வியாழன், 22 ஏப்ரல், 2021

பிச்சை எடுங்கள், திருடுங்கள், எதையாவது செய்து உயிர்களை காப்பாற்றுங்கள்” – ஆக்சிஜன் தட்டுப்பாடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம்

BBC :கொரோனா வைரஸ் உச்சத்தை தொட்டு கடுமையான தாக்கத்தை நாடு முழுவதும் பரவலாக ஏற்படுத்தி வரும் வேளையில்,
ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உயிர்களை காக்க பிச்சை எடுத்தோ திருடியோ, எதையாவது செய்தோ உயிர்களை காப்பாற்றுங்கள் என்று உணர்ச்சிபூர்வமாக கருத்து தெரிவித்திருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம்.
இது தொடர்பாக புதன்கிழமை மாலை மற்றும் இரவில் நடந்த விசாரணை முடிவில், தங்குதடையின்றி ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்ய மத்திய அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதையடுத்து,
 வழக்கின் விசாரணையை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை சமாளிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை மாலையில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.


நீதிபதிகள் விபின் சாங்வி, ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய அமர்ந்த இந்த மனுக்களை விசாரித்தது. அப்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நூற்றுக்கணக்கான நோயாளிகளின் உயிர் பறிபோகும் ஆபத்தை உணர்ந்தபோதும் இந்த தட்டுப்பாட்டை சமாளிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், ஆக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்தி தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் இரும்பாலை உற்பத்தி நிறுவனங்கள் உடனடியாக அந்த சிலிண்டர்களை தொழிற்சாலை தேவைக்காக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து மத்திய அரசின் தொழிற்துறை செயலாளர் ஆஜராகுமாறு உத்தரவிட்டு வழக்கை இரவு 9.20 மணிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அடுத்த மூன்று மணி நேரத்துக்குள்ளாக டெல்லியின் அண்டை மாநிலங்களுக்குள்ளாக சம்பந்தபபட்ட மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து இரவு 9.20 மணிக்கு நீதிபதிகள் அமர்வு மீண்டும் கூடியபோது, தொழிற்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஆஜரானார். துறைச் செயலாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதால் அவரது சார்பில் தாம் ஆஜராவதாக கூடுதல் செயலாளர் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

இதேவேளை, மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

மத்திய அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை தொடர்பு கொண்டு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் என்று துஷார் மேத்தா குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “டெல்லி மேக்ஸ் பட்பர்கஞ்ச் மருத்துவமனையில் மட்டும் இதுபோன்ற நிலைமை கிடையாது. பல மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது. எல்லா மருத்துவமனைகளாலும் நீதிமன்றத்துக்கு வர முடியாது. மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் தேவை ஐந்து மடங்கு உயர்ந்துள்ளதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை,” என்று கூறினர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

“எல்லா அதிகாரமும் என்னிடம் இல்லை”

இதையடுத்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “சில விஷயங்களில் அதிகாரிகளால் மட்டும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. அரசின் உயரிய அளவில் இது பற்றி விவாதித்து முடிவெடுக்க வேண்டும். தற்போது அந்த தனியார் மருத்துவமனையின் நிலைமை சமாளிக்கப்படும் அளவில் உள்ளதால் ஒரு நாள் அவகாசம் கொடுத்தால் அரசிடம் பேசி அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகிறேன்,” என்று கூறினார்.

ஆனால், அவரது பதிலால் திருப்தியடையாத நீதிபதிகள், “ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீங்கள் சமாளிப்பதற்குள் எண்ணற்ற உயிர்களின் நிலை கேள்விக்குரியாகலாம். எதையாவதுசெய்யுங்கள். அதை உடனடியாக செய்யுங்கள். ஆக்சிஜன் கையிருப்பில் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் கேளுங்கள், பிச்சை எடுங்கள், கெஞ்சிக் கேளுங்கள், திருடுங்கள், என்னவெல்லாம் முடியுமோ அதை உடனே செய்யுங்கள்,” என்று உணர்ச்சி பொங்க நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதேவேளை டெல்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகுல் மேத்தா, “நாளை பொழுது விடியும்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு மருத்துவமனைகளுக்கு ஏற்படாது என்ற உத்தரவாதத்தை மாநில அரசால் வழங்க முடியாது,” என்று கூறினார்.

தனியார் மருத்துவமனை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தீப் சேத்தி, மேக்ஸ் மருத்துவமனை வைஷாலி, குருகிராம் ஆகியவற்றில் வெறும் எட்டு மணி நேரத்துக்கான ஆக்சிஜன் மட்டுமே உள்ளது என்று முறையிட்டார்.

இதைத்தொடர்ந்து பேசிய மத்திய அரசின் கூடுதல் செயலாளர் சுமித்ரா தாவ்ரா, “நமது நாட்டில் ஒரு நாளைக்கான மருத்துவம் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தி 7,200 மெட்ரிக் டன் ஆக இருந்தது. இப்போது அது 8,000 மெட்ரிக் டன் ஆகியிருக்கிறது,” என்றார்.

“மகாராஷ்டிரா, குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆக்சிஜன் அரிதாகவே தொழிற்சாலை தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய நெருக்கடியை சமாளிக்க இரும்பாலை உற்பத்திக்காக வைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவ பயன்பாட்டுக்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன,” என்று சுமித்ரா தாவ்ரா தெரிவித்தார்.

ஒவ்வொரு இடத்தில் இருந்தும் ஆக்சிஜனை கொண்டு வந்து விநியோகம் செய்ய நேரமும் காலமும் குறைவாக உள்ளது. இன்று 140 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஃபரிதாபாத் ஆலையில் வெறும் 60 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்சிஜனை நிரப்ப அனுமதிக்கப்பட்டது. சுமார் 8 மணி நேரமாக அங்கிருந்து வாகனம் நகர அனுமதிக்கப்படவில்லை என்று வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா கூறினார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எந்த பொறுப்பையும் ஏற்கத்தயங்கினால் பிறகு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது டெல்லி அரசின் வழக்கறிஞர், தலைநகர் டெல்லிக்கு 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால், அது எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை என்று கூறினார்.

இதையடுத்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அடுத்த இரண்டு நாட்களுக்குள் அது வந்து சேரும். பல இடங்களில் மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் டாங்கர்களை கொண்டு வருவதில் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. என்றாலும், மத்திய துணை ராணுவ படை பாதுகாப்புடன் ஆக்சிஜன் டாங்கர்கள் பாதுகாப்புடன் வர வழிவகை செய்யப்படும் என்று உறுதியளிக்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.

இந்த வழக்கு விசாரணை இரவு 10.30 மணியைக் கடந்து நடந்த அதே வேளை, டெல்லி ஷாலிமார் பாக், பட்பர்கஞ்ச் ஆகிய இடங்களில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஆக்சிஜன் விநியோகத்துக்கான உத்தரவாதத்தை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் வழங்கியதையடுத்து, வழக்கின் விசாரணையை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக