வெள்ளி, 5 மார்ச், 2021

எங்களுக்கே பாதுகாப்பில்லை; நாங்கள் எப்படி மக்களை பாதுகாப்பது?” - பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் போர்க்கொடி!

Vignesh Selvara .kalaignarseithigal.com: காவல்துறை பெண் அதிகாரிகள் சந்திக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக 10க்கும் மேற்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் டி.ஜி.பி-யிடம் புகார் அளித்துள்ளனர். தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளுமாறு புகார் மனுவை சி.பி.சி.ஐ.டி போலிஸாருக்கு டி.ஜி.பி திரிபாதி மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி போலிஸார் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த புகார் மனு மீது விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். சி.பி.சி.ஐ.டி போலிஸார் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி மீது முதல் தகவல் அறிக்கை அறிக்கை பதிவு செய்வதற்கு முன்னரே அவரை கட்டாயக் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி டி.ஜி.பி திரிபாதி உத்தரவு பிறப்பித்திருந்தார். 

அதேபோல், முன்னாள் சிறப்பு டி.ஜி.பிக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளான செங்கல்பட்டு எஸ்.பி உள்ளிட்ட பலர் மீதும் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் காவல்துறையில் பெண் அதிகாரிகளுக்கு எதிராக நடைபெறக்கூடிய பாலியல் தொந்தரவுக்கு எதிராக பத்துக்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள டி.ஜி.பி அலுவலகத்தில் டி.ஜி.பி திரிபாதியைச் சந்தித்து 10க்கும் மேற்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் வாய்மொழியாக புகார் அளித்துள்ளனர்.

பெண் காவலர்கள் பணியாற்றக்கூடிய இடங்களில் அவர்களுக்கு பாலியல் தொந்தரவில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையிலான சூழலை ஏற்படுத்தி கொடுக்கவும், பெண் ஐ.பி.எஸ் அதிகாரி முன்னாள் டி.ஜி.பி மீது கொடுத்த பாலியல் புகார் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றம் செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி மீது பாலியல் புகார் அளித்த பெண் ஐபி.எஸ் அதிகாரியும் டி.ஜி.பி திரிபாதியை சந்தித்து மீண்டும் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவேண்டிய காவல் துறையிலேயே பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொந்தரவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் பொதுமக்களிடையே பெரும் அச்ச உணர்வும் பாதுகாப்பு இன்மையும் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் பாலியல் தொந்தரவு ஏற்படாமல் தடுக்கும் சூழ்நிலையை காவல்துறையில் பெண் காவலர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தால் மட்டுமே பெண் அதிகாரிகள் சுதந்திரமாக தங்கள் பணிகளைச் செய்ய முடியும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக