புதன், 10 மார்ச், 2021

ஸ்டாலின் : வேட்பாளர் பட்டியல்ல தலையிடாதீங்க. யார் யாரை நிறுத்தணும்னு முழுமையான ஆய்வு பண்ணி....


மின்னம்பலம் : நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல் திமுகவில் பலருக்கும் புதுவிதமான தேர்தல் களமாக இருக்கிறது. ஜனநாயக ஜாம்பவானான கலைஞர் இருக்கும்போதே வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்கள் முன்பே, கலைஞரைச் சுற்றியுள்ள முக்கியப் புள்ளிகளுக்கு தெரிந்துவிடும். அவரைப் பிடித்து இவரைப் பிடித்து எப்படியாவது பட்டியலில் இடம்பெற்று விடலாம் என்ற நம்பிக்கை கடைசி நேரம் வரை திமுக பிரமுகர்களிடம் உயிரோடு இருக்கும்.    

ஆனால், இந்தத் தேர்தலில் திமுகவின் வேட்பாளர் பட்டியல் உலகத் தரத்திலான தேர்வின் வினாத்தாளை விடவும் பரம ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. திமுகவில் பலரும், யாரிடம் பேசினாலும் வேட்பாளர் பட்டியலின் ஓரெழுத்தைக்கூட கண்டுபிடிக்க முடியாத புதிரில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மார்ச் 10ஆம் தேதி திமுக தலைவர் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பில் சீட் கேட்ட பலரும் தங்களது ஆதரவாளர்களோடு சென்னையின் ஹோட்டல்களை நிறைத்திருக்கிறார்கள். ‘அண்ணே... அது காங்கிரஸுக்கு போயிடுமாண்ணே... அண்ணே... இது நமக்கு வந்துடுமாண்ணே... லிஸ்ட்ல என்ன இருக்குன்னே ஏதாச்சும் தெரிஞ்சுதா?’ என்ற கேள்விகள்தான் அவர்களின் செல்போனில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு பரம ரகசியமாக ஒரு பட்டியலை தன் பாக்கெட்டில் வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

ஐபேக் பட்டியலையும், மாசெக்கள் பட்டியலையும் வைத்து ஸ்டாலின் தயாரித்துள்ள அந்த பட்டியல் பற்றி திமுக வேட்பாளர்கள் தேர்வு எப்படி? ஸ்டாலின் சொன்ன ரகசியம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதுபற்றிய மேலும் பல தகவல்களும் தற்போது கிடைத்துள்ளன.

திமுகவில் பொதுச் செயலாளர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கட்சி முடிவுகள் எதையுமே ‘அறிவிக்கும்’ அதிகாரம் பெற்றவர் பொதுச் செயலாளர்தான்.

மார்ச் 7ஆம் தேதி காலை அறிவாலயத்தில் காங்கிரஸை 25 தொகுதிகளுக்கு சம்மதிக்க வைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு தனி விமானத்தில் திருச்சி சிறப்புப் பொதுக்கூட்டத்துக்காக புறப்பட்டு விட்டார் ஸ்டாலின். திருச்சியில் தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரி கெஸ்ட் ஹவுஸில் ரெஃப்ரெஷ் செய்துகொண்டு, அதன் பிறகுதான் சிறுகனூர் சென்றார். அந்த கெஸ்ட் ஹவுஸில் ஸ்டாலினைப் பார்த்த துரைமுருகன் கட்டிப் பிடித்துக்கொண்டு, ‘காங்கிரஸ் நம்ம கூட்டணியில இருக்காதோனு நினைச்சேன். ஆனா நீங்க 25 சீட்டுக்கு காங்கிரஸையே சம்மதிக்க வைச்சு கையெழுத்து போடவைச்சிட்டு வந்திருக்கீங்க. இன்னும் எனக்கு வியப்பு அடங்கலை’ என்று கூறி உணர்ச்சிவசப்பட்டு ஸ்டாலினை கட்டிப்பிடித்துக் கொண்டார். சிறப்புப் பொதுக் கூட்டத்திலும் ஸ்டாலினின் தலைமைப் பண்பை மெச்சி கண்ணீர் விட்டார் துரைமுருகன்.

இப்பேர்ப்பட்ட துரைமுருகனுக்கு அவருக்கு நெருக்கமான நண்பரான முரசொலி செல்வம் மூலம் ஒரு தகவலை அனுப்பியிருக்கிறார் ஸ்டாலின்.

“வேட்பாளர் பட்டியல்ல யார் யார் இருக்காங்கனு தெரிஞ்சுக்க ஆசைப்படாதீங்க. உங்க வட்டத்துல அவங்களுக்கு இவங்களுக்குனு எதுவும் பரிந்துரை பண்ண வேண்டாம். தலைவர் 100 சதவிகிதம் மெரிட் லிஸ்ட் ரெடி பண்ணிருக்காரு. தயவுசெஞ்சு அதுல தலையிட வேணாம்” என்று துரைமுருகனுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. கலைஞர் இருந்தபோது, ‘நீதான் வேட்பாளர் நான் சொல்றேன் போ’ என்று சொல்லியனுப்பிவிட்டு வேட்பாளர் பட்டியலில் மாற்றம் கொண்டு வந்தவர் துரைமுருகன். ஆனால், இன்று அவருக்கே வேட்பாளர் பட்டியலில் தன் பெயர் இருக்கிறதா இல்லையா என்பது கூட தெரியவில்லை.

துரைமுருகனுக்கே இந்த நிலைமை என்றால்... ‘தலைவர் என்னைக் கேட்டுதான் லிஸ்ட் க்ளியர் பண்ணிருக்காரு’ என்று சொல்லி வந்த சில இரண்டாம் கட்டத் தலைவர்களும்கூட வேட்பாளர் பட்டியலின் வாசத்தைக் கூட நுகர முடியாமல் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கட்சித் தலைவர்களுக்கு மட்டுமல்ல குடும்ப உறுப்பினர்களுக்கும் கறாரான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார் ஸ்டாலின். வழக்கமாகவே தேர்தலுக்கு முன், ‘இன்னாருக்கு இந்தத் தொகுதி வேண்டும்’ என்று குடும்ப கோட்டாவில் கலைஞருக்கு அழுத்தங்கள் வரும். குடும்பத்தினரை மிகவும் நேசித்த கலைஞர், அவற்றை தட்ட முடியாமல் கடைசி நேரத்தில் மாற்றுவார்.

ஆனால், நேற்று கூட கலைஞர் குடும்பத்தின் முக்கியப் பிரமுகர் ஒருவர் ஸ்டாலினிடம் வேட்பாளர் பட்டியல் பற்றி விசாரித்ததற்கு ஸ்டாலின் சொன்ன பதில் என்ன தெரியுமா?

”இப்போதைக்கு வராதீங்க. ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்கு சிற்சில சௌகரியம் வேணும்னா செய்யலாம். ஆனால், வேட்பாளர் பட்டியல்ல தலையிடாதீங்க. நான் அப்பா மாதிரி இல்லை. அவர் பழுத்த தலைவர். பல முடிவுகளை எடுத்திருக்காரு. நான் முதல்ல சந்திக்கிற இந்த தேர்தல்ல என்னை முதல்ல நிரூபிக்கணும். என்னை நம்பியிருக்கிற கோடிக்கணக்கான கட்சிக்காரங்களுக்கு நான் செய்யணும். அதனால யார் யாரை நிறுத்தணும்னு முழுமையான ஆய்வு பண்ணி நிறுத்தப் போறேன். இதுல யாரும் தலையிட வேணாம்" என்று தண்மையாகவும் அதே நேரம் உறுதியோடும் சொல்லிவிட்டார் ஸ்டாலின்.

ஸ்டாலினின் நிழல் என்று சொல்லிக் கொள்பவர்களுக்குக்கூட வேட்பாளர் பட்டியலில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. திமுகவில் இது ஆச்சரியம். ஆனால், உண்மை என்கிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக