண்டு `சார்லி ஹெப்டோ’ என்கிற பத்திரிகை குறிப்பிட்ட ஒரு மதத்தின் தலைவரின் கேலிச்சித்திரத்தை பதிவிட்ட காரணத்துக்காக தாக்குதலுக்கு உள்ளானது. கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 7-ந்தேதி சார்லி ஹெப்டோ அலுவலகத்தில், 2 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஊழியர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தலைநகர் பாரீசில் உள்ள பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்த சாமுவேல் பெட்டி என்பவர் கருத்து சுதந்திரம் குறித்து வகுப்பு எடுத்த போது, `சார்லி ஹெப்டோ’ பத்திரிகையில் வெளியான சர்ச்சைக்குரிய அந்த கேலிச் சித்திரத்தை மாணவர்களிடம் காட்டி பாடம் நடத்தினார்.

இந்த விவகாரம் சமூகவலைதளத்தில் பேசுபொருளானதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி சாமுவேல் பெட்டி, பள்ளிக்கூட நுழைவு வாயிலில் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த கொலையாளியை போலீசார் சுட்டு கொன்றனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த நாட்டின் அதிபர் மெக்ரான் இந்த விவகாரம் பற்றி பேசியது பெரும் சர்ச்சையானது. அவர் குறிப்பிட்ட ஒரு மதத்தின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மெக்ரானின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரான்சில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேறின.‌

தேவாலயத்துக்குள் புகுந்து கத்திகுத்து, போலீசார் மீது துப்பாக்கி சூடு என அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்கள் பிரான்சை அதிர வைத்தது. எனினும் கடந்த சில மாதங்களாக பிரான்சில் பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல்கள் ஏதுமின்றி அமைதி நிலவி வந்தது.‌

இந்த நிலையில் தலைநகர் பாரீசில் உள்ள போலீஸ் நிலையத்துக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்து பெண் அதிகாரியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரீசின் புறநகர் பகுதியான ரோம்போலியட் நகரில் உள்ள போலீஸ் நிலையத்துக்குள் நேற்று முன்தினம் மதியம் உள்ளூர் நேரப்படி 2:20 மணியளவில் மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் நுழைந்தார். பின்னர் அவர் அங்கு நிர்வாக பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவரை கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். அங்கு பெரும் பதற்றம் உருவானது.

கொலையாளி போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பியோட முயன்றபோது அங்கிருந்த போலீசார் அவரை சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

முதற்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய 36 வயதான நபர் பல ஆண்டுகளுக்கு முன்பு துனிசியாவில் இருந்து பிரான்ஸ் வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.‌

தாக்குதல் நடத்தப்பட்ட விதம், தாக்குதல் நடத்தியவரின் செயல்கள் ஆகியவற்றின் மூலம் நிச்சயம் இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்றும் இதுகுறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.‌

இதனிடையே இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்த பெண் அதிகாரியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அதிபர் மெக்ரான் பிரான்ஸ் ஒருபோதும் பயங்கரவாதத்துக்கு அடிபணியாது என சூளுரைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் ‘‘பிரான்ஸ் மீண்டும் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாகி உள்ளது. தாக்குதலில் பலியான பெண் அதிகாரியின் குடும்பத்தினர், அவரது சகாக்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு நமது தேசம் துணை நிற்கும்’’ என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக