வியாழன், 1 ஏப்ரல், 2021

கோவையில் பாஜக-வினர் கலவரம் ! உன்னால் ஆனதைப் பார் : தமிழக மக்களுக்கு பாஜக சவால் !!

May be an image of one or more people
வினவு செய்திப் பிரிவு : பிரதமர் மோடி நேற்று (30-03-2021) தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார். அடுத்தபடியாக மீண்டும் ஏப்ரல் 2-ம் தேதியன்று மதுரையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் மோடி கலந்துக் கொள்ள இருக்கிறார். ஏப்ரல் 1-ம் தேதியன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  “ஐ.பி.எஸ்.” அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இவற்றையெல்லாம் விட  மிக முக்கியமாக இன்று (மார்ச் 31) கோவையிலும் விருதுநகரிலும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்  உத்தரப் பிரதேச முதல்வரான ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத்.

கொலை, கலவரம் செய்தல், கடவுள் பெயரால் ஊரை ஏமாற்றுவது ஆகியவற்றையே தொழிலாகக் கொண்ட ஒரு தொழில்முறை ரவுடி சாமியாரை முதல்வராகப் பெற்ற பரிதாபத்துக்குரிய மாநிலம் உத்தரப் பிரதேசம். தாம் பெற்ற முதல்வருக்கு ஏற்றவாறான “வெகுமதியை” போலீசின் போலி மோதல் கொலைகளாகவும், சங்க பரிவாரக் கும்பலின் அடாவடிகளாகவும், லவ் ஜிகாத் சட்டம் போன்ற மனிதகுல விரோதச் சட்டங்களாகவும் அந்த மக்கள் பெற்று வருகின்றனர்.

மாநில தேர்தல் என்ற அளவில் எடுத்துக் கொண்டால், அந்தந்த தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க அனைவரும் அறிந்த பிரபலங்களை அழைத்து வந்து பிரச்சாரம் செய்யச் சொல்வார்கள். ஆனால் பாஜக-வில் தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு யாரென்றே தெரியாத, யாருக்கும் புரியாத ‘பாஷை’ பேசும் இந்த ரவுடி சாமியாரை பிரச்சாரத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது தமிழக பாஜக.

மக்களுக்கு பரிச்சியமான பிரபலமாக இல்லை என்றாலும், ஏதேனும் ஒரு துறையில் சாதித்தவரை கூப்பிட்டு வந்து பிரச்சாரம் செய்யலாம். நமது யோகி ஆதித்யநாத், ஒரு முதலமைச்சர் என்ற வகையில் அவர் என்ன சாதித்திருக்கிறார் ?

இந்தியாவின் மிகவும் பின் தங்கிய மாநிலமாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் முதன்மை மாநிலமாகவும் உத்தரப் பிரதேசத்தை மாற்றியிருப்பது மட்டுமே அவரது “சாதனை”.

அரசு மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாத காரணத்தால் ஒரே நாளில் கொத்துக் கொத்தாக குழந்தைகளை பலி கொடுத்த ஒரு மாநிலத்திலிருந்து, இந்திய அளவில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பிடம் பெற்ற தமிழகத்திற்கு வந்து, நாம் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று வகுப்பெடுக்கிறார் யோகி ஆதித்யநாத்.

திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு பெண்கள் குறித்த அக்கறை கிடையாது என்று கூறிய யோகி ஆதித்யநாத், பொள்ளாச்சி பாலியல் வன்முறை இழிபுகழ் அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஆதரவு கேட்டிருக்கிறார்.  இந்தியாவிலேயே அதிகமாக பெண்கள் மீதான வன்முறையும் பாலியல் பலாத்காரமும் நடக்கும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்ய்நாத்தின் திருவாயிலிருந்து இது மலர்ந்திருப்பதுதான் சிறப்பு.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழகத்தில் பெருவாரியானவர்களுக்கு பரிச்சயமற்றவர் என்பதும் அறிந்தவர்களுக்கும் தமது இழிபுகழால்  மட்டுமே அறியப்பட்டவர் என்பதும் பாஜக தலைமை அறியாதது இல்லை. ஆனாலும் அவரை பிரச்சாரத்திற்கு அழைத்து வந்திருக்கிறது.

தமிழகத்திற்குள் மோடி நுழைந்தாலே “கோ பேக் மோடி” என தமிழக மக்கள் டிரெண்டிங் செய்யத் துவங்கிவிடுகிறார்கள் என்பதோடு, மோடியின் மீதான வெறுப்பு தமிழக மக்களிடம் பெருமளவில் இருக்கிறது என்பதும் பாஜக தலைமை அறியாதது அல்ல.

அவ்வளவு ஏன், பாஜக வேட்பாளர்கள் அனைவரும் தங்களது பிரச்சாரங்களில் கூட மோடியின் படத்தை ஒழித்துக் கட்டிவிட்டு, ஏ1 ஜெயா படத்தை மாட்டிக் கொண்டுதான் திரிகின்றனர். ஆனாலும் மோடி தைரியமாக “234 தொகுதிகளிலும் நான் போட்டியிடுவதாக நினைத்து அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என்று உரையாற்றுகிறார்.

இவர்களின் மீதான மக்களின் வெறுப்பு மேலோங்கியிருக்கையில் எந்த தைரியத்தில் அல்லது எந்தத் திமிரில் இவர்கள் யோகி, மோடி, அமித்ஷா ஆகியோரை தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு அழைத்து வருகின்றனர் ?  எந்தத் திமிரில் தேர்தல் அறிவிப்பு வந்த பின்னரும் கூட, இனி கலைக் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு என்ற அறிவிப்பை வெளியிட்டது மோடி அரசு ?

அதிகாரவர்க்கத்தில் தமது கைக்கூலிகளையும், கீழ் மட்டத்தில் ரவுடிகளையும் பொறுக்கிகளையும், வைத்து தமிழகத்தில் தமது அடித்தளத்தை விரிவுபடுத்த, தெளிவான திட்டத்துடன்தான் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக.

இன்றும் கூட யோகி வருகையை ஒட்டி கோவையின் நகர்ப்பகுதியில் ஊர்வலம் செல்லுகையில் வழியில் உள்ள கடைகளை எல்லாம் மூடச் சொல்லி வன்முறையில் ஈடுபட்டிருக்கிறது சங்க பரிவாரக் கும்பல். தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் எந்தக் கட்சியாவது மக்கள் முகம் சுளிக்கும் வண்ணம் வன்முறையில் ஈடுபடுமா ? ஆனால் பாஜக அதனைச் செய்திருக்கிறது.

மேலும், தங்களது காவிக் கொள்கையை தமது தேர்தல் வாக்குறுதிகளில் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறது பாஜக.

காணொலி : கோவையில் இன்று (31-03-2021) கடையை மூடச் சொல்லி சல்லித்தனம் செய்யும் சங்கிகள்

“நாங்கள் இப்படித்தான்.. உன்னால் ஆனதைப் பார்.. உனக்கு வேறு வாய்ப்பில்லை..  ”  என்று தமிழக மக்களை நோக்கி சவால்விடும் தொனியில்தான் பாஜகவின் இந்த நடவடிக்கைகள் இருக்கின்றன.  இது திராவிடத்திற்கு ஆரியம் விட்டிருக்கும் சவால். ஜனநாயகத்திற்கு பாசிசம் விட்டிருக்கும் சவால். இந்தக் கும்பலை களத்தில் வீழ்த்த மக்களை அணிதிரட்ட வேண்டிய வரலாற்றுக் கடமையை செய்ய வேண்டிய நேரம் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக