செவ்வாய், 16 மார்ச், 2021

தமிழக அகதி முகாம்களில் உள்ளவர்களின் குடியுரிமை பற்றி திமுக அதிமுக தவிர ஏனைய கட்சிகள் மௌனம்

May be an image of 3 people
ந. சரவணன் : இந்தியாவிற்கு ஒரு குடியுரிமை சட்டம் / தமிழகத்திற்கு ஒரு குடியுரிமை சட்டமா ? தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளில் இந்தியாவிலேயே வசிக்க விரும்பி இந்திய குடியுரிமை கோருபவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம், என்றும் 1964 மற்றும் 1974 ஒப்பந்தங்களின் படி இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நாடு திரும்பி இந்திய குடியுரிமை பெற முடியாமல் முகாம்களில் வசிக்கும் இந்திய வம்சாவழித்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க ஏற்பாடு செய்வோம் - திராவிட முன்னேற்றக் கழகம். தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
இந்த விடயத்தில் ஏனைய கட்சிகளின் நிலைப்பாடு இன்னமும் முழுமையாக தெரியவில்லை, குறிப்பாக இலங்கை தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி என தங்களை பிரகடனப்படுத்தும் நாம் தமிழர் கட்சி என்ன அறிவிக்க போகிறார்கள் என தெரியவில்லை, மய்யம், அமமுக, தேமுதிக...
கடந்தாண்டு ஜனவரியில் நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் அஇஅதிமுக அமைச்சர் திரு. மாஃபா. பாண்டியராஜன் அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும் இடையில் நடந்த விவாதத்தில் இரட்டை குடியுரிமை என்பது இந்திய குடியுரிமை சட்டத்தின்படி சாத்தியமில்லாத ஒன்று என்று நிரூபணம் ஆனது. பல்வேறு பத்திரிக்கைகளில் செய்தியாக வெளி வந்தது.இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் பேராசிரியர் இரா. இளம்பரிதி அவர்கள் விரிவாக எழுதிய கட்டுரை திமுக வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியிலும் திரு.ஸ்டாலின் அவர்களின் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களிலும் பகிரப்பட்டது.
ஆனால், அதையே அதிமுக அரசு திரும்பவும் தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளது. 2016 ஆம் ஆண்டு அஇஅதிமுக வின் அப்போதைய முதலமைச்சராக செல்வி. ஜெயலலிதா அவர்கள் இருந்த போது சட்டமன்றத்தில் மத்திய அரசு இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்.அதே வகையான இரட்டை குடியுரிமையை நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வலியுறுத்துவோம் என 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அஇஅதிமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறுகிறது.
2016 - லிருந்து தற்போது வரை ஆட்சியில் இருந்த அஇஅதிமுக இது தொடர்பாக என்னமாதிரியான முயற்சிகள் மேற்கொண்டார்கள் என தெரியவில்லை அப்படியானதொரு முன்னெடுப்பிற்கான எவ்வித அறிகுறிகளும் தெரியவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் 11 ம் தேதி புது தில்லியில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள Constitution club of India ல் நடந்த தமிழக மற்றும் பிற மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கத்தில் இது தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களான
ஆகியோர் இது குறித்து மத்திய அரசை வலியுறுத்துவதுடன் தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றி எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பாக குரல் எழுப்பி மத்திய அரசை வலியுறுத்துவோம் என வாக்குறுதியளித்தனர்.
குடியுரிமை சட்டம் என்பது இந்திய அரசிற்கு ஒன்றாகவும் தமிழகத்திற்கு ஒன்றாகவும் இருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க 6 கோடி மக்களின் அரசு சட்டத்தில் இல்லாத ஒன்றை நிறைவேற்றுவோம் என தேர்தல் வாக்குறுதி அளிப்பது எந்த விதத்தில் சாத்தியம் என தெரியவில்லை.
குடியுரிமை வேண்டும் என பெரிதாக வலியுறுத்தாத வட மாநிலங்களில் உள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளைச்சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க சட்ட திருத்தம் கொண்டுவரப்படுகிறது, ஆனால் இந்திய குடியுரிமை வேண்டும், எங்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவழி தமிழர்கள், இரண்டு நாட்டு ஒப்பந்தங்களில் வர வேண்டியவர்கள் அரசுகளின் கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோம் எனவே எங்களுக்கு இந்திய குடியுரிமை தாருங்கள் என நேரடியாக அனைத்துக்கட்சிகளுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கும், உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை என அனைவருக்கும் கோரிக்கையாகவும், ஊடகங்களின் வாயிலாக செய்தியாகவும் பேட்டியாகவும் வலியுறுத்தி வருபவர்களின் குரலுக்கு கிஞ்சித்தும் பதிலில்லை.
இரு அரசுகளின் நிலைப்பாடுதான் என்ன என தெரியப்படுத்தினால், அதிலிருந்து ஒரு முடிவிற்கு வரலாம் அப்படி எதுவுமில்லாமல் மெத்தனமாக இருப்பதென்பது துரோகமின்றி வேறேதுமில்லை.
ஒரு விடயத்தில், அதுவும் குறிப்பாக சுமார் ஒரு இலட்சம் மக்களின் எதிர் காலம் குறித்து முடிவெடுக்க வேண்டிய அரசு 10 வருடங்களாக இவ்வளவு மெத்தனமாக இருக்கிறது, அதை 6 கோடி தமிழர்கள் உள்ள மாநிலம் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக