சனி, 27 மார்ச், 2021

இலங்கையில் ஈழப்போர் பற்றிய ஜெர்மன் ஆய்வாளரொருவரின் (Mathias Keittle) கருத்து

May be an image of one or more people, people standing and outdoors
Maniam Shanmugam  : இலங்கையில் ஈழப்போர் பற்றிய ஜெர்மன் ஆய்வாளரொருவரின் (Mathias Keittle) கருத்து
மிகவும் சிக்கலான உலகத் தொடர்புகளுடன் மிகமோசமான பயங்கரவாதக்குழு ஒன்றினை இலங்கை அழித்தபோதிலும் அதற்கான உரிய பலன் இலங்கைக்குக் கிடைக்கவில்லை.
உலகில் வேறெங்கிலும் இல்லாதவாறு, உள்நாட்டில் இடம்பெயர்ந்த 300,000 பேரை மீளக்குடியமர்த்துவதில் இலங்கை வெற்றியடைந்துள்ளது.
அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் உணவளிப்பதற்கு வேண்டி, பட்டினியால் வாடும் குழந்தைகளென இலங்கையில் கிடையாது என்பது கண்டு கொள்ளப்படாமலேயே உள்ளது.
பெருந்தொகையில் மக்கள் அவலம், தொற்று நோய்கள் மற்றும் பட்டினி போன்றவற்றை இலங்கை தவிர்த்துள்ளது என்பதை மேற்குலகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கின்றது.
பயங்கரவாதத்தை ஒழித்த அதேவேளையில், ஓர் அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்று பார்த்தால், பொறாமை கொள்ளத்தக்க வகையில் சமூக பொருளாதார தரத்தை இலங்கை அடைந்துவிட்டது.
எனினும் அதற்கான எந்த அங்கீகாரமும் இலங்கைக்குக் கிடைக்கவில்லை.
ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்களின் அங்கீகாரத்தை இலங்கை அரசும், அதன் ஜனாதிபதியும் தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்றனர்.
ஆயினும் அது நிராகரிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் பொருளாதாரம் இயல்பான செயற்பாடு கொண்டதாக இருக்கின்ற போதிலும், மேற்குலகினால் ஊக்குவிக்கப்படாமல் உள்ளது. பின்னணி: 27 ஆண்டுகால குருதிதோய்ந்த மோதலுக்குப் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுமையான தோல்வியுடன் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தது. ‘வொண்டர்லாண்ட்டில் அலிஸ்’ (Alice in Wonderland) என்ற திரைப்படக்காட்சி போன்று, நாடு எல்லையற்ற அச்சமும் நிச்சயமற்றதுமான ஒரு சூழலிலிருந்து, அமைதிக்கும் முழுமையான தணிவுக்கும் ஒரே இரவில் மாறியது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு வந்து, ஒப்பிட முடியாத மகிழ்ச்சியைக் கொண்டாடினர். உணவக உரிமையாளர்கள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த வீதிகளில் சென்ற அனைத்து வழிப்போக்கர்களுக்கும் தாமாகவே உணவு வழங்கினர்.
அடுத்து வந்த மாதங்களில் சுமார் 300,000 இடம்பெயர்ந்த மக்கள், வாழ்வதற்கு உகந்த நிலைமைகளைக் கொண்டிருக்காத தங்கள் சொந்த நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால், சுமார் 27 ஆண்டுகளாக புலிகளின் இரும்பு ஆட்சியின் கீழேயும், ஒரு கூடாரத்தில் இருந்து இன்னொன்றுக்கு மனிதக் கேடயமாகவும், பின்வாங்கிய புலிகளின் பேரம் பேசும் துரும்புச்சீட்டாகவும் அவர்கள் இருந்த போது, அவர்களின் நிலைமைகள் வசதி நிறைந்தாக இருந்திருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், புலிகளால் மனித கேடயங்களாக வைத்திருப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்புவதை தடுக்கும் வகையில், புலிகள் அவர்களின் வீடுகளின் கூரைகளையே அகற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சிறுவர் படையினர் (சுமார் 600) புனர்வாழ்வு பெற்று தமது சமூகங்களுக்குத் திரும்பியுள்ளனர். 5,700 சிறுவர்களை புலிகள் இயக்கத்திற்கு சேர்த்துள்ளனர் என யுனிசெஃப் ஆவணப்படுத்தியுள்ளது. தேர்ச்சி பெற்ற கொலைகாரர்களாக இருப்பதற்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களில் சிலர் தமக்கு தெரிந்த ஒரே தொழிலான கொலைத் தொழிலுக்கு திரும்பலாமென்ற ஆபத்து இருந்த போதிலும், 11,700 முன்னாள் புலிப் போராளிகளில், 7,000 பேருக்கு மேற்பட்டவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் தமது சமூகங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
வடக்கில் புதைக்கப்பட்ட ஆயுதங்களின் மறைவிடங்கள் தொடர்ந்தும் கண்டு பிடிக்கப்பட்டு வருதல் மற்றும் மேற்கு நாடுகளில் உள்ள தமிழ் போராளிகள் தமது பாதுகாப்பான புகலிடங்களிலிருந்து பிரிவினைவாதத்தையும் வன்முறைகளையும் தொடர்ந்து ஊக்குவித்தல் போன்ற நிகழ்வுகளால் ஆபத்து அதிகரித்த வண்ணமுள்ளது. வடக்கில் தொடர்ந்தும் இராணுவம் இருப்பது வெகுளித்தனமாக விமர்சிக்கப்பட்டு வருகின்ற அதேவேளையில், மேற்சொல்லப்பட்ட பின்னணிக் காரணிகள் புறக்கணிக்கப்படுகின்றன. நீதிமன்ற அத்தாட்சித் தேவைகளை பூர்த்தி செய்யவதற்கு எஞ்சியுள்ளவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் போதுமான அளவு இல்லை என்பதால், கைதிகளில் ஒரு பகுதியினர் மட்டுமே விசாரணையை எதிர்கொள்ள நேரிடும். வடக்கின் பொருளாதாரத்தை மீளமைக்க பாரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அந்த நோக்கத்திற்காக பெருந்தொகையான பணம் முதலிடப்பட்டு வருகின்றது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் இவை அனைத்துமே மேற்கு நாடுகளில் அரிதாகவே குறிப்பிடப்படுகின்றன.
ஓர் ஈவிரக்கமற்ற பயங்கரவாதக் குழுவை தோற்கடித்ததை விட்டுவிடுவதை விடுத்து ஒரு மோதலில் வெற்றியீட்டும் நடவடிக்கையில் இடம்பெற்றதாக் கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை கணக்கில் எடுக்க வேண்டும் என்ற வகையில், மோதலின் வெற்றியாளர் வேட்டையாடப்படுவது 8 பங்குனி 2021 என்பது நிட்சயமாக வரலாற்றில் இலங்கை உள்நாட்டு யுத்தம் மாத்திரமாகவே இருக்க முடியும். இரண்டாம் உலகப் போரினைத் தொடர்ந்தோ, அல்லது கொரிய மோதலுக்குப் பின்னரோ, வியட்நாம் யுத்தத்திற்குப் பின்னரோ, முதலாவது வளைகுடாப் போருக்குப் பின்னரோ, ஆப்கானிஸ்தான் அல்லது ஈராக்கில் தொடரும் ஆக்கிரமிப்புக் குறித்தோ இம்மாதிரியான கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. குறிப்பிடத்தக்க வகையில் இலங்கையிடமிருந்து பொறுப்புக்கூறலை கோருவதற்காக பலவிதமான சக்திகள் ஒன்றாகத் திரண்டுள்ளனர்.
விசயத்தின் கவர்ச்சியால் அல்லது வெறுமனே முன்னேறி வரும் மனித இனத்தின் உயர்ந்த இலட்சியங்களின் பண்புகளால் அவர்கள் (பொறுப்புக் கூறலைக் கோருபவர்கள்) அனைவரும் ஊக்குவிக்கப்பட்டார்கள் என்று சாதாரணமாக இருந்துவிட முடியாது. பல முக்கிய மேற்கத்தைய நாடுகளின் மற்றும் சில உயர்குடி தனிநபர்களின் இந்த ஆணுகுமுறைக்கு ஒரு காரணத்தைச் சுட்டிக்காட்டுவது என்பது கடினம். முனிதாபிமான நியமங்களுடன் தூய கொள்கைப் பற்று இருந்திருந்தால், அதன் காரணமாக, இலங்கை அவர்களின் பார்வையில், ஒட்டுமொத்த உலகிலும் ஒரு மோசமான குற்றவாளிபோல் தோன்றும். ஆனால் இது ஒரு வெளிப்படையான காரணமாக இருக்க முடியாது. இலங்கை மேற்குலகைச் சாராத, ஓர் அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இருப்பதால் தோற்கடிக்க எளிதானது. மோதல் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்கையில், பல மேற்கத்திய தலைவர்கள் போர் நிறுத்தத்திற்கு கோரிக்கை விடுத்தபோது, தீவிரமான அழுத்தத்திற்கு அசாதாரணமான முறையில் இலங்கை பதில் எதுவுமளிக்காமல் இருந்ததும் இந்த மறுப்பானது ஒரு சங்கடமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது.
பெர்னார்ட் குஷ்நெர், டேவிட் மிலிபாண்ட் மற்றும் ஹிலாரி கிளின்டன் (Bernard Kouchner, David Miliband and Hillary Clinton) ஆகிய அனைவரும் போர் நிறுத்தத்தைக் கோரியபோது, அதனை இலங்கை நிராகரித்தது. இரு தரப்பினருக்கும் தாங்கள் கையாண்ட அணுகுமுறைகளுக்கு நல்ல காரணங்கள் இருந்தன. இலங்கை தமிழ் புலிகளை தங்கள் பிடியில் வைத்திருந்ததோடு, மூர்க்கத்தனமான 27 வருட கால கொடூர இரத்தக்களரிக்குப் பின்னர் வெற்றியென்பது கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதாக ஆசை காட்டியது. பெரும் நிதியையும் கொஞ்சம் அரசியல் பலத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழ் புலம்பெயர் சமூகத்திடமிருந்து தலையீடு செய்யுமாறு மேற்குலகத் தலைவர்கள் தீவிர அழுத்தத்தின் கீழ் இருந்தனர். ரொரன்ரோ, இலண்டன், மெல்பேர்ண் மற்றும் சிட்னி போன்ற நகரங்கள் தமிழரது பாரிய ஆர்ப்பாட்டங்களால் ஸ்தம்பித்துப் போய்விட்டன. மே மாதம் 2009 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்த டேவிட் மிலிபாண்ட்டிடம் மூக்கை நுழைக்காமல் இருக்கும் படியும், சொந்த அலுவலை கவனிக்குமாறும் இலங்கை தலைமைத்துவத்தால் தெளிவாக சொல்லப்பட்டது. முன்னாள் காலனித்துவ குழந்தையால் இவ்வாறு அவமதிக்கப்பட்டதை, அவரால் மன்னிக்க முடியாமல் இருக்கலாம்.
மோதலில் சிக்கியுள்ள பொதுமக்களையும், அத்துடன் பெரும்பாலும் புலிகளின் தலைமையையும் தனது கடற்படை வளங்கனைப் பயன்படுத்தி வெளியேற்றம் செய்வதற்கு அமெரிக்கா முன்மொழிந்தது. இது இந்தியாவாலும் இலங்கை அரசாலும் நிராகரிக்கப்பட்டன. இரத்த ஆறொன்று ஓடலாம் என்ற கணிப்புகள் இருந்தபோதிலும், அந்த காலகட்டத்தில் அது உண்மையியேயே நடந்தவிட்டது என எவரும் கூறவில்லை. (அதைத்தொடர்ந்து, இரத்த ஆறொன்று உண்மையில் ஓடியது என்பதை நிறுவுவதற்கு ஆர்வமுள்ள தரப்பினர் மூலம் ஆதாரங்கள் தயாரிக்கப்படுவது தொடங்கியதாக சந்தேகிக்கப்படுகின்றது!). இலங்கை தமிழர்கள் பெருமளவில் தஞ்சம் புகுந்த நாடுகளில் இருந்து போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டுள்ளன. அகதி அந்தஸ்துக்கான தங்கள் உரிமை கோரல்களுக்கு ஓர் அடிப்படையாக, அப்போதிருந்த வன்முறையைப் பலர் பயன்படுத்தியுள்ளனர்.
யுத்தத்தேவைகளுக்கான நிதிக்கு புலிகள், புலம்பெயர் நாடுகளிலிருந்து பெரும் தொகையான பணத்தைத் திரட்டினர். அவர்களது இலட்சியத்தை முன்னெடுப்பதற்கு இன்று இந்த நிதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ‘கிளின்டனுக்கான தமிழர்கள்’ என்ற அமைப்பு கணிசமான பங்களிப்பை ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வழங்கினர். இந்த விவகாரம் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, நிதி திருப்பியனுப்பப்படும் வரை நடந்தது. பல மேற்குலக நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுக்கு புலிகள் சத்தமில்லாமல் நிதி கொடுத்தும், தொடர்ச்சியாக அவ்வாறு செய்தும் வருகின்றனர். அமெரிக்க வழக்கறிஞரான ‘புரூஸ் பெயின்’ (Bruce Fein) தமிழ் புலம்பெயர் சமூகத்தால் நிதியளிக்கப்பட்டு வருகிறார். எப்போதும் பலவீனமான தரப்பை வெற்றியாளராக ஆக்குவதற்கு தயாராக இருக்கும் மேற்குலக அரசியலின் தாராளவாத நோக்கத்திற்கு, தமிழ் புலம்பெயர் மக்களின் குறிக்கோள் ஒரு விருப்பமான வெற்றியாளராக இருந்தது. ஊடகத்தையும் கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகத்தையும் நிழற்புலிகள் இடைவிடாமல் குறிவைத்துள்ளனர்.
நிதிகள் எளிதில் கிடைக்கக்கூடிய தன்மை, தெளிவாக வக்காலத்து வாங்குவோர், வெளிப்படையாக பலவீனமானவர்களின் குறிக்கோளை தூக்கிப்பிடித்து இருக்கும் தாராளவாதப் போக்கு, திகில் கதைகள், உண்மை அல்லது இட்டுக்கட்டல், மேற்கத்தைய ஊடகத்துறையின் சிறப்புரிமை நிலையைப் பாவித்து குறிக்கோளுக்கு ஆதரவளிப்பதற்கு எப்போதும் தயாராக இருந்த அனுதாபம் கொண்ட பத்திரிகையாளர்கள், மேற்கு நாட்டு தாராளவாத அரசியல் தலைவர்களிடையே நிலவிய இலங்கையுடனான அதிருப்தி உணர்வு, சில பிரச்சினைகளை மெதுவான வேகத்துடன் இலங்கை எதிர் கொண்டமை போன்றன மேற்கு நாடுகளிலிருந்த முக்கிய மனிதாபிமான அரசு சாரா நிறுவனங்களை சிட்னி மோர்னிங் ஹெரால்ட், தி ஏஜ்) ‘தமிழ்நெட்’ மூலம் ஊட்டப்படுகின்ற கருத்தை பரப்புவதற்கு தயாராக இருந்தன.
தமிழ் புலம்பெயர் சக்திகளால் ஓதப்பட்டவற்றை மேற்குலக ஊடகங்களால் கிரகித்த போதிலும், இலங்கை தலைமைத்துவத்திற்கு எதிராக அவ்வளவு நுட்பமானதொரு பிரச்சாரம் முன்னெடுக்கப்படவில்லை என்றும் தோன்றுகிறது. இப்போது களத்தில் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்டதால், சர்வதேச சமூகத்தைப் பயன்படுத்தி பெறுபேறுகளை அடைவது என்பது ஒரு முக்கிய குறிக்கோளாக தோன்றுகிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊகங்களின் அடிப்படையில், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன. துஷ்பிரயோகங்கள், ஊழல் மற்றும் சொந்த பந்தங்களுக்கு முன்னுரிமை போன்ற அரசுக்கெதிரான குற்றச்சாட்டுகள் மூலம், இந்த சக்திவாய்ந்த எழுச்சி மேலும் ஊதிப் பெருப்பிக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் முனைப்புக்கொள்ளும் பட்சத்தில், சர்வதேச நீதிமன்றத்தின் முன் இலங்கைத் தலைவர்களை இழுத்து வருவதற்கு இது ஒரு குறுகிய வழியாக இருக்கும். திரும்பத்திரும்ப சொல்லப்படுதல் என்ற எளிய வழிமுறை மூலம் சில குற்றச்சாட்டுகளுக்கு ஜீவன் கிடைக்கும் என்று சமீபத்தைய வரலாறு கூறுகிறது.
மாக்கியவல்லியின் கதை (Machiavellian Story) வரி எளிமையானது. “வடபகுதி தமிழ் மக்களை இலக்கு வைத்து, இலங்கை அரசு வேண்டுமென்றே தனது இராணுவத்தைப் பயன்படுத்தி, ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று விட்டது”. உரிய பயனை அடைவதற்காக இந்த வரி மீட்கப்படுகின்றது. அதேவேளையில், 27 ஆண்டுகளாக அப்பாவி மக்களை இலக்கு வைத்து, ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்ற விடுதலைப் புலிகளின் கொலைகாரக் குண்டுத் தாக்குதல் பிரச்சாரத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரலாறு, சிறுவர் படைவீரர்களாக ஆயிரக்கணக்கான சிறுவர்களை சேர்த்தல், டசின் கணக்கான மிதவாத தமிழ் தலைவர்கள் படுகொலை, உலகெங்கிலுமுள்ள தமிழர்களிடமிருந்து மில்லியன் கணக்காக கப்பம் பெற்றமை, வடக்கு மாகாணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்தமை, யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களை வேண்டுமென்றே அழித்தமை, ஆயிரக்கணக்கானவர்களை வேண்டுமென்றே கீழ்த்தரமான முறையில் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியமை, மனிதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றன பூசி மெழுகப்பட்டுள்ளன. அரசு சாரா நிறுவனங்கள், முக்கியமான நபர்கள் மற்றும் மனித உரிமை மீறல்களையும் அரச போர்க் குற்றங்களையும் நிறுவுவதற்கான ஊடகங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வெறித்தனமான பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளதாலேயே புலிகள் செய்தவைகள் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளன.
கொலைகாரப் புலிகளிடமிருந்து வேண்டுமென்றே முழுக்கவனமும் அரசை நோக்கி மாற்றப்பட்டு, இந்த குற்றச்சாட்டுகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கொலைகாரப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் விதத்தில், இன்று இல்லாவிட்டிலும், பின்னர் ஒரு காலத்தில் அரசாங்கத் தலைமைத்துவத்தைத் தண்டிப்பதே, இந்தப் பிரச்சாரத்தின் ஒரே குறிக்கோள். முடிந்தவரையில் அடிக்கடி மீட்டப்பட்ட ஒரு பொய், ஒரு ஜீவனைப் பெறும். இது படிப்படியாக சாதாரண இலங்கை மக்களின் மனதில் அசௌகரியத்தையும், சந்தேகங்களையும் ஏற்படுத்துவதோடு, தற்போது அசைக்க முடியாத நிலையிலுள்ள அவர்களது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை, ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியங்கள் காலப்போக்கில் உருவெடுக்கும் விதத்தில் தடுமாறச் செய்யலாம்.
அடிப்படையில் தவறான சில வாதங்கள்: போரின் இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனரா? இந்த மோதலின் இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனரா? இந்த எண்ணிக்கை 1,000? 7,000 (ஒரு உள்ளக ஐ.நா. ஆவணத்தில் கூறப்பட்டு, பின்னர் மறுக்கப்பட்டது)? இலண்டன் டைம்ஸ் பத்திரிகை ‘ஜெர்மி பக்கம்’ (Jeremy Page) கூறும் 20,000?
‘கோர்டன் வெய்ஸ்’ (Gordon Weiss) பொதுவாக விவேகமற்றவர் என்று அறியப்படுபவர்) என்பரால் எழுதப்பட்ட புத்தகத்தில் 40,000 என்று கூறப்பட்டுள்ளதை, தாருஸ்மன் (Darusman) அறிக்கையிலும் (இலங்கையில் பொறுப்புக்கூறல் தொடர்பான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கை) குறிப்பிடப்படுகிறது? அல்லது அதற்கு மேல். மேற்கு நாடுகளின் அரசாங்கங்களின் தலையீட்டைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் கொல்லப்பட்ட சாதாரண மக்களின் சரியான எண்ணிக்கை ஒருபோதும் அறியப்பட முடியாதது. (ஈராக்கில் ஏற்கனவே 500,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டதாக 2005 இல் ‘லான்செட்’ (Lancet) என்ற பிரித்தானிய மருத்துவ சஞ்சிகை கூறியது)
ஆனால் ஏதோ சில நிறுவப்பட்ட உண்மைகளை புறக்கணிக்க முடியாது. மோதல்களின் இறுதி வாரங்களில், காயமடைந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 7,000 பேரையும், புலிகளின் கடைசி பிடியில் இருந்து 8,000 இற்கும் அதிகமானவர்களையும், இலங்கை கடற்படையின் உதவியுடன் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் வெளியேற்றியது. வேறு யாராவது காயமடைந்திருந்தால், அவர்களை விட்டுவிட்டு, சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் 8,000 ஆரோக்கியமான நபர்களைக் கப்பலில் கொண்டு சென்றிருக்க முடியுமா? கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை விட கட்டாயமாக கணிசமானளவில் குறைவாக இருக்க வேண்டும் என்று சமீபகாலத்து பிற மோதல்களின் அனுபவங்களும் பதிவுகளும் தெரிவிக்கின்றன. இது அனுபவத்திலிருந்து பெறப்பட்ட ஓர் உண்மை. மிக முக்கியமாக, மோதலின் முடிவில் இரு தரப்பினரும் இறுதி வரை ஒருவருக்கொருவர் சளைக்காது போராடுவதில் குறியாக இருந்ததால், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு நேரம் இருந்திருக்காது. இந்த சூழ்நிலையில், அதிக எண்ணிக்கையில் இறந்தவர்களை அடக்கம் செய்ய புலிகளுக்கு நேரம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
இலங்கை இராணுவம், பெருந்தொகையிலான சடலங்களைக் கூட ஒருபோதும் காணவில்லை. ஆனால் உண்மை என்னவெனில் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில், அரசாங்க பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பைக் கோருவதற்காக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து சுமார் 300,000 பொதுமக்கள் வெளியேறினர். சிவிலியன்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்துவதின் விளைவு அதிகளவிலான தன்னார்வத் தியாகிகளை உருவாக்குவதாக அமையும் என்று சிவிலியன்களிடையே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஏனைய இராணுவங்களின் அனுபவத்திலிருந்து, பூச்சியம் சிவிலியன் இறப்புக் கொள்கையை அரசு கடைப்பிடித்தது. 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில், வடக்கிற்கு நிவாரணப் பொருட்களை அனுப்பும் நோக்கத்திற்காக கிளிநொச்சியில் சுமார் 121,000 மக்களும், முல்லைத்தீவில் 127,000 மக்களும் உள்ளார்கள் என்ற புள்ளி விபரத்தின் அடிப்படையிலேயே வடக்கிற்கான மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைக்கும் குழு (Committee to Coordinate Humanitarian Assistance) செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். மன்னாரில் இருந்து சுமார் ஒரு இலட்சம் பேர் வரையில் புலிகளுடன் சேர்ந்து கொண்டு சென்றிருக்கலாம். முன்னைய ஆண்டில் (2008) சுமார் 60,000 பேர் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குத் தப்பிச் சென்றிருந்தனர் என்பதைக் கருத்தில் எடுத்தும், புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், 2009 ஆண்டு மே மாதம் அரசாங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட அகதி முகாம்களில் தங்கியிருந்த எண்ணிக்கைக்கு (300,000) அண்மித்துள்ளது.
அரசு பூச்சியம் சிவிலியன் இழப்புக் கொள்கையைக் கடைப்பிடித்ததால் தான், யுத்தத்தில் விழிப்புணர்வுடன் காலாட்படையை அடிப்படையாக் கொண்ட அணுகுமுறையைக் கடைப்பிடித்தது என்பதும் பதியப்பட்டுமுள்ளது. அதிக அழிவுகரமான அணுகுமுறைகளை பின்பற்றியிருக்கக் கூடியபோதிலும், இறுதி மோதல்களில் காலாட்படையினரால் சண்டை செய்யப்பட்டது. இதன் விளைவாக 6,000 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இராணுவம் வேண்டுமென்றே பொதுமக்களை இலக்கு வைத்து, பெரும் எண்ணிக்கையில் கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டு, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்துவதற்கு வசதியான மற்றும் மாக்கியவெல்லின் கதையாக தோன்றுகிறது. பாதுகாப்பு படையினரின் இலக்கு தமிழ் சமூகம்தானா? இது தீவிரத்தன்மையுடன் வெளிப்படுத்தாவிட்டால், முற்றிலும் நிராகரிக்கப்படக் கூடிய ஒரு குற்றச்சாட்டு, அது வெளிப்படுத்தப்படும் தீவிரத்தை விட, வெளிப்படையாக நிராகரிக்கப்படக் கூடும். இலங்கைத் தமிழர்களில் பெரும்பான்மையானோர் வடக்கிலோ அல்லது கிழக்கிலோ வாழவில்லை. பெரும்பான்மைச் சமூகமான சிங்கள மக்கள் மத்தியில் பெரும்பான்மையினர் வாழ்கின்றனர். தலைநகரான கொழும்பு மக்கள் தொகையில் 41 வீதம் பேர் தமிழர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பில் தமிழ் சமூகம் பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் செழுமையான வர்த்தக நிலையங்களை வைத்திருக்கிறார்கள். கொழும்பில் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழர்கள் வெற்றிகரமான தொழில் வல்லுநர்களாகவும் வர்த்தகர்களாகவும் உள்ளனர். கொழும்பில் உள்ள பல வணிக நிறுவனங்கள் தமிழர்களுக்கு சொந்தமானவை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் உள்ள சுகாதார சேவைகளுக்கும் பாடசாலைகளுக்கும் 27 வருடங்களுக்கு மேலாக அரசாங்கம் நிதியுதவியளித்ததோடு, அந்தப் பிரதேசங்களுக்கு உணவுப் பொருட்களையும் அனுப்பி வைத்ததாக ஐ.நா. ஏற்றுக்கொண்டுள்ளது. உண்மையில் வன்னி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும், மாவட்ட தலைநகரங்களில் நிலைகொண்டிருந்த அரசாங்க அதிபர்களால் உணவுத் தேவைகள் தீர்மானிக்கப்பட்டன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஆகிய நாடுகளின் தூதுவர்களை உள்ளடக்கிய மனிதாபிமான உதவி பற்றிய ஆலோசனைக்குழுவும் (Consultative Committee on Humanitarian Assistance – CCHA), முக்கிய அமைச்சுக்களின் சிரேஷ்ட பிரதிநிதிகளும், வடபகுதிக்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை வாராந்த அடிப்படையில் கண்காணித்து வந்தனர். சனல் 4 ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, இந்த சூழ்நிலையில், அரச பாதுகாப்பு படையால் தமிழ் சமூகம் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்வது, இனப் பிளவுகளை மேலும் அதிகரிக்கவும், அரசாங்கத்தின் மீது எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும் ஓர் அடிப்படை முயற்சியாகும்.
பாதுகாப்பு படைகள் மற்றும் அதன் தலைமை மீது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களை சுமத்துவது என்பது சூழ்ச்சித் திட்டமொன்றின் ஒரு பகுதியாக இருப்பதாகத் தோன்றுகின்றது. மேலும் இது மறைந்த இன பதட்டங்களை மோசமாக்குவதுடன், நீடித்திருக்கவும் செய்கின்றது. ஆயுத மோதல் ஒன்றும் பாடசாலை வளவில் விளையாடப்படும் ஒரு விளையாட்டு அல்ல. மாறாக, தடை செய்யப்பட்டுள்ள மிருகத்தனமான குழுவொன்றினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஒரு பயங்கரவாத போர். யுத்தத்தில் பொதுமக்கள் காயமடைய வேண்டி வரும். வேறு இடங்களில் இது ‘பக்கசேதம்’ என்று குறிப்பிடப்படுகின்றது. மேலும் ஆயிரக்கணக்கான பக்கசேதத்தைக் கணக்கிடக்கூடிய பரந்தளவிலான போர்கள் பற்றி நாங்கள் அறிவோம். ஆனால் இலங்கை அரசு பொதுமக்கள் உயிரிழப்பை குறைக்கும் கொள்கையை கடைபிடித்தது. இப்போது இந்த அணுகுமுறையை குறைகூறுவது கண்டிக்கத்தக்கது. இந்தக் கொள்கையைப் கடைபிடித்ததின் காரணமாகவே, புலிகளின் கடைசிப் பதுங்கு குழிகளை பாதுகாப்புப் படையினர் கால்நடையாக அணுகியபோது 6,000 இற்கும் அதிகமானோர் இறப்புக்களுக்கு ஆளாகினர்.
ஒருவேளை, இலங்கையில் இன்னமும் பாரபட்சமும் ஒடுக்குமுறையும் இருப்பதாகக் கூறி, மேற்கு நாடுகளுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு, அவர்களின் அகதிக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் வரை இந்த போலித்தோற்றத்தைக் கட்டிக்காப்பது சௌகரியமாக இருக்கலாம். வேறு எதனையாவது ஏற்றுக்கொண்டால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதற்கு வழிவகுக்கும். மேற்கத்திய நாடுகளில் இருந்து அகதி அந்தஸ்து மற்றும் பயண ஆவணங்கள் பெற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கானோர், இலங்கைக்கு திரும்பச் சென்று, தங்கள் சொத்துக்களை மீட்டெடுக்கவும் குடும்பத்தை பார்வையிடுவதற்கும் எந்தவித துன்புறுத்தலுக்கும், அவர்கள் ஆளாகவில்லை என்பதும் உண்மை.
(இக்கட்டுரை இலங்கையிலிருந்து வெளியாகும் The Island பத்திரிகையில் 28.02.2021 அன்று வெளியானது)
From: ‘Vaanavil’ March Issue.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக