வியாழன், 18 மார்ச், 2021

கமல் Vs சமூக நீதி.. ஷாலின் மரியா லாரன்ஸ்!

May be an image of Shalin Maria Lawrence
 Shalin Maria Lawrence :  கடந்த வாரம் ஆங்கில டிஜிட்டல் நாளிதழின் பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசி கொண்டிருந்தேன்.அப்பொழுதுதான்
வேட்பாளர் அறிவிப்புகள் சுட சுட வந்துகொண்டிருந்தன.
அப்பொழுது இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இல்லாதது குறித்தும் மற்ற கட்சிகளில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆறு சதவிகிதத்துக்கும் கீழே இருப்பதை பற்றி விவாதம் எழுந்தது.(அப்பொழுது விசிக பட்டியல் வரவில்லை).
அப்பொழுது அவர் நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் சரி சமமாக பெண்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது பற்றி பேசினார்.
அப்பொழுது நான் சொன்னேன். இது வெறும் டோக்கனிசம்.
அதாவது பெயருக்கு ஒரு விஷயத்தை செய்வது. நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு இந்த தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்புகள் மிகக்குறைவு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.  கமலுக்காவது ஓரிரு இடங்களில் வெற்றி கிடைக்கும், சீமான் கட்சிக்கு அந்த வாய்ப்பு கூட கிடையாது. தாங்கள் எங்கேயும் நின்று வெற்றிபெற முடியாது என்று தெரிந்தே எல்லா தொகுதிகளிலும் போட்டி போடுகின்றனர். அது ஓட்டுக்களை பிரிப்பதற்காக மட்டுமே. அப்படிப்பட்ட சூழலில் அந்த இடங்களை பெண்களுக்கு கொடுப்பதில் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது தானே?
அதுமட்டுமல்ல பெரிய திராவிட கட்சிகளே பல வருடங்களாக எங்கே தோற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதோ அங்கேதான் பெண்களுக்கு சீட் கொடுப்பார்கள். அதே பார்முலாவை தான் இவ்விரு கட்சிகளும் ஃபாலோ செய்கின்றனர். இந்த தொகுதிகளில் எல்லாம் அவர்கள் ஜெயிப்பார்கள் என்கின்ற வாய்ப்பு இருந்தால் அவர்களும் மற்ற கட்சியை போலத்தான் நடந்து கொள்வார்கள், அங்கே சரிசமமான தொகுதி ஒதுக்கீடு நடக்காது.
ஆனால் அரசியலுக்கு இந்த பெண்கள் வந்தது நல்லதுதான். அதுவே முதல் படி. இருந்தாலும் இதுபோன்ற கட்சிகளில் களத்தில் வேலை பார்க்கும் சமூக செயற்பாட்டு பெண்களுக்கு இடங்களை கொடுக்காமல் சமூக அறிவும் ,அரசியல் தெளிவும் இல்லாத பெண்களுக்கே இந்த சீட்டுகளை வழங்குகிறார்கள். இது மிகவும் ஆபத்தான போக்கு. அதில் பல பெண்களுக்கு சமூக நீதி என்றால் என்ன என்று கூட தெரியாது. குறிப்பாக பத்ம பிரியாவுக்கு அரசியல் பற்றி எந்த புரிதலும் கிடையாது. அவரிடம் சென்று இட ஒதுக்கீடு பற்றியோ , காஷ்மீர் விவகாரம் பற்றியோ இல்லை வட கிழக்கு மாநிலங்களில் ராணுவத்தினால் பெண்கள் படும் அவஸ்தைகளை பற்றியோ கேள்வி கேட்டால் அவருக்கு பதில் சொல்லத் தெரியாது. இதைப் பார்க்கும் பலருக்கும் அரசியலுக்கு வரும் பெண்கள் அறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என்கின்ற தோற்றத்தை உருவாக்குகிறது. ஆனால் களத்திலேயே அறிவான ,சீட் கிடைக்காத பெண்கள் நிறைய இருக்கிறார்கள்.
பாஜகவை எடுத்துக்கொள்வோம் பெண்களுக்கு உரிமை வழங்குகிறோம் என்று நிர்மலா சீதாராமனை நிதி அமைச்சராக போடுவார்கள் . நிர்மலா பேருக்கு இருப்பார். அவருக்கு பொருளாதாரம் பற்றியோ நிதி பற்றியோ ஒன்றும் தெரியாது. இந்தியாவின் நிதிநிலை படு மோசமாகிக் கொண்டிருக்கும். பழியைத் தூக்கி மொத்தமாய் நிர்மலா சீதாராமனின் மேல் போடுவார்கள். பொருளாதாரத்தைப் பற்றி அறிவு இல்லாத நிர்மலா சீதாராமன் போன்றவர்களுக்கு அந்த பதவியை கொடுத்து அரசியலில் இருக்கும் பெண்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்கின்ற பிம்பத்தை பாஜக நிறுவ துடிக்கிறது. தமிழிசை கூட ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
இதுபோன்ற செயல்கள் ,அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவதை பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த வாதத்தை வலுவிழக்க செய்கின்ற விஷயங்கள். அதனால்தான் இது ஆபத்து என்று சொல்கிறேன்.
ஆனால் கூடவே கொஞ்சம் நப்பாசையும் இருக்கிறது. இந்தப் பெண்கள் இந்த தேர்தல் முடிந்ததும் நாம் தமிழர் கட்சியையும் மக்கள் நீதி மய்யத்தையும் விட்டு விட்டு அரசியல் கற்றுக்கொண்டு களத்தில் இயங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
தயவு செய்து நீங்கள் இவர்களை அடுத்த முறை பேட்டி எடுக்க சென்றால் மேலே சொன்ன பல சமூக அரசியல் கோட்பாடுகளை பற்றி கேள்வி எழுப்புங்கள் என்று கேட்டிருந்தேன்.
இது கடந்த வாரம் நடந்தது.
இன்று பத்மபிரியாவின் பேட்டி ஒன்று வந்திருக்கிறது. நான் முன்பே கணித்தது போல பத்மபிரியா வுக்கு சமூக-அரசியல் அறிவு சுத்தமாக கிடையாது என்று நிரூபணமாகி இருக்கிறது. ஆனால் அந்தப் பெண்ணை நொந்து பயனில்லை. ஏனென்றால் அந்தக் கட்சியின் தலைவருக்கே சமூக அரசியல் அறிவு கிடையாது. இல்லை இப்படி அப்பட்டமாக சொல்லிவிடமுடியாது. கொஞ்சூண்டு அறிவு இருக்கலாம் ஆனால் அதை வெளிக் காட்டிக் கொள்ளக் கூடாது என்கின்ற ஒரு விஷயம் செய்கிறாரோ என்று தோன்றுகிறது.
மக்கள் நீதி மையம் கட்சி உருவானதிலிருந்து அவர்களின் கொள்கை கோட்பாடுகள் தெளிவாக இருக்கின்றன. அவர்கள் யாரை நோக்கி பயணிக்கிறார்கள் என்று மிகவும் தெளிவாக தெரிகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலே அவர்களுக்கு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் 10 சதவீதத்திற்கு மேல் Vote share. அது எதனால்?
தமிழகத்தில் சமூகநீதி விரும்பும் மக்கள் இருக்கிறார்கள், ஒரு பக்கம் சமூகநீதி விரும்பாத நேரடி எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள் ,இதற்கு நடுவே Neo Liberals என்று சொல்லக்கூடிய அந்நியன் அம்பி வகையறாக்கள் போன்ற சிலர் இருக்கிறார்கள். நல்ல சாலை வேண்டும் நல்ல சுத்தமான குடிநீர் வேண்டும், கொசு இல்லாமல் இருக்க வேண்டும், குஜராத்தில் இஸ்லாமியர்களை வெட்டி சாய்த்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் பக்கத்து வீட்டு ரம்ஜான் பிரியாணியை சிலாகித்துப் பேசி மதநல்லிணக்கத்தை பேணிக் கொண்டிருப்பார்கள். அமெரிக்காவில் கருப்பின மக்களை கொல்லும் பொழுது கண்ணீர் வடிப்பார்கள், சொந்த மாநிலத்தில் ஒடுக்கப்பட்டோர் கொல்லப்படும் பொழுது கண்டும் காணாமல் இருப்பார்கள். ஊழலை எதிர்ப்பார்கள். ஜாதியை எதிர்க்க மாட்டார்கள். தேடி சென்று தலித் நண்பர்களோடு உறவாடி விட்டு "எனக்கு நிறைய SC friends இருக்காங்க "என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடிப்பவர்கள். இட ஒதுக்கீட்டை அனுபவித்துக்கொண்டே இட ஒதுக்கீடு தான் இந்தியாவின் பிரச்சினை என்று நிமிடத்துக்கு ஒரு தடவை சொல்வார்கள். கருணாநிதி ஜெயலலிதா அறவே பிடிக்காது. ஆனால் மோடியை பிடிக்கும் என்று வெளிப்படையாகச் சொல்லவும் முடியாது. பாஜக ஆட்சியால் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு இருப்பார்கள். பெட்ரோல் விலை அதிகமானதால் காரிலேயே லடாக் வரை சாகச பயணம் செல்ல முடியாமல் அவதிப் படுபவர்கள். இவர்களுக்கு பாஜகவும் வேண்டாம் திராவிட கட்சியும் வேண்டாம்.
இத்தகைய மென் சங்கீகளை தான் கமலின் கட்சி டார்கெட் செய்கிறது. இவர்கள் என்ன கேட்க விரும்புகிறார்களோ அதையேதான் கமலும் தொடர்ச்சியாக பேசி வருகிறார். அதையேதான் அவரின் வேட்பாளர்களும் பேசுகிறார்கள். ஜாதி சான்றிதழில் பெயர் எடுத்துவிட்டால் ஜாதி ஒழிந்து விடும் என்று பத்மபிரியா சொல்லும்பொழுது நமக்கு கோபம் வருகிறது ஆனால் இதைக் கேட்டு குதுகலிக்கும் ஒரு கூட்டமும் உண்டு. இவர்கள்தான் மக்கள் நீதி மையத்திற்கு ஓட்டுப்போட போகிறவர்கள்.
நாம் எவ்வளவு இதையெல்லாம் திட்டி கோவப்படுகிறோமோ அதையெல்லாம் மக்கள் நீதி மையத்திற்கு மாற்று கூடிய மக்கள் இருக்கிறார்கள்.
அது மிகப்பெரிய எண்ணிக்கை கிடையாது. ஆனால் ஒரு தொகுதியில் ஏற்படக்கூடிய வெற்றி வாய்ப்புகளை பறிக்கக் கூடிய அளவிற்கு அவை இருக்கும்.
இதுதான் மக்கள் நீதி மையத்தின் டார்கெட்.
அவர்கள் சின்னத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். டார்ச் லைட்.
உதிக்கும் சூரியன் என்ன செய்யும்? தான் உதிக்கும் நிலப்பரப்பு முழுவதும் சமமாக ஒளி கொடுத்து இருளை விரட்டி எல்லாவற்றையும் சமமாக தெளிவாக பார்க்க வைக்கும்.
டார்ச்லைட் என்ன செய்யும்?
இருளை நீக்காது. குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வெளிச்சத்தை காட்டும். சுற்றி இருட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாது.
அவ்வளவுதான் அவர்களது கொள்கை. குறிப்பிட்ட சுயநலமான நான்கு விஷயங்களை மட்டுமே focus செய்து, மற்ற சமூக அவலங்களை இருட்டில் மறைய வைக்கும்.
ஆகவே நீங்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். கமலஹாசன் எந்த அரசியல் செய்ய வந்தாரோ அந்த அரசியலை அவர் திறம்பட செய்து கொண்டிருக்கிறார்.
சமூக நீதி என்பது திராவிட கட்சிகளின் கோட்பாடு.
கமலுக்கும், கமலின் கட்சிக்கும், கமல் கட்சி வேட்பாளர்களுக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்?
அதை ஏன் நாம் எதிர்பார்க்க வேண்டும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக