ஞாயிறு, 21 மார்ச், 2021

திமுக தேர்தல் அறிக்கை : கவனிக்கப்படுவது ஏன்?

மின்னம்பலம் :தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளன.
அதிமுகவைப் பொறுத்தவரை, வாக்காளர்களுக்கு இலவச வீடு, வாஷிங் மிஷின், மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா, இலவச கேபிள் கனெக்‌ஷன் உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்துள்ளது.
மறுபக்கம் திமுகவை பொறுத்தவரை மாதம்தோறும் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உதவித் தொகை வழங்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.                        
அதே சமயத்தில் தமிழகத்தின் எதிர்காலத்துக்கான யோசனைகளும் திமுக அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் சுயாட்சி மற்றும் சுயமரியாதைக்காகப் போராடுவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.                             
திமுக ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பில் 75 சதவிகித விழுக்காடு உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்படும், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 40 சதவிகித இட ஒதுக்கீடு, பல்வேறு ஜாதியைச் சேர்ந்த 215 பேரை கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்போம். கல்வி பொது பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்குக் கொண்டு வரப்படும். சமூக நீதிக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக இருக்கும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தமாட்டோம். தமிழகத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் உள்ளிட்ட தமிழகத்துக்குத் தேவையான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அதுபோன்று திமுக ஆட்சிக்கு வந்தால், ‘ஒரே நாடு, ஒரே எல்லாம்’ போன்ற கொள்கைகளைத் தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என்பது திமுகவின் நிலைப்பாடாக இருக்கிறது. புதிதாக ஒரு அவதாரம் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கிறது என்பது திமுகவுக்கு தெளிவாக புரிகிறது. கலைஞர் தலைவராக இருந்த போது, ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் திமுக தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டுதான் வந்தது. காலத்தின் தேவைக்கு ஏற்றவாறு மறுசீரமைக்கப்பட்டு வந்தது.

தற்போது, புதிய நிர்வாகத்தின் கீழ் திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. முக.ஸ்டாலின், கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாமல் தனது முதல் தேர்தலில் போராடுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில், தற்போது நிலைநிறுத்திக்கொள்ள ஒரு களமாகத்தான் இந்த தேர்தல் அறிக்கை உள்ளது. இதில் ஸ்டாலினின் முத்திரை தெளிவாகத் தெரிகிறது.

தமிழகம், மக்கள் நலத்திட்டத்துக்கான அரசியலை முன்னெடுப்பதில், முன்னோடி மாநிலமாக இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.

தமிழகத்தில் 1967ல் திமுக ஆட்சிக்கு வந்தது. அண்ணாவின் மறைவிற்குப் பிறகு 1969ல், மாநிலத்தின் முதல்வராகவும், கட்சியின் தலைவராகவும் கலைஞர் பொறுப்பேற்றுக்கொண்டார். பெரிய மக்கள் இயக்கத்தின் தொடர்ச்சியாக இந்த ஆட்சிப் பொறுப்பு திமுகவுக்கு வந்தது. இது ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாகும்.

அதிகாரத்தில் நிலைக்க விரும்பினால், மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெளிவாக கேட்டு அதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டும். இதை இரண்டு வழிகளில் திமுக செய்து காட்டியது. மாவட்டச் செயலாளர்கள் சொல்வதைத் தெளிவாகக் கேட்டும், மாநில நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்தும், செய்து காட்டியது.

அரசு நிர்வாகத்தில் உள்ள மாவட்ட அலுவலர்களாக மேல் சாதியினர் மட்டும் பணியாற்றி வந்ததை மாற்றியமைத்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வரக்கூடியவர்களையும் முக்கியமான பொறுப்புகளில் அமர வைத்தது. இதன்மூலம், இந்த அலுவலர்கள் மக்களின் பிரச்சினைகளை முழுமையாகக் கேட்பவர்களாகவும், அதை அரசு நிர்வாகத்துக்குக் கொண்டு செல்பவர்களாகவும் செயல்பட்டனர். இதனால் அரசு நிர்வாகம் மாறியது.

இதன் வெளிப்பாடு, குடிசை மாற்று வாரியம் துவங்கியது, ஏழைகளுக்கு இலவச வீடு, மீனவர்களுக்கு வீடு, காவல் துறையினருக்குச் சிறப்பு ஏற்பாடு, ஆதி திராவிடர் நலன், பொது வினியோக திட்டத்தை செம்மைப்படுத்தி அதை மாநிலம் முழுவதும் கொண்டு சென்றது என தமிழகத்தை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக மாற்ற பல திட்டங்களைச் செயல்படுத்தியது.

இது அரசியல் ரீதியாகச் சரியானது என்பது மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினரின் தேவைகளை உணர்ந்து செயல்படுதல் எனத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தது. அதன் விளைவு வளர்ச்சியின் குறியீடுகள் முன்னேற்றம் அடைந்தன

குறிப்பாக 1970 -1976ல், தனி நபர் வருமானம் 30 சதவிகிதம் உயர்ந்தது. 1971ல் 39.5சதவிகிதமாக இருந்த கல்வியறிவு விகிதம் 1981 54.4 ஆக உயர்ந்தது. 1971ல் 125ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதம், 1977ல் 103ஆக குறைந்தது. இவை அனைத்தும், மேற்குறிப்பிட்ட முயற்சிகளால் தான் நடந்தது.

இதையடுத்து திமுக உடைந்து எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்கினார். ஆனால் மக்கள் நலன் சார்ந்த அரசு இயங்குகிறது என அதற்கு முன்னதாகவே வேரூன்றி நிலை நின்றுவிட்டது. அப்படி இருக்கையில், அதற்கு எதிராக, எம்.ஜி.ஆராலோ, அல்லது அதிமுகவினாலோ செயல்பட முடியாத நிலை உருவானது.

எனவே, மக்களின் எண்ண ஒட்டம் என்னவாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு துல்லியமாகச் செயல்படுவதுதான் திமுகவின் அடிப்படை செயல்பாடு. தமிழக மக்களின் சுய மரியாதையையும், அவர்களுடைய கவுரவத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் தற்போது திமுகவின் கோஷமாக இருக்கிறது. இந்த கோஷம் இந்த காலத்தின் தேவையாக இருக்கிறது.

ஈழம் பிரச்சினையை தாண்டி இப்போது தலையாய பிரச்சினையாக டெல்லியின் மேலாதிக்கம் தமிழகத்தின் கழுத்தை அழுத்திக்கொண்டிருக்கிறது. அதை தூக்கி எறிந்து, அடிமை சங்கிலியை உடைக்க வேண்டும். இதுதான் திமுக முன்னெடுத்துள்ள முக்கியமான கொள்கையாக உள்ளது. எனவே தான் திமுகவின் தேர்தல் அறிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. எனவே தேர்தல் கருத்து கணிப்புப்படி, திமுக ஆட்சிக்கு வந்தால், வாக்குறிதிகளின் படி தமிழகம் சுதந்திரமான மாநிலமாக மாறும்.

தகவல் - நன்றி : Aditi Phadnis, Business Standard

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக