வெள்ளி, 9 ஏப்ரல், 2021

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் !

vinavu.com : இந்தியாவின் எல்லைக்குட்பட்ட கடல் பகுதிகளில் இந்தியாவின் அனுமதியின்றி அமெரிக்க கடற்படை ஊடுறுவி ரோந்து மேற்கொண்டது இதனை அமெரிக்க கப்பற்படை தாமாகவே முன் வந்து வெளிப்படையாகத் தெரிவித்ததோடு இந்தியாவின் “கடற்படை தொடர்பான அதீதமான உரிமை பாராட்டுதலுக்கு” சவால் விடும் வகையிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்கக் கப்பற்படையின் 7-வது பிரிவின் கமாண்டர் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “யூ.எஸ்.எஸ். ஜான் பால் ஜோன்ஸ் கப்பல், லட்சத்தீவுகளுக்கு மேற்கே இந்தியாவின் தனிச்சிறப்பான பொருளாதார மண்டலத்துக்குள் சுமார் 130 கடல் மைல்களுக்கு இந்தியாவிடம் முன் அனுமதி ஏதும் பெறாமல் சர்வதேச சட்டங்களுக்கு முரணின்றி தனது கடல் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை செலுத்தியது” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், தங்கள்து கடல் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மற்றும் கடலை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச சட்டங்களால் அங்கீகரிக்கப்பட்டவை என்றும் அவற்றை தற்போதைய கடல்ரோந்து உயர்த்திப் பிடித்திருப்பதாகவும் தெரிவித்தது.

இந்த அறிக்கை குறித்தோ, அமெரிக்க கப்பற்படையின் அத்துமீறல் குறித்தோ இதுவரை மோடி அரசு வாய் திறக்கவில்லை.

தங்களது நாட்டு கடற்பகுதிகளில் தனிச்சிறப்பான பொருளாதார மண்டலங்களுக்குள் அந்நிய நாட்டு இராணுவக் கப்பல்கள் வருவதை தடுப்பதற்கான அந்தந்த நாடுகளின் உரிமை குறித்து இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் ஒத்த புரிதல் துவக்கத்தில் இருந்தே இல்லை என வல்லுனர்கள் தெரிவிக்கின்ற்னர்.

ஐக்கியநாடுகள் மாநாட்டின் கடலுக்கான சட்டத்தை (UNCLOS), 1995-ம் ஆண்டு இந்தியா ஏற்றுக் கொண்டது. இதன் படி, தனிச்சிறப்பான பொருளாதார பகுதிகளுக்குள் சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்புதல் பெறாமல், பிற நாட்டு இராணுவ நடவடிக்கைகளோ, பயிற்சியோ எடுக்கக் கூடாது. ஆனால் அதை அமெரிக்கா ஏற்கவில்லை.

இந்தியாவின் தனிச்சிறப்பான பொருளாதார மண்டலங்களுக்குள் அமெரிக்கா இத்தகைய ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரே தொடர்ச்சியாக பலமுறை இந்தியாவின் தனிச்சிறப்பு பொரு. மண்டலத்திற்குள் உளவு மற்றும் கண்காணிப்பு வேலைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாக கடந்த 2019-ம் ஆண்டு மனோஜ் ஜோஷி என்பவர் தி வயர் இணையதளத்தில் எழுதியிருந்தார்.

ஜப்பான் – இந்தியா – அமெரிக்க பயிற்சி ஒத்திகை

மேலும், அப்படி அமெரிக்காவின் அத்துமீறலுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்தியா அவ்வப்போது கண்டனம் தெரிவித்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்கா தாமாக முன்வந்து இப்படி பகிரங்கமாக தாம் செய்ததை அறிவிப்பது இப்போதுதான் முதன் முதலாக நடக்கிறது, என்கின்றனர் வல்லுனர்கள்.

அமெரிக்காவின் இந்த அறிக்கையில் கூடுதலாக ஒரு செய்தியையும் அது இணைத்துக் கூறியிருக்கிறது. “தொடர்ச்சியான இதுபோன்ற ரோந்துக்கான சுதந்திர நடவடிக்கையை அமெரிக்கா கடந்த காலத்திலும் நடத்தியிருக்கிறது. வருங்காலத்திலும் அதி தொடரும். இந்த ரோந்து நடவடிக்கைகள் வெஊற்மனே ஒரு நாடு சந்ததோ அல்லது அவர்களது அரசியல் அறிக்கைகள் சம்பந்தப்பட்டதோ அல்ல” என்று குறிப்பிட்டுள்ளது அந்த அறிக்கை.

எந்த ஒரு நாட்டிற்கும் மட்டுமானது அல்ல என்பதன் பொருள், அது இந்த நடவடிக்கை மூலம் சீனாவிற்கும் எச்சரிக்கை விடுக்கிறது. தென் சீனக் கடலை சீனாவின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப் போவதாகக் கூறிக் கொண்டு சீனாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தவே இத்தகைய அத்துமீறல்களை நடத்துகிறது அமெரிக்கா.

இந்தச் சமயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் க்வாட் (QUAD) எனும் சீனாவுக்கு எதிரான கூட்டமைப்பில் கையெழுத்திட்டு இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி சீனாவுக்கு எதிரான கடற்பயிற்சியில் இந்தியாவும் அமெரிக்காவுடன் இணைந்து ஈடுபடுவதன் மூலம், தாம் அமெரிக்காவின் அடியாள்தான் என்பதை தெற்காசிய நாடுகளுக்கும், சீனாவுக்கும் தெரிவிக்கிறது இந்திய அரசு.

தற்போது இந்திய கடல் எல்லைக்குள் ஊடுறுவியது மட்டுமல்லாமல், அனுமதியில்லாமல் தான் நுழைவோம் என்று திமிர்த்தனமாக அறிக்கையும் விட்டு, தமக்குக் கீழ்தான் இந்தியா என்பதை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது அமெரிக்கா.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கு எதிரான முறுகல் நிலைமைகளையும் , பரஸ்பர உருட்டல் மிரட்டல்களையும் இரண்டு ஏகாதிபத்தியங்களுக்கும் இடையே நடக்கும் நாடுபிடிக்கும் போட்டி என்றே பார்க்க முடியும்.

இந்தப் பிரச்சினையில் இந்தியா, அமெரிக்க ஆதரவு எடுத்து குவாட் கூட்டமைப்பில் இந்தியா ஏற்கெனவே இணைந்திருக்கிற்து. இது சீனாவுக்கு எதிரான பகைமையை அதிகரிக்கச் செய்வதோடு, அதே அளவுக்கு இராணுவ, பொருளாதார, அரசியல்ரீதியாக அமெரிக்காவுக்கு இந்தியா அடிமையாவதை நோக்கியே இட்டுச் செல்லும்.

அதற்கு ஒரு துலக்கமான உதாரணம்தான் தற்போது அமெரிக்கா வெளியிட்டிருக்கும் இந்த திமிர்த்தனமான அறிக்கையும், இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் அது செய்திருக்கும் அத்துமீறலும் ஆகும் !!


கர்ணன்
செய்தி ஆதாரம் :
தி வயர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக