புதன், 3 மார்ச், 2021

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்: ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்!

minnambalam.com : திமுக - காங்கிரஸ் தொகுதி பேச்சுவார்த்தை பிப்ரவரி 25ஆம் தேதி முதன்முதலாக ஆரம்பித்தது. ஆனால், அதன் பிறகு காங்கிரஸ் தரப்பிலும், திமுக தரப்பிலும் சேர்ந்து பேசாத நிலையில் மீண்டும் நேற்று மார்ச் 2ஆம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் அறிவாலயத்துக்கு வந்தனர்.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக மீண்டும் அவர்கள் திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஏற்கனவே முதல்கட்டமாக கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, மேலிடப்பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் போன்றோர் வந்த நிலையில் அவர்கள் நேற்று வரவில்லை.   சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,

"பேச்சுவார்த்தை வெற்றிகரமாக மனப்பூர்வமாக மகிழ்ச்சிகரமாக நடந்தது. எங்களுக்குத் தேவையான தொகுதிகள் என்ன என்பதை அன்று உம்மன் சாண்டி தெரிவித்துவிட்டார். இடையிலே எங்கள் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் வந்ததால் நாங்கள் அங்கே சென்று விட்டோம்.

இன்றும் பேசியிருக்கிறோம். விரைவில் முடிவு எட்டப்படும். இனி மேலிடப் பொறுப்பாளர்கள் வர மாட்டார்கள். நாங்களே பேச்சுவார்த்தை நடத்துவோம். காங்கிரஸ் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகள் பெற்று அதில் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். எங்களது ஸ்ட்ரைக் ரேட் என்ன என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்து தான் பார்க்க வேண்டும். விரைவில் முடிவு என்ன என்பதை உங்களிடம் தெரிவிப்போம்" என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு சென்றார்.

ஆனால் பேச்சுவார்த்தையின்போது கே.எஸ்.அழகிரி திமுக குழுவினருடன்... "கடந்த முறை போட்டியிட்ட 41 தொகுதிகளுக்குக் குறைவாக போட்டியிட வேண்டாம் என்று எங்கள் தலைவர் ராகுல் காந்தி கூறிவிட்டார். 41 தொகுதிகளுக்குக் குறைந்தால் கூட்டணி பற்றி மறுபரிசீலனை செய்யலாம் என்றும் தெரிவித்து விட்டார்" என்று திமுகவிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார் கே.எஸ்.அழகிரி.

வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, “இனி மேலிடப் பொறுப்பாளர்கள் வரமாட்டார்கள்” என்று கூறியதும் இதன் அடிப்படையில்தான் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரங்களில்.

எனவே, திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக