செவ்வாய், 13 ஏப்ரல், 2021

ஜக்கிக்கு எதிராக ஆன்மீகவாதிகள் ஆவேசம்! -சாவித்திரி கண்ணன்

 

”மோடிக்கு அடுத்தபடியாக தமிழ் நாட்டில் அதிக மக்களால் கடுமையாக வெறுக்கப்படுபவராக ஜக்கி வாசுதேவ்  தற்போது பார்க்கப்படுகிறார்.’’ என்று ஒரு கருத்தை கருத்தை இன்று இளம் பத்திரிகையாளர் ஒருவர் சொன்னார். எனக்கு திடுக்கென்றது. அவர் கருத்தை மற்ற சிலரும் ஆமோதித்தனர். இந்த சம்பவம் இன்று ஜக்கிக்கு எதிரான தெய்வத் தமிழ் பேரவை நடத்திய பிரஸ் மீட் முடிந்ததும் நிருபர்கள் மத்தியில் விவாதப் பொருளானது.

யோகா, பிரணாயாமம் என்று அவர் இயங்கிய காலங்களில் அவர் மீது மக்களுக்கு பெரும் ஈர்ப்பு ஒரு கட்டத்தில் உருவானது. ஆனால், மிக பிரம்மாண்டமாக இயற்கை வனத்தை ஆக்கிரமித்த குற்றச்சாட்டுகள் ஒரு புறம் அணிவகுக்க, தீடீரன்று அரசியல் விவகாரங்களில் தலையிடுவது, எல்லா விவகாரங்களிலும் கருத்துகள் தெரிவிப்பது என திசை மாறி, தற்போது அவர் ஆதிக்க சக்திகளின் கைக்கூலியாக களத்தில் இறங்கியுள்ளார்!

தற்போது தமிழ் நாட்டு கோயில்களை அரசிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற இயக்கத்தை அவர் முன்னெடுத்துள்ளார். இது தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. தனியார் வசம் இருக்கும் கோயில்களில் என்னென்ன தகிடுதத்தம் நடக்கிறது என்று மக்கள் அனுபவபூர்வமாக பார்த்துள்ளனர். பல நெடுங்கால அனுபவத்திற்குப் பிறகு தான் நமது முன்னோர்கள் தமிழக கோவில்களை அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு கொண்டு வந்தனர்.

” நம் கோவில்களை எடுத்து ஆதிக்க சாதிகளிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்’’ என்று ஜக்கி கூறுகிறார். அதற்கு தமிழக ஆன்மீகவாதிகளும், தமிழ் தேசியவாதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று சென்னை ரிப்போர்ட்டர் கில்டில், தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், தலைமையில் ஆன்மிகச் சான்றோர்கள் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் கருவூறார் சித்தர் பீடம் மூங்கிலடியார் ,  வடகுரு ஆதின மடாதிபதி குச்சனூர் கிழார்,  சத்தியபாமா அம்மையார்,  மூத்த வழக்கறிஞர் ச. செந்தில்நாதன், ஆவடி சைவத் தமிழ்ப் பேரவைத் தலைவர்  கலையரசி நடராசன், ஆன்மிகப் பெரியவர்கள் இறைநெறி இமயவன், திருவல்லிப்புத்தூர் மோகனசுந்தரம், சிவ. வடிவேலன், ஆசீவகம் சுடரொளி, பொன்னுச்சாமி அடிகளார், கி. வெங்கட்ராமன் (தமிழ்த்தேசியப் பேரியக்கம்), அரங்கநாதன் (அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்), முனைவர் வே. சுப்பிரமணிய சிவா (வள்ளலார் ஆய்வாளர்)  முதலியோர் கலந்து கொண்டு பேசினர்.

”கோவில்களை எளிய தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கும் சூழ்ச்சியாகவே ஜக்கியின் கோவில் அடிமை நிறுத்து இயக்கத்தை பார்க்கிறோம். அவரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் பின்னிருந்து இயக்குகிறது. இந்துத்துவ ஆதிக்க சக்திகள் தான் ஜக்கியை முன் நிறுத்தி இந்த காரியங்களை செய்கின்றனர்’’ என ஆன்மீகவாதிகள் குற்றம் சாட்டினர். ஜக்கி மீதும் ஈஷா நிறுவனத்தின் மீதும் நாளுக்கு நாள் தமிழக மக்களிடத்தே கோபமும், கொந்தளிப்பும் அதிகரித்து வருகிறது.  ஆன்மிகத்தில் தமிழர் மரபுக்குரிய சிவநெறி – திருமால்நெறி ஆகியவற்றிற்கு முரணான வகையில் செயல்பட்டு வருகின்றது ஈஷா அமைப்பு! ஜக்கி வாசுதேவ் சட்டவிரோதமாக நமது மலைத் தொடர்களை ஆக்கிரமித்துவிட்டார்.

எனவே, வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் செயல்பட்டு வரும் ஈஷா அறக்கட்டளை மற்றும் வழிபாட்டு அமைப்புகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு உடனடியாக அரசுடைமையாக்கி, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சேர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டு இந்துக் கோயில்களைக் கைப்பற்றிக் கொள்ளும் நோக்கத்துடன், இந்து சமய அறநிலையத் துறையைக் கலைக்கக் கோரி, நம் கோயில்களுக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தச் செய்த ஜக்கி வாசுதேவ் மீது இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று இந்த மிரஸ் மீட்டில் கலந்து கொண்ட ஆன்றோர்களும்,சான்றோர்களும் வலியுறுத்தினர்.

ஆன்மீகத்தை விட அரசியல் விவகாரத்திலும்,பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவதிலும் தான் ஜக்கி ஆர்வம் காட்டுகிறார். இது தொடருமானால் அவருக்கு எதிராக தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் வெடிக்கும்.

# பலவாறான சமய நெறி மீறல்களும், சட்டமீறல்களும் நடத்திவரும் ஈஷா மையம் அறக்கட்டளையை தமிழ்நாடு அரசு ஏற்று இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதி 3-இன் கீழ், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.

# இந்து அற நிலையத்துறையைக் கலைத்துவிட்டு அதிக்க சக்திகளோடு சேர்ந்து தமிழ் நாட்டுக் கோயில்களை கைப்பற்றும் நோக்கத்துடன் கோயில்களுக்கு உள்ளேயே அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்திய ஜக்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நூற்றாண்டாக இந்து அறநிலையத்துறை தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்து மதத்தின் தனித்தன்மையும், சிறப்புத்தன்மையும் அதன் பன்மைத்தன்மை ஆகும். பல்வேறு தெய்வங்கள், பல்வேறு புனித நூல்கள் கொண்ட நம்முடைய மதத்தின் நிர்வாகத்தை ஏதோவொரு தனியார் குழுவிடம் ஒப்படைக்க முடியாது. திருக்கோயில்கள் பெரும்பாலும் பழங்காலத்தில் அரசர்களால் எழுப்பப்பட்டவை. எனவே, இக்கோயில்களின்  நிர்வாகம்  தமிழ்நாடு அரசின் இந்து அறநிலைய ஆட்சித்துறை வசம் இருப்பதே பாதுகாப்பானது.

# தமிழ் நாட்டு கோயில்கள் அனைத்திலும் அன்றாட பூசைகள் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் குடமுழுக்கு மற்றும் அர்ச்சனைகளை தமிழில் மேற்கொள்ள வேண்டும். சமற்கிருதத்தில் பூசை நடத்த வேண்டுமெனக் கோருவோரைத் தவிர, இயல்பாக நடக்கும் அனைத்துப் பூசை மற்றும் வழிபாட்டு நடவடிக்கைகள் அனைத்திலும் தமிழ்த் திருமுறைகளையும், மந்திரங்களையும் மட்டுமே பயன்படுத்துவதை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நடைமுறை வழக்கமாக்கிட உறுதி செய்ய வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது.சாதி வேறுபாடில்லாமல் பயிற்சி முடித்த அனைவரையும் அர்ச்சகராக்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி  மே 8ல் முதல் கட்டமாக  தஞ்சையில் உண்ணா போராட்டம் நடத்தவுள்ளோம். இந்த உண்ணா போராட்டம் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் நடக்கும் என மணியரசன் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

 முன்னதாக நிருபர்களிடம் பேசிய மணியரசன், ‘’கர்நாடகத்தின் ஜக்கி வாசுதேவ் ஏகப்பட்ட குற்றவழக்குகளில் சிக்கியிருப்பவர். சட்ட விரோதமாக 109 ஏக்கர் வனப் பகுதியை ஆக்கிரமித்தவர் என அரசாங்கத்தாலேயே குற்றம் சாட்டப்பட்டவர். இந்திய அரசின் தணிக்கை அறிக்கையே ஆதியோகி சிலையும், அதையொட்டி கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்களும் சட்ட விரோத கட்டுமானங்கள் எனக் கூறியுள்ளது. ஈஷா செய்துள்ள நில ஆக்கிரமிப்பு தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர் தமிழர் ஆன்மீகத்தில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்; ஆர்எஸ்எஸ், பாஜகவின் குரலாக அவர் ஒலிக்கிறார்.

தமிழக கோவில்களை கைப்பற்ற ஜக்கி வாசுதேவ் ஆதிக்க சக்திகளால் களம் இறக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டின் யோகி ஆதித்யநாத் ஆக வர ஜக்கிவாசுதேவ் முயற்சிக்கிறார். ஆன்மீகப் போர்வை போர்த்திக்கொண்டு ஆர்எஸ்எஸ் அரசியல் செய்கிறது ஜக்கியின் ஈஷா நிறுவனம். இதை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஜல்லிக்கட்டை மீட்க நடந்த போராட்டத்தைவிடவும் பல மடங்கு வீரியமாக தமிழக கோயில்கள் ஆதிக்க சக்திகள் வசம் போவதை தடுக்க தன்னிச்சையாக நடைபெறும். கட்சி வேறுபாடுகள் இன்றி தமிழ் நாட்டுமக்கள் இதில் உக்கிரமாக ஈடுபாடுவார்கள்”என்றார் மணியரசன்.

”தமிழ்நாட்டு இந்து மக்கள் அனைவரும் ஜக்கியின் இச்சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு, ஜக்கி வாசுதேவ் முன்மொழிந்து காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதி வழிமொழிந்துள்ள தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறையைக் கலைக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்…’’ என ஆன்மீகவாதிகள் அனைவரும் கேட்டுக் கொண்டனர்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக