திங்கள், 12 ஏப்ரல், 2021

அதிமுகவின் தோல்வி... அதுவே அமமுகவின் வேள்வி! தினகரனின் 160 தொகுதி இலக்கு திட்டம் ஜெயிக்குமா?

அதிமுகவின் தோல்வி... அதுவே அமமுகவின் வேள்வி! தினகரனின் 160 தொகுதி இலக்கு திட்டம் ஜெயிக்குமா?

 minnambalam :நம்பிக்கைதானே வாழ்க்கை. நடந்து முடிந்த தேர்தல், மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரங்களை உருவாக்கப் போகிறதோ இல்லையோ, பல நட்சத்திரங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. கமலும், சீமானும் எப்படியாவது ஏழெட்டு சதவிகிதம் வாக்குகளை வாங்கி, அடுத்த தேர்தலுக்குள் ஒரு மெகா கூட்டணிக்குத் தலைமை வகிப்பதற்கான அடித்தளத்தை அமைத்து விடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். மற்றொரு புறத்தில் ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு, அடுத்த முதல்வர் நாம்தான் என்ற நம்பிக்கையில் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே ஆட்சியைக் குறிவைத்து தேர்தலைச் சந்தித்திருக்கிற சூழ்நிலையில், ஒரே ஒருவர் மட்டும் ஒரு கட்சியைக் குறி வைத்து தேர்தலைச் சந்தித்திருக்கிறார். யாரென்று யூகித்திருப்பீர்கள்... தினகரனேதான்.

தன்னுடைய கட்சி ஜெயிக்க வேண்டுமென்பதற்காக மட்டுமே எல்லாத் தலைவர்களும் களத்தில் நிற்கும்போது, தன்னைச் சேர்க்காத கட்சி தோற்க வேண்டுமென்பதற்காகவே களத்தில் கடுமையாகப் போராடினார் தினகரன். இந்த முறை பல முக்கியமான கட்சிகளையும் சேர்த்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு, சசிகலாவை வைத்து திமுக, அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரத்தைச் செய்வதென்றும் அவர் திட்டம் வகுத்திருந்தார். ஆனால் சசிகலா அரசியலை விட்டு விலகுவதாகக் கூறியதும், அவருடைய திட்டங்கள் தவிடுபொடியாகின. அதற்குப் பின் அவர் எப்படி அதிலிருந்து மீண்டார், தேர்தலை எந்த நம்பிக்கையோடு சந்தித்தார், தேர்தலுக்குப் பின் அவருக்குக் கிடைத்துள்ள தகவல்கள் என்ன என்பது பற்றியெல்லாம், தினகரனின் அசைவுகள் அனைத்தையும் அறிந்த அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர்கள் சிலர் நம்மிடம் விளக்கினர்...

‘‘சின்னம்மா (சசிகலா) அரசியலை விட்டு விலகுவதாகக் கூறியதும், தினகரன் அவ்வளவுதான் என்று அதிமுக தலைவர்கள் பலரும் நினைத்தார்கள். அதனால்தான் அவருடன் தொடர்பில் இருந்த அதிமுக நிர்வாகிகள் சிலரும்கூட, அதற்குப் பின் அவரைப் புறக்கணிக்க ஆரம்பித்தனர். தமிழக அரசியலில் அவர் அளவிற்கு ‘மிஸ்டர் கூல்’ ஒருவரைப் பார்க்கவே முடியாது. கடந்த நான்காண்டுகளில் அவர் சந்தித்த பிரச்சினைகள் எத்தனையோ. அத்தனையிலும் மீண்டு எழுந்து வந்ததுபோல, இப்போதும் சட்டென்று எழுந்துவந்தார்.

அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுக்க விரும்பாத சின்னம்மாவின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அவரைப் போய்ச் சந்தித்து, ‘பிரச்சாரத்துக்கு வராவிட்டாலும் பரவாயில்லை; அட்லீஸ்ட் ஜெயா டிவியில் தேர்தலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுக்கச் சொல்லுங்கள்’ என்று கேட்டார். சின்னம்மாவும் ஒப்புக்கொண்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அதற்குப் பின்புதான், கூட்டணி பேச்சுவார்த்தைகளை வேகப்படுத்தினார். தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட சில கட்சிகளைச் சேர்த்து, ஓரளவுக்கு பெயர் சொல்கிறார்போல ஒரு கூட்டணியை அமைத்து, அவர்களுக்கு 75 தொகுதிகளைக் கொடுத்தார்.

மற்ற தொகுதிகள் அனைத்திலும் அமமுக வேட்பாளர்களைக் களம் இறக்கினார். அவர்களிலும் இரண்டு பேரை அதிமுக இழுத்துவிட்டது. அப்போதும் அவர் அசரவில்லை. இப்போதிருக்கும் சூழ்நிலையை வைத்து புதுவிதமாக தேர்தல் பணிகளைத் திட்டமிட்டார்.

வடக்கு மாவட்டங்களில் சராசரியாக தொகுதிக்கு 12,000 வாக்குகள் வாங்குவது, தென்மாவட்டங்களில் சில தொகுதிகளை ஜெயிப்பது, மற்ற தொகுதிகளில் இரண்டாமிடத்துக்கு வந்து மூன்றாவது இடத்துக்குத் தள்ளுவது... இதுதான் அவரின் திட்டமாக இருந்தது. பூத் கமிட்டிகளை அமைத்து அதிமுக பாணியிலேயே வேலைகளை வகுத்துக் கொடுத்தார். அமமுக போட்டியிட்ட தொகுதிகளை மூன்று பிரிவாகப் பிரித்தார்.

அதில் ‘ஏ’ கேட்டகிரியில் டாப் 10 தொகுதிகளைப் பட்டியலிட்டார். அவர் போட்டியிட்ட கோவில்பட்டி, பாபநாசம், பாப்பிரெட்டிபட்டி, திருப்பரங்குன்றம், முதுகுளத்தூர், குன்னூர், பொள்ளாச்சி, காரைக்குடி, உசிலம்பட்டி, திருவாடானை ஆகியவைதான் அந்த டாப் 10 தொகுதிகள்.

அடுத்ததாக ‘பி’ கேட்டகிரியில் 25 தொகுதிகள், ‘சி’ பிரிவில் 125 தொகுதிகள் என மொத்தம் 160 தொகுதிகளில் தீயாய் வேலைகளை முடுக்கிவிட்டார். அமமுகவை நம்பி போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரும் கடனாளியாகி விடக்கூடாது என்பதற்காக, டாப் 10 தொகுதிகளுக்கு தலா 5 கோடியும், பி பிரிவிலிருந்த 25 தொகுதிகளுக்கு தலா 3 கோடியும், சி பிரிவிலிருந்த 125 தொகுதிகளுக்கு தலா ஒரு கோடியும் கொடுத்தார். வாக்குப்பதிவு நாளன்றும், அதற்கு முதல் நாளும், அடுத்த நாளும் என தன்னுடைய கட்சி நிர்வாகிகளுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கிக்கொண்டே இருந்தார். எல்லாமே ஓரளவுக்கு சரியாகத்தான் நடந்தது. தேர்தல் முடிந்தபின், அவருக்கு வரும் தகவல்கள், அவரைக் கொஞ்சம் உற்சாகப்படுத்தியுள்ளன.

மாணிக்கராஜா, பழனியப்பன், கரிகாலன், ரங்கசாமி ஆகிய நாலு பேர்தான், தினகரனை எப்போதும் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் அனுமதிக்கப்பட்டவர்கள். மனோகரன், செந்தமிழன், மகேந்திரன், உமா தேவன் உள்ளிட்ட 10 பேர் அவ்வப்போது தொடர்பு கொண்டு பேசி தகவல்களைப் பரிமாறுவார்கள். இவர்களிடம் தினகரனின் உதவியாளர் ஜனா தொடர்ந்து விசாரித்துக் கொண்டேயிருந்தார். தொகுதி எப்படியிருக்கிறது, செலவுக்கு என்ன செய்கிறீர்கள் என்று மண்டலப் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு பேசினார். அவரிடம் பேசிய பல வேட்பாளர்கள், ‘தென்மாவட்டங்களில் பல தொகுதிகளுக்குள் அமைச்சர்கள் போகவே முடியவில்லை. ஆனால் நம்முடைய வேட்பாளர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சில கிராமங்களில் ‘நமது சமுதாயத்தைப் புறக்கணித்த அதிமுகவுக்கு இந்தத் தேர்தலில் ஓட்டுப் போட வேண்டாம்’ என்று ஊர்க்கூட்டமே போட்டு முடிவெடுத்துள்ளனர்’ என்று தகவல் கூறினார்கள்.

மேற்கு மண்டலத்திலுள்ள பொறுப்பாளர், ‘பல தொகுதிகளில் நாம் எதிர்பார்ப்பதைவிட நமக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கும். திமுக வந்தாலும் பரவாயில்லை; அதிமுக 25 தொகுதிகளை ஜெயிப்பதே கஷ்டம்’ என்று கூறியிருக்கிறார். தினகரனுக்கு நெருக்கமாக இருந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், இப்போது பணியிலிருக்கும் போலீஸ் அதிகாரிகள் சிலர், தினகரனிடம் தொடர்பு கொண்டு, ‘அமமுக ஆதரவில்தான் திமுக ஜெயிக்கப்போகிறது. அதை அவர்கள் நினைத்துப் பார்ப்பார்களா என்பது தெரியவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி பல தரப்பினரிடமும் பேசிய தகவல்களை வைத்து, ‘எப்படியும் 15 தொகுதிகளில் ஜெயிப்போம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தினகரன் அந்தளவுக்கு எதிர்பார்க்கவில்லை. அவர் கண்டிப்பாக ஐந்து தொகுதிகளில் ஜெயிப்போம் என்று நம்புகிறார். அவருடைய இந்த நம்பிக்கைக்கு தேமுதிக கூட்டணியில் வந்ததும் ஒரு முக்கிய காரணம். விஜயகாந்த் நன்றாக இருந்திருந்தால் இன்னும் அதிக வாக்குகள் வாங்கியிருக்க முடியும் என்று அவர் வருத்தப்பட்டார். 2011 தேர்தலில் தேமுதிகவை அதிமுகவுடன் கூட்டணி அமைக்க அம்மா மறுத்தபோதும் சின்னம்மா தீவிரமான முயற்சியால் கூட்டணியில் சேர்த்தார். அந்த நன்றியை பிரேமலதா மறுக்கவில்லை என்பதில் அவருக்கு ஒரு திருப்தி. கோவில்பட்டி, பாபநாசம், பாப்பிரெட்டிபட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் நிச்சய வெற்றி; திருவாடானை, பொள்ளாச்சி, உசிலம்பட்டி உள்ளிட்ட 15 தொகுதிகளில் இரண்டாவது இடம் வருவோம்; 45 தொகுதிகளில் 25 ஆயிரம் வாக்குகள் வாங்குவோம் என்பதுதான் அவருடைய இப்போதைய நம்பிக்கை!’’ என்று விவரித்தார்கள்.

தினகரன் ஜெயிப்பதும் தோற்பதும் அதிமுகவின் வெற்றி தோல்வியில்தான் இருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக