வெள்ளி, 5 மார்ச், 2021

ஸ்டாலின் போட்ட கிடுக்குபிடி.. தமிழக காங்கிரசே முடிவு எடுக்கட்டும் .. ராகுல்

Shyamsundar - tamil.oneindia.com :   சென்னை: திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையிலும்.. மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது. 
திமுகவை விட்டு செல்ல கூடாது என்ற முடிவில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.. 
காங்கிரசின் இந்த முடிவிற்கு பின் நேற்று பல முக்கியமான சம்பவங்கள் நடந்துள்ளன! நீங்கள் எடுப்பதுதான் கடைசி முடிவு.. 
மேலிடம் எதுவும் சொல்லாது.. நீங்களே பேசிக்கொள்ளுங்கள்.. இதுதான் டெல்லி தலைமை தமிழக காங்கிரசுக்கு கூட்டணிக்கு குறித்து சொன்ன விஷயம். 
திமுக கூட்டணி குறித்தும், போட்டியிடும் இடங்கள் குறித்தும் முடிவு எடுக்க தமிழக காங்கிரசுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலிட பொறுப்பாளர்கள் வந்து கூட்டணி பேச்சுவார்த்தையை கவனித்தாலும் கூட முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழக தலைமைக்கும், தமிழகத்தில் இருக்கும் மூத்த காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம் இருந்தும் கூட காங்கிரஸ் கட்சி முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது.
சுதந்திரம் காங்கிரசுக்கு 24-27 இடங்களுக்கு மேல் கொடுக்க முடியாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட 9 தொகுதிகளுக்கு 3 சட்டசபை தொகுதிகள் என்ற வீதத்தில் 27 தொகுதிகள் வரை காங்கிரசுக்கு திமுக கொடுக்கும் முடிவில் இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ.. இது போதாது இன்னும் வேண்டும் என்று தீவிரமாக கோரிக்கை வைத்து வருகிறது.மீட்டிங் மேல் மீட்டிங் போட்டும் இதுவரை இரண்டு கட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்படவில்லை. காங்கிரஸ் 40 தொகுதிகள் வரை கேட்பதால் கடும் இழுபறி நீடித்து வருகிறது. இன்றும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும். இப்படிப்பட்ட நிலையில்தான் இழுபறியை பயன்படுத்தி காங்கிரசுக்கு மக்கள் நீதி மய்யமும் நூல் விட்டு பார்த்தது.


நூல் விட்டது எங்க கிட்ட 40 சீட் என்ன அதுக்கு மேலேயே இருக்கு.. வாங்க பழகி பார்க்கலாம் என்று காங்கிரசுக்கும் மக்கள் நீதி மய்யம் நூல்விட்டு பார்த்தது. காங்கிரசும் கூட நேற்று மூத்த உறுப்பினர்கள் மீட்டிங் எல்லாம் நடத்தி மநீமவிற்கு கொஞ்சம் நம்பிக்கை அளித்தது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை.. திடீர் என்று மூன்றாவது கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக காங்கிரஸ் திட்டவட்டமாக கூறிவிட்டது .

எங்களுக்கு 3ஆவது அணி மீது நம்பிக்கை இல்லை என்று கே.எஸ்.அழகிரி அதிரடியாக அறிவித்துவிட்டார். மக்கள் நீதி மய்யத்துடன் நாங்கள் பேசுவதாக வெளியாகும் செய்திகள் எல்லாம் பொய்.. அதில் உண்மையில்லை என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவும் நேற்று பதறியடித்துக் கொண்டு பேசினார். திமுகவை விட்டு செல்ல வேண்டாம், இதே கூட்டணியில் நீடிக்கலாம் என்ற முடிவிற்கு காங்கிரஸ் வந்ததை அடுத்தே நேற்று இப்படி பேட்டிகள் கொடுக்கப்பட்டு உள்ளன

மூன்றாவது அணிக்கு சென்று தேர்தலை சந்தித்தால் தமிழகத்தில் இருக்கிற வாக்கு வங்கியும் போய்விடும் என்று காங்கிரஸ் அஞ்சுகிறது. 3வது அணி என்பது ஒருவகையில் பாஜக - அதிமுக கூட்டணிக்கு உதவும். பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர காங்கிரசே காரணமாக இருக்க கூடாது என்று அந்த கட்சி நினைக்கிறது. இதெல்லாம் போக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதை ராகுல் காந்தியும் விரும்பவில்லையாம்.

தமிழகம் வந்து மக்களிடம் பேசி இருக்கிறேன்.. பிரச்சாரம் செய்து இருக்கிறேன். இப்போது போய் காங்கிரஸ் கூட்டணி உடைந்தால் அது எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று ராகுல் கருதுகிறார். தமிழக தேர்தலில் தோல்வி அடைந்தால் மீண்டும் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கும் ஆசைப்பட முடியாது என்று ராகுல் கருதுகிறார். தமிழக தேர்தல் வெற்றி பர்சனலாக ராகுலுக்கு முக்கியம் என்பதால் திமுகவை விட்டு விலக காங்கிரஸ் கடுமையாக யோசிக்கிறது.

திமுக திட்டவட்டம் இதெல்லாம் தெரிந்துதான் திமுக தலைவர் ஸ்டாலினும் கிடுக்குபடி போட்டு.. மிகவும் கறாராக பேசி வருகிறார். காங்கிரஸ் போகாது என்று தெரிந்துதான், இடங்களை குறைத்து கொடுக்கும் முடிவில் இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் இருந்தாலும் நாளைக்குள் இந்த கூட்டணி பேச்சுவார்த்தை முடியவில்லை என்றால் தேர்தல் வேலைகளை கவனிப்பதில் இரண்டு கட்சிக்கும் கடுமையான சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக