திங்கள், 5 ஏப்ரல், 2021

ஓட்டுக்கு "ஒழுங்கா" பணம் கொடுங்க.. பொதுமக்கள் சாலை மறியல்! நடுங்கிப்போன நாமக்கல்

 Veerakumar - tamil.oneindia.com : தமிழக அரசியலில் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற ஒரு சம்பவம்.
அதிமுக சரியாக ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி சாலை மறியல் செய்து பரபரப்பை கிளப்பி உள்ளனர் பொதுமக்கள்.
தமிழகத்தில் இதுவரை 420 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து முறைகேடுகளை தடுப்பதற்கு முயற்சி செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் ஒருபக்கம் கூறிவரும் நிலையில்,
இங்கு பொதுமக்களே பணம் கேட்டு சாலை மறியல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் என்ற பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.


அதிமுக சார்பில் ஓட்டுக்கு அங்கு பணம் கொடுக்கப்படுகிறதாம். ஆனால் ஒரு சிலருக்கு கொடுக்கப்பட்டு ஒரு சிலருக்கு அது கிடைக்கவில்லை.
வந்துச்சி பாருங்க கோபம் இதனால் "கடும் கோபமடைந்து " கொதித்துப் போயினர் ஊர்மக்கள்.
டூவீலரை எடுத்துக்கொண்டு நேராக ரோட்டுக்கு குறுக்கே நிப்பாட்டி ஒழுங்காக பணத்தை தருகிறீர்களா இல்லையா என்று கோஷம் போட ஆரம்பித்தனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பணத்தை கொடுங்க பணத்தை கொடுங்க தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களை கலைந்து போக சொல்லி அறிவுறுத்தினர். ஆனால், பணம் கிடைக்கும் என்று உறுதிமொழி தந்தால்தான் கலைந்து போகும் என்று ஊர்மக்கள் விடாப்பிடியாக சொல்ல..
போலீஸார் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இதையடுத்து பொது போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்ததற்காக மூன்றுபேரை காவல் நிலையம் அழைத்து சென்றனர் போலீசார். இதன் பிறகு ஓரளவு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்று தெரிந்திருந்தும் பொது வெளியில் வந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி பணம் கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .   நடைமுறை தேர்தலில் பணம் பெற்றுக் கொண்டு ஓட்டு போடுவது என்பது ஒரு வாழ்வியல் நடைமுறையாக மக்களின் மனதில் மாறிப் போய் விட்டது
இந்த அதிர்ச்சி சம்பவம் உறுதி செய்கிறது. இப்படியான சூழ்நிலை நிலவினால், சுயேச்சைகளும், புதிதாக வந்த கட்சிகளும் எப்படி மக்களின் வாக்குகளை பெற முடியும். இது எப்படி சரியான போட்டியாக இருக்க முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக