திங்கள், 29 மார்ச், 2021

கன்டெய்னர் தட்டுப்பாடு... ஆடை உற்பத்தி பாதிக்கும்? 'சூயஸ்' சிக்கலால் ஏற்றுமதியாளர்கள் கவலை

 தினமலர் : திருப்பூர்:சூயஸ் கால்வாய் அடைபட்டுள்ளதால், சரக்கு போக்குவரத்து தாமதமாகும்; கன்டெய்னர் தட்டுப்பாடு ஏற்படும் என, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
திருப்பூரின் ஆடை ஏற்றுமதி துறைக்கு, ஐரோப்பா மிக முக்கியமான சந்தையாக உள்ளது. ஆண்டுதோறும், அந்நாட்டு வர்த்தகர்களிடமிருந்து, ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் திருப்பூர் நிறுவனங்களுக்கு அதிகளவில், கிடைத்து வருகிறது.
ஆசியா - ஐரோப்பா இடையிலான கடல் வழி போக்குவரத்துக்கு, சூயஸ் கால்வாய் முக்கியமான கடல் வழித்தடமாக உள்ளது.
மிகப்பெரிய சரக்கு கப்பல் ஒன்று, மண்ணில் புதைந்துள்ளதால், சூயஸ் கால்வாய் அடைபட்டுள்ளது. இதனால், அந்த மார்க்கமான கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது.கால்வாய்க்கு இருபுறம் உள்ள நாடுகளிலிருந்து சரக்குகள் செல்லமுடியாத நிலை தொடர்கிறது.
தரை தட்டிய சரக்கு கப்பலை மீட்கும் பணிகள் துரிதகதியில் நடந்துவருகின்றன.உலக வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளதால்,


அனைத்து நாடுகளின் பார்வையும் தற்போது, சூயஸ் கால்வாய் பக்கம் திரும்பியுள்ளது.
ஐரோப்பாவுடன் அதிகளவில் வர்த்தக தொடர்பு, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறையினரையும், கவலை தொற்றிக்கொண்டுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:ஏற்கனவே, கொரோனாவுக்குப்பின் கன்டெய்னர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
ஆயத்த ஆடைகளை அனுப்ப, உரிய காலத்தில் கன்டெய்னர் கிடைக்காமல், பின்னலாடை நிறுவனங்கள் தவித்துவருகின்றன.
சூயஸ் கால்வாய் அடைபட்டுள்ளதால், உடனடி பாதிப்புகள் ஏதுமில்லை.
ஆனால், கப்பலை மீட்க தாமதம் ஏற்பட்டால், ஐரோப்பிய நாடுகளுக்காக தயாரிக்கப்பட்ட ஆயத்த ஆடைகளை, அனுப்ப சிக்கல் ஏற்படும். சூயஸ் கால்வாயை தவிர்க்கும்பட்சத்தில், ஆப்பிரிக்காவை கடந்துதான், ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பல் செல்ல முடியும்.
இதனால், பயண காலம், அதிகரித்து, சரக்கு கட்டணமும் உயர்ந்து விடும்.
இதுதவிர, பல்வேறு வகை அக்சசரீஸ்கள், ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன; அவற்றை பெறுவதில் தாமதம் ஏற்பட்டு, ஆடை உற்பத்தி பாதித்துவிடும்.
கப்பல் விரைவில் அகற்றப்பட்டு, போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக