புதன், 10 மார்ச், 2021

எந்தெந்த கட்சிக்கு என்னென்ன தொகுதிகள்? திமுக கூட்டணி நிலவரம்!

எந்தெந்த கட்சிக்கு என்னென்ன தொகுதிகள்? திமுக கூட்டணி நிலவரம்!

minnambalam.com : திமுகவின் வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 10)அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் திமுகவின் அனைத்து மாவட்ட செயலாளர்களும், சீட்டுக் கேட்டு விருப்ப மனு கொடுத்தவர்களும் சில நாட்களாகவே சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

மின்னம்பலத்தில் ஏற்கனவே நாம் வெளியிட்டது போல வேட்பாளர் பட்டியலை பற்றிய ஒரு சிறு க்ளூ கூட கிடைக்காமல் அவர்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் திமுகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன... அதனால் முழுமையான வேட்பாளர் பட்டியல் தள்ளிப் போகலாம் என்று திமுக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிகின்றன.

என்ன சிக்கல்?    "திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஸ்டாலின் மிகவும் கறாராக நடந்து கொண்டார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய தேசியக் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்ற தமிழக கட்சிகள் என கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிக்கும் திமுக முதலில் எடுத்த முடிவின் படியே தொகுதி எண்ணிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இத்தனை குறைவான தொகுதிகளைப் பெற்று அவர்கள் கூட்டணியில் தொடர்வார்களா என்று பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் நிலவிய போதும், அவற்றை தனது அரசியல் நகர்வுகளால் முடிவுக்குக் கொண்டுவந்து தான் நினைத்ததை விட சிற்சில தொகுதிகள் மட்டுமே அதிகமாகக் கொடுத்து பங்கீட்டை முடித்திருக்கிறார் ஸ்டாலின்.

இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் என்னென்ன என்பதில் அடுத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியும் தாங்கள் போட்டியிட விருப்பமுள்ள தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள

தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் ஏற்கனவே கொடுத்துள்ளன. அது குறித்த ஆலோசனைகளையும் நடத்தின.

அதேநேரம் வரும் தேர்தலில் திமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும், போட்டியிட்டே ஆகவேண்டும் என்று தொடர் ஆய்வுகள் நடத்தி ஐ பேக் ஒரு பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறது. அந்தப் பட்டியலில் இருக்கும் தொகுதிகளும் கூட்டணிக் கட்சிகள் சேர்க்கும் தொகுதிகளும் பல கிராஸ் ஆகின்றன. இதனால் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் என்னென்ன என்று தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

'ஏற்கனவே போதுமான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்க வில்லை என்ற வருத்தம் எங்கள் கட்சிக்குள் நிறைய இருக்கிறது. இந்நிலையில் என்னென்ன தொகுதிகள் என்பதிலாவது எங்கள் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள். நாங்கள் கேட்ட தொகுதிகள் வேண்டும்' என்று கூட்டணிக் கட்சிகள் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளன. கூட்டணிக் கட்சிகளின் இந்த கோரிக்கையை தட்ட முடியாத நிலையில் இருக்கிறது திமுக. ஆனால் திமுக உறுதியாக வெற்றி பெறும் என்று ஐபேக் கொடுத்த பட்டியலில் இருக்கும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளும் கேட்கின்றன என்பதால் இதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் நேற்று முதல் ஐ பேக் அலுவலகத்திற்கே சென்று 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு எவற்றை ஒதுக்குவது என்ற தீவிர ஆலோசனையில் இருக்கிறார் ஸ்டாலின்.

இந்த ஆலோசனையில் இன்று இறுதி முடிவு எட்டப்படாவிட்டால்... முக்கிய தலைவர்களின் பெயர்கள் அடங்கிய திமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் என ஒரு சிறு பட்டியலை இன்று வெளியிட்டு விட்டு.... கூட்டணி கட்சிகளின் திருப்தி மற்றும் சம்மதத்தோடு தொகுதிகளை பிரித்து முழுமையான பட்டியலை ஓரிரு நாட்களில் வெளியிடலாமா என்ற ஆலோசனையும் ஸ்டாலின் வட்டாரத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால்..."கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கையில் எப்படி நிர்பந்தம் கொடுத்து கடைசியில் தன் வழிக்கு ஸ்டாலின் கொண்டு வந்தாரோ அதேபோல எந்தெந்த தொகுதிகள் என்பதிலும் கூட்டணி கட்சிகளை எப்படி சம்மதிக்க வைக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அதனால் எந்த சிக்கல்களும் விரைவில் தீர்க்கப்பட்டு விடும்' என்கிறார்கள் திமுக முன்னணியினர்.

வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக