ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

கண்ணீர் விடும் மும்பை டப்பாவாலாக்கள்..! வாழ்க்கை மொத்தமாக நின்றுவிட்டது.. 130 ஆண்டுகால பாரம்பரிய தொழில்

 GoodReturns Tamil  : இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே மிகவும் பழமையான மற்றும் பெரிய அளவிலான டெக் உதவிகள் இல்லாமல் இயங்கும் ஒரு சிறப்பான டெலிவரி நெட்வொர்க் தான் மும்பையின் புகழ்பெற்ற டப்பாவாலா.
டப்பாவாலா டெலிவரி சேவை முறை சுமார் 130 வருடங்களாக இயங்கி வருகிறது,
இதில் பணியாற்றுவோர் தினமும் சுமார் 2,00,000 மதிய உணவு டப்பாக்களைச் சைச்கிள், லோக்கல் ரயில் ஆகியவற்றின் உதவிகளுடன் டெலிவரி செய்யும் மாபெரும் டெலிவரி நெட்வொர்க்.
ஆனால் கொரோனா தொற்றும், அரசு அறிவித்து வரும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஆகியவை டப்பாவாலா-க்களின் வர்த்தகத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது. குறிப்பாக டப்பாவாலா-க்கள் வாழ்க்கை தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.

 
கொரோனா லாக்டவுன் கொரோனா தொற்றுக் காரணமாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் காரணத்தால் பெருமளவிலான அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும் காரணத்தாலும், மக்கள் அதிகளவில் வீட்டிலேயே இருந்தே பணியாற்றும் காரணத்தால் மக்களுக்கு இவர்களின் தேவை இல்லாமல் உள்ளது.

130 வருட டப்பாவாலா இதன் காரணமாகச் சுமார் 130 வருட பழமையான டப்பாவாலாக்கள் சுமார் 90 சதவீத வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்களை இழந்து தவித்து வருகின்றனர். பொதுவாக டப்பாவாலா-க்கள் கிராம பகுதிகளில் இருந்து வருபவர்கள் இவர்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளில் உணவு டப்பாக்களைப் பெற்று அலுவலகங்கள், பள்ளிகளில் டெலிவரி செய்வது வழக்கம்.

மும்பையில் தற்போது கொரோனா 2வது அலையில் அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் இம்மாநில அரசு 144 தடை உத்தரவுடன் ஊரடங்கு முறையை அமலாக்கம் செய்துள்ளது. இதனால் டப்பாவாலா-க்களின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

5000 டப்பாவாலா ஊழியர்கள் டப்பாவாலா யூனியன் தலைவர் விஷ்ணு கார்டுகே கூறுகையில், தினமும் 5000 பேர் பணியாற்றி வந்த நிலையில் கொரோனா தொற்றுக் காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகளவில் இழந்த காரணத்தால் வெறும் 450 முதல் 500 பேர் வரையில் மட்டுமே தற்போது பணியாற்றுகின்றனர். இதனால் தற்போது எங்களின் வாழ்க்கை முழுமையாக நின்றுவிட்டது போல் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மார்ச் 2020 லாக்டவுன் டப்பாவாலா தளத்தில் பணியாற்றும் 5000 பேர் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு இதுதான் அடிப்படை வருமானமாக உள்ளது. மார்ச் 2020 பிரதமர் மோடி அறிவித்த லாக்டவுன் மூலம் அனைவரும் வேலைவாய்ப்பை இழந்தனர். இதனால் தற்போது இவர்கள் அனைவரும் கிடைக்கும் வேலைகளைச் செய்யத் துவங்கியுள்ளனர்.

சிலர் விவசாயம், சிலர் கட்டிட வேலை, பெரும்பாலானோர் மொத்தமாக மும்பை நகரை விட்டு வெளியேறி சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். இதனால் கொரோனா தொற்று அளவீடுகள் குறைந்த பின்பு இவர்கள் அனைவரும் மீண்டும் வேலைக்கு வருவார்கள் என்பது சந்தேகமாகவே உள்ளது. இதனால் டப்பாவாலா சேவையே கேள்விக்குறியாக உள்ளது.

20000 ரூபாய் வருமானம் டப்பாவாலா-க்கள் தோராயமாக மாதம் 20000 ரூபாய் அளவில் வருமானம் பெறுவார்கள், தினமும் 5000 டப்பாவாலா-க்கள் மும்பை நகரம் முழுவதும் சுமார் 2 லட்சம் லன்சு பாக்ஸ்-களை டெலிவரி செய்வார்கள். ஆனால் கொரோனாவும், லாக்டவுனும் டப்பாவாலா வர்த்தகத்தைத் தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளது

கடந்த 25 வருடத்தில் சந்திக்காத மிகவும் மோசமான நிதி நெருக்கடியிலும், வர்த்தகப் பாதிப்பிலும் டப்பாவாலாக்கள் சிக்கியுள்ள நிலையில் டப்பாவாலா யூனியன் மகாராஷ்டிர மாநில அரசிடம் நிதியுதவி கேட்டு உள்ளது. மத்திய அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு அதிகளவிலான சலுகைகள் அளித்து வரும் நிலையில் டப்பாவாலா-க்களுக்கும் உதவி செய்யலாம்

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் டப்பாவாலா டெலிவரி முறையில் கவர்ந்த காரணத்தால் 2003ஆம் ஆண்டு இந்திய பயணத்தில் டப்பாவாலாக்களைச் சந்தித்தார். 2 வருடத்திற்குப் பின் Camilla Parker Bowles உடன் நடந்த திருமணத்திற்குக் கூடச் சில டப்பாவாலா ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுக் கலந்துகொண்டனர்

இதுமட்டும் அல்லாமல் டப்பாவாலா டெலிவரி முறை குறித்து வியந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம் எப்படி டப்பாவாலா-க்கள் தினமும் சரியான நேரத்தில் மிகவும் குறைந்த செலவுகளில் டெலிவரி செய்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து கேஸ் ஸ்டெடியாக 2013ல் வெளியிட்ட போது டப்பாவாலா டெலிவரி முறை உலகளவில் பிரபலம் அடைந்தது

இப்படி உலகளவில் பிரபலம் அடைந்த மும்பை டப்பாவாலாக்கள் இன்று வர்த்தகம் இல்லாமல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். மேலும் இன்று அதிநவீன டெக் உதவிகளோடு நடைமுறையில் இருக்கும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற முன்னணி நிறுவனங்களின் டெலிவரி முறையை விடவும் டப்பாவாலா டெலிவரி முறை மிகவும் சிறந்தது. இதைக் காப்பாற்ற வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக