ஞாயிறு, 14 மார்ச், 2021

டெல்லி எல்லையில் வீடுகளைக் கட்டி வரும் விவசாயிகள்!.. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும்வரை கிளம்ப போவதில்லை”

kalaignarseithigal : வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லி திக்ரி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் செங்கற்களைக் கொண்டு வீடுகளைக் கட்டி வருகின்றனர். மோடி அரசு கொண்டுவந்த விவசாய விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கடந்த 4 மாதங்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ச்சியாக தங்களின் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.”வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும்வரை கிளம்ப போவதில்லை” - டெல்லி எல்லையில் வீடுகளைக் கட்டி வரும் விவசாயிகள்!

விவசாயிகளுடன் 11 முறை பா.ஜ.க அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் விவசாயிகள் போராட்டம் 100 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.   இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக உலகம் முழுவதும் இருந்து குரல்கள் ஒலித்து வருகின்றன. ஆனால், மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், வேடிக்கை பார்த்து வருகிறது.

டெல்லியின் எல்லைப்பகுதியான சிங்கு, திக்ரியில் குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், கடும் குளிர், மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல், தங்களின் கோரிக்கை நிறைவேறிய பிறகுதான் இந்த இடத்திலிருந்து சொல்வோம் என உறுதியுடன் இருந்து வருகின்றனர்.

”வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும்வரை கிளம்ப போவதில்லை” - டெல்லி எல்லையில் வீடுகளைக் கட்டி வரும் விவசாயிகள்!

இதனால், டிராக்டர் வண்டிகளிலும், கூடாரங்கள் அமைத்தும் விவசாயிகள் அங்கேயே தங்கிப் போராடி வருகின்றனர். மேலும், விவசாயிகளுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, மருந்து, உடை உள்ளிட்டவற்றை கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள் முகாம்களை அமைத்து அங்கேயே தங்கி உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், திக்ரி பகுதியில் இருக்கும் விவசாயிகள், செங்கற்களைக் கொண்டு வீடுகளைக் கட்டி வருகின்றனர். இதுவரை 25 வீடுகளை திக்ரி பகுதியில் கட்டியுள்ளனர். மேலும் 1,000 முதல் 2,000 வீடுகள் வரை கட்ட விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து, பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயட் கூறுகையில், "நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம். அரசாங்கம் எங்கள் பேச்சைக் கேட்டு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, நாங்கள் இங்கிருந்து செல்லமாட்டோம், 100 நாட்களுக்குப் பிறகு, எங்கள் இயக்கம் அரசாங்கத்திற்குத் தார்மீக அழுத்தம் கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். வரும் நாட்களில் வானிலை மேலும் மோசமடையும் என்பதால் செங்கற்களைக் கொண்டு வீடுகளைக் கட்டி வருகிறோம். மேலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் இந்த வீடுகள் எங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக