ஞாயிறு, 21 மார்ச், 2021

செந்தில் பாலாஜி : யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது?

Karur constituency  DMK candidate Senthilbalaji interview

nakkheeran.in :தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்துக் கட்சிகளிலும் உள்ள நட்சத்திரப் பேச்சாளர்கள், முக்கியத் தலைவர்கள் உள்ளிட்டோர் தங்களது கட்சியை ஆதரித்து வாக்குச் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், கரூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி நக்கீரனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி பின் வருமாறு...

கடந்த முறை அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நீங்கள், இந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான காரணம் என்ன?

என்னை திமுக’வின் தலைவர் ஸ்டாலின் கட்சியில் இணைத்துக்கொண்ட போது, இடைத்தேர்தல் என்றால் அரவக்குறிச்சி தொகுதியும், சட்டமன்றத் தேர்தல் என்றால் கரூர் தொகுதியும் வேண்டும் எனக் கேட்டு எனது விருப்பத்தை வேண்டுகோளாக வைத்திருந்தேன் அதன் அடிப்படையிலேயே எனக்கு இந்த தொகுதியை ஒதுக்கியிருக்கிறார். மேலும் இது என்னுடைய தொகுதி. அதுமட்டுமில்லாமல் நான் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இங்கு பணியாற்றி இருக்கிறேன்.

அதேபோல், முதலில் என்னுடைய வாக்கை எனக்கு முதலில் நான் போட வேண்டும். ஆதலால், என்னுடைய தொகுதி, என்னுடைய வாக்கு இருக்கும் பொழுது ஏன் வேறொரு தொகுதியில் போட்டியிட வேண்டும். கடந்த காலங்களில் நான் மாற்று இயக்கத்தில் இருந்தபோது சில சூழ்ச்சிகளால் நான் அங்கு நிறுத்தப்பட்டேன், அதற்குள்ளாக  நான் இப்பொழுது போக விரும்பவில்லை. தற்பொழுது என்னுடைய சொந்தத் தொகுதியில் நிற்பதற்காக விருப்பம் தெரிவித்தேன் தலைவரிடம், அவர் அதற்குச் சம்மதம் தெரிவித்து எனக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளார்.

 திமுகவில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்று திமுக தலைமை பேசிவருகிற நிலையில் நீங்கள் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிட உள்ளீர்கள், உங்களுடைய வியூகம் இந்த தேர்தலில் எப்படி இருக்கும்?

கரூர் சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில் திமுகவின் முன்னாள் முதல்வர் கலைஞர், துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் செய்த பல நல்ல திட்டங்கள் இன்னும் மக்கள் மனதில் நினைவில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளான எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் எந்தவித நல்ல திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. மத்திய அரசிடம் இணக்கமாக இருப்பதால் வளர்ச்சித் திட்டங்களைப் பெறுகிறோம் என்று சொல்லும் அதிமுக அரசு, டெக்ஸ்டைல் சிட்டி, கொசு வலை உற்பத்தி என திருப்பூருக்கு அடுத்தபடியாக ஆண்டுக்கு 4,000 கோடிக்கு அதிகமாக வணிகத்தை ஈட்டக்கூடிய தொழில் நகரமாக உள்ள கரூர் நகரத்தை இன்னும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்குக் கீழ் பரிந்துரைக்கவில்லை.

 இப்படிச் சொல்லக்கூடிய அளவுக்கு எதுவும் செய்யாத நிலையில், அவர்கள் எந்த திட்டங்களைக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள்? இதனினும் மோசமானது, நேற்று என் நண்பர் ஒருவர் அதிமுகவின் 10 ஆண்டுகள் சாதனை என்ற ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அதைப் பார்த்ததும் நான் சிரித்தேன். உடனே ஏன் சிரிக்கீர்கள் என்று? அவர் கேட்டார். அப்போது நான் அவரிடம் கூறினேன்; 10 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் நான் சட்டமன்ற உறுப்பினர். ஆனால் புத்தகத்தில் நான் செய்த திட்டங்களும் இடம்பெற்றுள்ளது. யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது? என்று கேட்டேன்

மருத்துவக் கல்லூரி, இரண்டு குகைவழிப் பாதைகள், ஐந்து வழிப் பாதை, அமராவதி ஆற்றின் குறுக்கே மேம்பாலம், கோயம்பள்ளி மேம்பாலம் என அனைத்தும் நான் கேட்டுப் பெற்ற திட்டங்கள். மேலும், கலைஞர் ஆட்சியின் போது, மாயனூர் தடுப்பணைகள், கரூருக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மொத்தம் மூன்று. அதில் ஒன்று திமுக ஆட்சியிலேயே கொண்டுவரப்பட்டது. மீதம் இரண்டு  இன்னும் முடிவடையாமல் இருக்கிறது.

 

ஆமை நடந்து வந்தால் கூட இதற்குள் நடந்து வந்திருக்கும். ஆனால், இந்த திட்டம் இன்னும் நடக்கிறது. எந்த ஒரு திட்டங்களையும் செய்யாத இந்த அரசு, இதில் முதல்வரை எளிதில் அணுகக்கூடிய அரசு என்று வேறு கூறுகிறது. இதில் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், “2016 ஆம் அண்டு வெளியிட்ட அறிக்கையிலிருந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்களை அரசு கூற வேண்டும், கரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அறிவித்த திட்டங்களில் எந்தெந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்று கூற வேண்டும். திமுக நிச்சயமாக எடப்பாடி தொகுதி உட்பட அனைத்துத் தொகுதிகளிலும் அதிகமான வாக்குகளில் வெற்றிபெறும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதில், எந்த வித சந்தேகமும் எங்களுக்கு இல்லை. நான் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயபாஸ்கரை எதிர்த்து நிச்சயம் வெற்றிபெறுவேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக