வியாழன், 22 ஏப்ரல், 2021

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை... ஐகோர்ட்டில் அரசு தகவல்

maalaimalar : சென்னை: ரெம்டெசிவிர் மருந்து தனி நபர்களுக்கு வழங்கப்படுவதாகவும், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், வென்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளது என்றும் ஒரு பத்திரிகையில் இன்று செய்தி வெளியானது. அந்த செய்தியை அடிப்படையாக வைத்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு தாமாக முன்வந்து பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது பின்னர், இன்று காலையில் கோர்ட்டு தொடங்கியதும், இதுகுறித்து அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணனிடம் நீதிபதிகள் தகவல் தெரிவித்தனர். மற்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழகத்திலும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தின் நிலையை அறிய விரும்புவதாக அட்வகேட் ஜெனரலிடம் நீதிபதிகள் கூறினர். இந்த வழக்கு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று, இன்று பிற்பகல் தெரிவிக்கும்படி கூறினர்.

அதன்படி இவ்வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

‘தமிழகத்தில் மருத்துவ பதற்ற நிலை எதுவும் நிலவவில்லை. 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது. சிகிச்சை அளிக்க தேவையான அளவு இருப்பு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் 31000 ரெம்டெசிவிர் மருந்து இருப்பு உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து இல்லை, அரசிடம் உதவி கேட்டுள்ளார்கள்’ என்றும் தமிழக அரசு பதில் மனுவில் கூறி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக