ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின- மக்கள் வீடுகளில் முடக்கம்

மாலைமலர் : சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இன்று முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படும் கோயம்பேடு மேம்பாலங்கள்
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு கடந்த 18-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த 5 நாட்களாக இரவு 10 மணியளவில் இருந்து அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும், கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள் உள்ளிட்டவை மாநிலம் முழுவதும் திறக்கப்படவில்லை. எப்போதும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையிலேயே மீன் மார்க்கெட்டுகளிலும், இறைச்சி கடைகளிலும் கூட்டம் அலைமோதும். இன்று இந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் மீன் மார்க்கெட் பகுதிகள் மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவை ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

பெரிய ஜவுளிக்கடைகள் மற்றும் சிறிய கடைகள் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் துணி எடுப்பதற்கு அலை மோதுவார்கள். இதனால் இந்த கடைகள் அனைத்தும் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிக்கே திறக்கப்பட்டு இருக்கும். இன்று முழு ஊரடங்கால் ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடிக்கிடந்தன.

இதேபோன்று செல்போன் கடைகள், ஹார்டுவேர்ஸ் மற்றும் பெயிண்டு கடைகள் உள்ளிட்டவையும் மூடப்பட்டு இருந்தன.

தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மளிகைக்கடைகள் மற்றும் டீக்கடைகளும் இன்று திறக்கப்படவில்லை. மளிகை மற்றும் டீக்கடைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் எப்போதும் வியாபாரம் சூடுபிடிக்கும். இன்று கடைகள் மூடப்பட்டு இருந்ததால் அந்த காட்சிகளை காண முடியவில்லை.

ஞாயிற்றுக்கிழமைகளில் தி.நகர், பாரிமுனை, புரசைவாக்கம், மூலக்கடை, மாதவரம், செங்குன்றம், அரும்பாக்கம், கோயம்பேடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரமாக பலர் கடைகளை போட்டு வியாபாரம் செய்வது வழக்கம்.

இந்த கடைகளில் பூக்கள், காய்கறிகள், மீன், கருவாடு உள்ளிட்ட உணவு வகைகளும் அதிகளவில் விற்பனையாகும். இன்று அது போன்று எந்த கடைகளையும் காண முடியவில்லை.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலான இடங்களில் வாரச்சந்தைகள் நடைபெறுவது உண்டு. ஆடு, நாட்டுக்கோழி வியாபாரம் அந்த சந்தைகளில் களை கட்டும். செங்குன்றம் பகுதியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சாலையோரமாக சேவல், கோழிகளை பலர் விற்பனைக்காக வைத்திருப்பார்கள்.

நாட்டுக்கோழி முட்டை வியாபாரமும் அதிகமாக நடைபெறும். இன்று இது போன்ற வியாபாரிகளை காணவில்லை.

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் வணிக வளாகங்கள் மற்றும் மால்கள் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவு கூடுவார்கள். தியேட்டர்களுடன் கூடிய மால்களில் திருவிழா போன்று கூட்டம் காணப்படும்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை கழிக்க குடும்பத்தோடு மால்களுக்கு செல்வார்கள். தியேட்டர்களில் படம் பார்த்து விட்டு அங்குள்ள ஓட்டல்களில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்புவது வழக்கம். இன்று இந்த மால்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.

சென்னையில் அமைந்தகரை ஸ்கைவாக், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா, வேளச்சேரி பீனிக்ஸ் மால் உள்ளிட்ட அனைத்து மால்களும் இன்று மூடப்பட்டு இருந்தது. காவலர்கள் மட்டுமே இந்த மால்களில் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இது தவிர சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தியேட்டர்களும் மூடப்பட்டு இருந்தன. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான இறைச்சி, மீன் உள்ளிட்டவைகளை நேற்றே வாங்கி வைத்துக் கொண்ட பொதுமக்கள் இன்று வெளியில் வரவில்லை. வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.

அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்றும் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் அதற்கு பயந்து மக்கள் வெளியில் வரவில்லை.

முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்கள் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி பால் வண்டிகள், மருத்துவமனை வாகனங்கள், அமரர் ஊர்திகள் மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகள் வழக்கம் போல் செயல்பட்டன.

மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள் ஆகியவை எப்போதும் போல செயல்பட்டன. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததால் மாநிலம் முழுவதும் திருமண நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெற்றன.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை விசாரிக்கும் போலீசார்

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சென்னையில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 500 வாகனங்களில் போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்தனர்.

சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

முழு ஊரடங்கை மீறி வெளியில் வந்த கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார் அதில் வந்தவர்களை எங்கு செல்கிறீர்கள் என்று விசாரித்தனர். அப்போது உரிய காரணங்களை தெரிவிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு சென்றவர்கள் அழைப்பிதழ்களை காட்டிய பிறகே அனுமதிக்கப்பட்டனர். தேவையில்லாமல் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக