சனி, 10 ஏப்ரல், 2021

பூவை ஜெகன்மூர்த்தி : அரக்கோணம் இரட்டைக் கொலைக்கு அரசியலோ சாதிய மோதலோ காரணமில்லை’

பூவை ஜெகன்மூர்த்தி
கொலை செய்யப்பட்ட சூர்யா - அர்ஜுனன்
கொலை செய்யப்பட்ட சூர்யா - அர்ஜுனன்
vikatan.com - லோகேஸ்வரன்.கோ : பூவை ஜெகன்மூர்த்தி ‘‘அரக்கோணம் இரட்டை கொலைச் சம்பவத்தை அரசியலாக்குவதும், சாதி பிரச்னையாக்குவதும் கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்டவர்கள் என் கட்சியினர். அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களில்லை’’ என்கிறார் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி.அரக்கோணம் அருகேயுள்ள கௌதம நகர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அர்ஜுனன், சூர்யா என்ற 2 இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, அரக்கோணம் தாலுகா போலீஸார், இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர். இருப்பிரிவினர் இடையே ஏற்பட்ட வாய்ச்சண்டையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்) குறிப்பிட்டுள்ளனர். ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனோ, ``தேர்தல் முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கிறது. இதற்கு அ.தி.மு.க, பா.ம.க தான் காரணம்’’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார். தி.மு.க தலைவர் ஸ்டாலினும், சாதிய வன்மத்தோடு படுகொலை நடந்திருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் கருத்துக்கு அ.தி.மு.க, பா.ம.க தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. குடிபோதையில் இருத்தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தை சாதி கலவரமாக மாற்றி அமைதியாக வாழும் இரு சமூகத்துக்குள் மோதலை ஏற்படுத்த முயற்சிப்பதாக திருமாவளவனுக்கும், ஸ்டாலினுக்கும் பா.ம.க நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, ``இந்தச் சம்பவம் குறித்து ஊர் மக்களிடம் நேரில் சென்று விசாரித்தேன். இரட்டை கொலை சாதி பிரச்னையால் நடந்தது அல்ல என்றனர்.

அந்த இளைஞர்கள் எப்போதுமே குடித்துவிட்டு பிரச்னை செய்கிறவர்கள் என்கின்றனர். சம்பவத்தன்று போதை கொஞ்சம் அதிகமாகி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதனை பேசி தீர்ப்பதற்காக மீண்டும் கூடியிருக்கின்றனர். அப்போது, ஒருத்தரப்பு இளைஞர்கள் கத்தியாலும், பாட்டிலை உடைத்தும் குத்தியிருக்கின்றனர். சாதி பிரச்னையென்றால் இந்நேரம் ஊரே திரண்டிருக்கும். அந்த ஊரில் பா.ம.க கட்சியினரே இல்லை. அக்கட்சியின் கொடி கூட எங்கேயும் தென்படவில்லை. அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் அங்கு இல்லை. அனைத்து சமூகத்தினருமே இணக்கமாக வசிக்கிறார்கள். கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் என்னுடைய புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

அரக்கோணம்: ``இரட்டைக் கொலை; அ.தி.மு.க - பா.ம.க காரணம்!" - போராட்டம் அறிவித்தார் திருமாவளவன்

இந்த தகவலை கேள்விப்பட்ட உடனே நானும் என் கட்சி நிர்வாகிகளும் 20 வண்டிகளில் அந்த ஊருக்குச் சென்று ஆறுதல் சொன்னோம். அவர்களிடம் விசாரித்தபோதுதான் இவ்வளவுத் தகவல் கிடைத்தது. பின்னர், எஸ்.பி-யைச் சந்தித்து சரியான நடவடிக்கை எடுக்கச் சொன்னோம். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நபர்களையும் சந்தித்து சாதி ரீதியான பிரச்னையா என்று கேட்டதற்கு, அவர்களும் இல்லை என்றுதான் என்னிடம் கூறினர். பா.ம.க மீது பழி சுமத்துவது தவறு. இரட்டை கொலைக்குப் பின்னரே சாதி மோதலை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இதனை அரசியலாக்குவதும், சாதி பிரச்னையாக்குவதும் கண்டிக்கத்தக்கது. கடைசி வரைக்கும் இந்த இரண்டு சமூகத்துக்குள்ளும் மோதல் ஏற்படுத்துவதை அரசியல் கட்சியினர் வேலையாக வைத்துள்ளனர்.’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக