திங்கள், 5 ஏப்ரல், 2021

பட்டையைக் கிளப்பிய பணப்பட்டுவாடா... அதிமுக அமோகம்; தடுமாறிய திமுக!

minnambalm :முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகக் கழிகிறது. இன்று எவ்வளவு செலவாகுமோ, சமூக ஊடகங்களில் இன்று நமக்கு எதிராக என்ன கிளப்பி விடப்போகிறார்களோ என்ற பதைபதைப்பிலேயே இருக்கிறார்கள் இவர்கள். கடைசியாய் கரன்சி வெள்ளம் கரை புரண்டு ஓடுவதில் கதி கலங்கித் தவிக்கிறார்கள் பலர்....

நாம் மின்னம்பலத்தில் ஏற்கெனவே எழுதியிருந்ததுபோல, திமுக வேட்பாளர்களுக்கு தொகுதிக்கு மூன்று கோடி மட்டும்தான் கட்சித் தலைமை கொடுத்திருக்கிறது. ஆனால் அதிமுக வேட்பாளர்களுக்கு தொகுதிக்கு 10 கோடி தலைமையே கொடுத்திருக்கிறது. அதற்கு மேல் சேர்த்துக் கொடுப்பது அவரவர் பொறுப்பு என்று கூறிவிட்டது. பத்தாண்டுகளாக ஆளும்கட்சியாக அதிமுக இருப்பதால், இப்போது வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி, கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றாகவே சம்பாதித்துள்ளனர். அதனால் எல்லோருமே தங்கள் பங்கிற்கும் கொஞ்சம் சேர்த்தே கொடுக்கின்றனர்..... 

தமிழகம் முழுவதும் நாம் விசாரித்த வகையில், பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் ஓட்டுக்கு 500 என்று விநியோகித்து விட்டனர். முதல்வர் பழனிசாமி நிற்கும் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் நிற்கும் போடி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, இரண்டு விஜயபாஸ்கர்கள், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, உதயகுமார் போன்றவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிகபட்சமாக 4000 ஆயிரம் ரூபாய் வரை பணப்பட்டுவாடா நடந்திருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. பிற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் போட்டியிடும் தொகுதிகளில் குறைந்தபட்சம் 1000, அதிகபட்சமாக 2000 என்று பட்டுவாடா நடந்திருக்கிறது. ஒரு சில அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் ஒரு கிராம் மற்றும் 2 கிராம் மூக்குத்தி போன்றவையும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் கள நிலவரம் அறிந்த கட்சிக்காரர்கள்.

இதனால் இவர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திமுகவினர் திணறுவது வெளிப்படையாகத் தெரிகிறது. திமுக வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் இதுபற்றிப் பேசினோம்...

‘‘நீங்கள் கேள்விப்பட்ட தகவல் உண்மைதான். திமுக வேட்பாளர்களில் முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் எம்எல்ஏக்கள் பலரும் தாராளமாகத்தான் செலவழிக்கிறார்கள். உதாரணமாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஓட்டுக்கு 3000 கொடுத்தால், செந்தில் பாலாஜியும் 3000 கொடுக்கிறார். அவர்களுக்கு அந்த கெப்பாசிட்டி இருக்கிறது. அவர்களைத் தவிர, பெரும்பாலான திமுக வேட்பாளர்கள் பெரும் கஷ்டத்தில்தான் இருக்கிறோம். தலைமை கொடுத்த பணத்தை வைத்து, தொகுதிக்கு 2 லட்சம் பேருக்கு தலைக்கு 150 ரூபாய்தான் தரமுடியும். எப்படியாவது புரட்டி மேலும் 150 ரூபாய் சேர்த்து 300 கொடுத்து விடலாம் என்று நினைத்தால், அதிமுக வேட்பாளர்கள் குறைந்தபட்சமே 500 கொடுத்துள்ளனர். அதனால் நாங்களும் ஓட்டுக்கு 500 கொடுக்கலாம் என்று நினைத்தால், உடனடியாகப் பணத்தைத் தேற்ற முடியவில்லை. அடுத்தடுத்து ஐ.டி.ரெய்டு வருவதால், பலரும் எங்களுக்குப் பணம் தரவே பயப்படுகிறார்கள்.

ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல் விட்டுவிட்டால், சென்ற முறையைப் போலவே சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியை இழந்து விடுவோமோ என்ற பயம் இருக்கிறது. இதனால் அவசரத்துக்கு நகையை விற்று, வீடு, சொத்துக்களை அடமானம் வைத்து பணத்தைப் புரட்டிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் மூன்றாம் தேதியிலிருந்து பணப்பட்டுவாடா செய்ய ஆரம்பித்தோம். ஆனால் அதற்கு முதல் நாளே அதிமுக வேட்பாளர்கள் பணம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் பணம் கொடுப்பதற்கு போலீசாரே ஒத்துழைப்புக் கொடுக்கின்றனர். அதேநேரத்தில் நாங்கள் பணம் கொடுப்பதைத் தடுப்பதிலேயே தீவிரமாக இருக்கின்றனர். இதனால் கஷ்டப்பட்டு பணத்தைத் தயார் செய்து, அதையும் வாக்காளர்களுக்குக் கொடுக்காமல் பறிபோய் விடுமோ என்ற அச்சமும் எங்களுக்கு இருக்கிறது. இப்படி பல விதமான நெருக்கடிகளைச் சந்திக்கிறோம்.

வேட்பாளராக அறிவிக்கும் வரை, எங்களில் பலர் பணத்துக்கு எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. நேர்காணலில் கட்சித்தலைமை கேட்டபோது, ‘செலவழிக்கத் தயார்’ என்று கூறிவிட்டோம். ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது பணத்தைப் புரட்டுவதும் கடன் வாங்குவதும் அவ்வளவு எளிதான விஷயமாக இல்லை. அதிமுகவினர் அதில் பி.எச்.டி., முடிக்கும் அளவுக்கு அனுபவம் பெற்றிருக்கிறார்கள்.’’ என்று குமுறித் தீர்த்தார்கள்.

அதிமுக வேட்பாளர்கள் அமோகமாக பணம் செலவழிப்பது குறித்து தேர்தல் செலவினம் குறித்த தகவல்களைத் திரட்டி தேர்தல் ஆணையத்துக்குத் தரும் முக்கியப் பொறுப்பிலுள்ள சென்னையிலுள்ள போலீஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்...

‘‘ஆளும்கட்சியினர் அதிகமாகப் பணம் செலவழிப்பதும், அவர்களுக்கு ஆதரவாக காவல்துறையினரும், பிற துறை அதிகாரிகளும் நடந்து கொள்வதும் வாடிக்கையாக நடக்கும் விஷயம்தான். ஆனால் 2016 தேர்தலை ஒப்பிட்டால் இப்போதுள்ள பல அதிகாரிகள், ஆளும்கட்சிக்கு மட்டுமே ஆதரவாக இருப்பதாகச் சொல்ல முடியாது. இருப்பினும் அவர்களும் ஏதோ ஒரு விஷயத்துக்காக இதைக் கண்டு கொள்வதில்லை. தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் பணம் கொடுப்பதைப் பற்றித்தான் எக்கச்சக்கமான தகவல்கள் வருகின்றன. அதிலும் அமைச்சர்கள் தொகுதிகளில் புழங்கும் பணம் எங்களையே அதிர வைக்கிறது.

அமைச்சர் சம்பத் போட்டியிடும் கடலுார் தொகுதியில் கடலளவு காசு புரண்டாலும் கையளவு கூட அங்கு பிடிக்கப்படவில்லை. அந்தத் தொகுதியில் திமுக, அதிமுக இரண்டு கட்சியினரும் பணப்பட்டுவாடா செய்வதற்கு காவல்துறையினரே மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை என்று நேரம் ஒதுக்கித் தந்திருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அதற்காக அவர்களுக்கு ஒரு தொகையும் தரப்பட்டுள்ளது. அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதை அறிந்த அங்குள்ள திமுக,வினரும் கண்டுகொள்ளவில்லை.

அங்கே பணத்தைப் புரட்டுவதற்கே பயிற்சி கொடுத்திருக்கிறார் அமைச்சர் சம்பத் மகன் பிரவீன். சென்னை, பண்ருட்டி, புதுச்சேரி, கடலூர் பகுதியில் உள்ள இளைஞர்களை அழைத்து அவர்களுக்குப் பயிற்சியும் கொடுத்து இரண்டாயிரம் நோட்டுகளை மாற்றியிருக்கிறார். அதற்கு வங்கி அதிகாரிகள் சிலரும் உதவியுள்ளனர். அதற்காக 3 சதவீதம் கமிஷனும் கொடுத்திருக்கிறார்கள். இரண்டாயிரம் ரூபாய் நோட்டையும், இரட்டை இலைச் சின்னத்தின் நோட்டீசையும் சுருட்டி ரப்பர் பேண்டு போட்டு மின்னல் வேகத்தில் வீடு வீடாக சப்ளை செய்து விட்டார்கள். அந்தத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஐயப்பனும் ஓட்டுக்கு 500 ரூபாய் என்று 80 சதவீத வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்துவிட்டார். இவர்கள் இருவருமே பறக்கும் படை, காவல்துறை அதிகாரிகள் என எல்லோரையும் கவனித்திருக்கிறார்கள்.

அமைச்சர் வேலுமணியின் தொண்டாமுத்துார் தொகுதியில் கூகுள் பே, பேடிஎம், மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கடன்களுக்கு செட்டில்மென்ட் என பலவிதமாக பணம் பகிரப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. ரிசர்வ் பாங்க் நினைத்தால்தான் அதை ஆய்வு செய்ய முடியும். அதைத்தான் அங்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியும் கேட்கிறார். அங்கேதான் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு வீட்டுக்கு 2 கிராம் மூக்குத்தி கொடுத்திருப்பதாகத் தகவல் சொல்கிறார்கள். அங்கு ஒரு கல்லுாரியில் வைத்துத்தான் பணம் எல்லோருக்கும் பட்டுவாடா நடந்திருக்கிறது. இஸ்லாமிய இளைஞர்கள் சிலரையே இதற்குப் பொறுப்பாகப் போட்டிருக்கிறாராம். அவர்களைத் தடுத்தால், திமுகவுக்கு விழும் இஸ்லாமிய வாக்குகள் போய்விடும் என்பதால் திமுகவினர் செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.

அதேநேரத்தில் பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் கொடுத்த பணத்தில் கட்சி நிர்வாகிகள் நிறையவே கையும் வைத்திருக்கின்றனர். பண்ருட்டி அதிமுக வேட்பாளர் சொரத்தூர் இராஜேந்திரன் ஓட்டுக்கு 500 வீதம் கொடுத்து அனுப்ப, பாதியை கட்சி நிர்வாகிகள் கமுக்கமாக அமுக்கி விட்டார்கள். அதே தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ஓட்டுக்கு 300 வீதம் கொடுக்க, அது முழுதாகப் போய்ச்சேர்ந்திருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி, ஓட்டுக்கு 500 என்று கணக்குப் போட்டு பணம் கொடுத்திருக்கிறார். கட்சிக்காரர்கள் போதாது என்று கொந்தளிக்கவே, மேலும் இரண்டு கொடுத்துச் சமாளித்திருக்கிறார். அதிலும் பெரும் தொகையை அங்குள்ள நிர்வாகிகள் ஆட்டையைப் போட்டு விட்டதாகத் தெரிகிறது. அதே தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் பிரபு ராஜசேகர், ரொம்பவே விபரமாக கல்லுாரி மாணவர்களை வைத்து, ஓட்டுக்கு 300 ரூபாய் வீதம் கரெக்டாக பட்டுவாடா செய்திருக்கிறார். அந்தத் தொகுதியில்தான் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அமமுக வேட்பாளராக களம் இறங்கியிருக்கிறார். தேர்தலுக்கு முன்பே வீட்டுக்கு ஒரு குக்கர் கொடுத்திருப்பதால் ஓட்டுக்கு 250 ரூபாய்தான் கொடுத்திருக்கிறார். அவருடைய மகன் எழில்மறவன் தலைமையில் சைக்கிள் மற்றும் பைக் டீம் அமைத்து அந்தந்தப் பகுதி நிர்வாகிகள் துணையோடு வீடு வீடாகக் கொடுத்திருக்கிறார்கள்.

பாலக்கோடு தொகுதியில் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கேபி.அன்பழகன் சார்பில் ஓட்டுக்கு ஆயிரம் என்று கொடுத்திருக்கிறார்கள். அங்கே அதிமுகவினருக்கும், பாமகவினருக்கும் இடையில் இந்தப் பணத்தைப் பட்டுவாடா செய்வதில் பயங்கரப் பிரச்சினையாகியுள்ளது. கடைசியில் பல பகுதிகளுக்கு ஓட்டுக்கு 500 தான் போய்ச்சேர்ந்திருக்கிறது. பல ஊர்களுக்கு அதுவும் போகவில்லையாம். கட்சி நிர்வாகிகளைக் கூப்பிட்டுக் கண்டித்த அமைச்சர், ‘‘உங்களுக்கு என்ன தேவையோ அதை நான் செய்கிறேன் பத்தலைன்னா கேட்டு வாங்கி்க்கோங்க. ஓட்டுக்காசுல கை வச்சிராதீங்க’’ என்று கொதித்திருக்கிறார்.

இப்படியாக 234 தொகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான தகவல்கள் எங்களுக்கு வந்திருக்கின்றன. அவற்றை எல்லாம் பில்டர் செய்துதான் தேர்தல் ஆணையத்துக்கு பாஸ் செய்து கொண்டிருக்கிறோம். ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. தமிழகம் முழுவதும் இந்தத் தேர்தலுக்கு பல ஆயிரம் கோடி கருப்புப் பணம் கரை புரட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. காவல்துறை அதிகாரிகள், தேர்தல் ஆணையத்துக்காக வேலை பார்க்கும் அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் இதில் பங்கு இருக்கிறது. பெரும்பாலானவர்கள் இதில் பயன் பெறுகிறார்கள். பலர் பார்த்தும் பார்க்காமல் இருக்கிறார்கள்” என்றார்கள்.

-பாலசிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக