வியாழன், 1 ஏப்ரல், 2021

பா.ஜ.கவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது; தமிழகத்தில் தி.மு.க ஆட்சியமைக்கும்” - ஊடகவியலாளர் சாய்நாத் பேட்டி!

“பா.ஜ.கவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது; தமிழகத்தில் தி.மு.க ஆட்சியமைக்கும்” - ஊடகவியலாளர் சாய்நாத் பேட்டி!தீக்கதிர் : நாட்டில் தேர்தல் நடைபெறுகிற அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.கவுக்கு உதவுவதற்காக மத்திய ஏஜென்சிகள் வரிந்துகட்டிக் கொண்டு இறங்கியுள்ளன என்கிறார் பி.சாய்நாத். இவர் கிராமப்புற மக்களின் வாழ்க்கைச் செய்திகளை வெளிக்கொணரும் பிரபல ஊடகவியலாளர்; மகசேசே விருதுபெற்றவர். இவ்வளவு மோசமாக நடந்துகொள்ளும் ஒரு தேர்தல் கமிஷன் அண்மைக் காலத்தில் இருந்ததில்லை என்கிறார். மிக அதிகமாய் பலவீனமாக்கப்பட்ட மத்திய ஏஜென்சிகளில் ஒன்றுதான் தேர்தல் கமிஷன் என்கிறார்.

பி.சாய்நாத், பிரபல மலையாள நாளேடான ‘மாத்ருபூமி’யின் இணையப் பதிப்புக்கு அளித்த சிறப்பு நேர்காணல் பின்வருமாறு:

நீண்ட நாட்களாக நான் மேற்கு வங்கத் தேர்தலில் கவனம் செலுத்தாததால் அங்கு இருக்கிற நிலைமையை சரியாக அறிந்துகொள்ளவில்லை. மேலும், இப்போது ஊடகங்களில் வருகிற பலவும் நம்ப முடியாதவையாக இருப்பதால் ஊடகங்கள் சொல்வதை மட்டுமே பார்த்து வெற்றி வாய்ப்பைப் பற்றி என்னால் கூறமுடியவில்லை. மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாடுகளையே கார்ப்பரேட் ஊட கங்களில் பலரும் வெளிப்படுத்துகிறார்கள்.

ஆனால், கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள சூழலை மிக எளிதாகச் சொல்லிவிட முடியும். இந்த இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.கவுக்குப் பெரும்பாலான இடங்களிலும் டெபாசிட் கூடக் கிடைக்காது. கேரளத்தில் பா.ஜ.கவுக்கு இரண்டு இடங்களுக்கு மேல் வெற்றி வாய்ப்பு தெரியவில்லை. தமிழ்நாட்டில் பல இடங்களில் பா.ஜ.க போட்டியிட்டாலும் எல்லா இடங்களிலும் மிக மோசமான தோல்வியையே அது சந்திக்கும். தி.மு.க கூட்டணி இந்த முறை பெரும் வெற்றி பெறும் என்றே நான் கருதுகிறேன்.

புதுச்சேரியின் நிலைமை வித்தியாசமானது. தமிழ்நாட்டில் இருப்பது போன்ற நிலைமை அங்கு இல்லை. பிரத்யேகமான கூட்டணிகள் அங்கு செயல்படுகின்றன. அசாமில் பா.ஜ.க எதிர்ப்புக் கூட்டணி சிறந்த வேட்பாளர்களை போட்டியிட வைத்துள்ளது. அதனால் பா.ஜ.கவுக்கு அங்கு கடந்தமுறை இருந்தது போன்று விஷயங்கள் அவ்வளவு எளிதாக இல்லை என்றே நான் கருதுகிறேன்.

மேற்கு வங்கத்தில் வர்க்க அடிப்படையிலான அரசியலிலிருந்து சாதி, மத அடிப்படையிலான பிளவு நிலைக்குத் தோற்றம் மாறியிருக்கிறது. இப்போது கார்ப்பரேட் சக்திகள் தேர்தல் களத்தில் உள்ளன. ஊழலும் இப்போது அதிக வலுப்பெற்றுள்ளது. கேரளம் நாட்டின் மற்ற மாநிலங்களைவிட மிகவும் முன்னிலையில் உள்ளது. சபரிமலை விஷயம் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.கவுக்கு பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படுத்தி விடவில்லை.

பா.ஜ.கவுக்கு உதவியாக மத்திய ஏஜென்சிகள்

வங்கத்தில் திரிணாமுல் தலைவர்களுக்கு எதிராக ரெய்டு நடந்தது உண்டு. ஆனால், சாரதா சிட்பண்ட் கம்பெனி ஊழலில் சிக்கிய பிறகு பாஜகவுக்கு கட்சி மாறிய முக்கியமான திரிணாமுல் தலைவர்களுக்கு எதிராக ரெய்டோ, விசாரணையோ எதுவும் நடைபெறவில்லை. ஊழலில் மிகவும் கரை புரண்டு, பிறகு பா.ஜ.கவில் போய்ச் சேர்ந்த எல்லோருக்கும் எல்லா பாதுகாப்பும் கிடைக்கிறது.

நாட்டின் எல்லா இடங்களிலும் தேர்தல் நடைபெறுகிற எல்லா மாநிலங்களிலும் எல்லா மத்திய ஏஜென்சிகளும் மத்திய அரசின் ஆணையம் பா.ஜ.கவுக்கு உதவுவதற்காக வரிந்துகட்டிக் கொண்டு இறங்கியுள்ளன. இவ்வளவு மோசமாகச் செயல்படும் தேர்தல் பிரச்சாரமாக அண்மைக் காலத்தில் இருந்ததில்லை என்றே சொல்லலாம். ஒரு கட்சிக்காக மத்திய அரசின் எல்லா ஏற்பாடுகளும் ஏஜென்சிகளும் செயல்படுகின்றன. அதனால் கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டின் தேர்தல் சூழல் மாறிவிட்டது என்றே நான் கூறுகிறேன்.

பல மாநிலங்களிலும் தேர்தலில் தோல்வியடைந்த பா.ஜ.கவே அதிகாரத்தில் ஏறியதை நாம் கண்டோம். பெரும்பான்மை கிடைக்காத கர்நாடக மாநிலத்தில் அவர்கள் ஆட்சியமைத்தார்கள். கோவாவில் காங்கிரஸை விடக் குறைவான சீட்டுகள்தான் பாஜகவுக்குக் கிடைத்தன. ஆனால் பா.ஜ.க, காங்கிரஸை உடைத்து ஆட்சியைக் கைப்பற்றியது.

சொந்த கூட்டணியில் உள்ள எம்.ஜெ.பி கட்சியையே உடைத்து அதிகாரத்தைத் தனக்கு உறுதிசெய்து கொண்டது. மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க கூட்டணி தோற்றுவிட்டாலும் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவைப் பயன்படுத்தித் தேர்தலைச் சீர்குலைக்க முயன்றனர். தோற்றாலும் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்பது இப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் பார்க்கிற விஷயமாகி விட்டது.

நன்றி - தீக்கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக