புதன், 10 மார்ச், 2021

சென்னை மீன்களில் 80 சதவிகித பிளாஸ்டிக் துகள்கள்!

சென்னை மீன்களில் 80 சதவிகித பிளாஸ்டிக் துகள்கள்!

மின்னம்பலம்  :சென்னையில் பிடிபடும் மீன்கள் எப்படி இருக்கின்றன என்பது குறித்து சென்னையில் உள்ள தேசிய கடற்கரை மையம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் சென்னையில் பிடிபடும் 80 சதவிகித மீன்களில் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை கடலிலும், நீர் நிலைகளிலும் வீசிவிடுகிறோம். மழைக்காலத்தில் ஆறுகள், நீரோடைகள் மூலமாக செல்லும் தண்ணீர், பிளாஸ்டிக் கழிவுகளைக் கடலுக்கு இழுத்து செல்கிறது. அவ்வாறு கடலுக்கு வரும் பிளாஸ்டிக் கழிவுகளை, மீன்கள் உணவு என கருதி சாப்பிட்டுவிடுகின்றன. இதனால் இப்போது பெரும்பாலான மீன்களின் உடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்து இருப்பதை காண முடிகிறது.   இதுகுறித்து சென்னையில் உள்ள தேசிய கடற்கரை மையம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. பட்டினப்பாக்கம் பகுதியில் விற்கப்படும் பல வகை மீன்களை அவர்கள் ஆய்வு செய்தார்கள். அதில் மக்கள் விரும்பி சாப்பிடக்கூடிய பல வகை மீன்களின் உடல்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக கானாங்கெளுத்தி, கிழங்கா, சீலா, மஞ்சள் கொடுவாய், சிவப்பு கொடுவாய், சங்கரா, சுறா ஆகிய மீன்களில் 80 சதவிகிதம் அளவுக்கு பிளாஸ்டிக் துகள்கள் காணப்பட்டன. மீன்களின் செதில்கள், உடல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தபோது அவற்றில் 5 மில்லி மீட்டர் அளவுக்கு குறைவான துகள்கள் அதிகமாக காணப்பட்டன. சில மீன்களில் 1.93 மி.மீட்டரில் இருந்து 2.03 மி.மீட்டர் அளவுக்கு பிளாஸ்டிக் துகள்கள் இருந்தன.

குறிப்பாக சிவப்பு, இளஞ்சிவப்பு நிற பிளாஸ்டிக் கழிவுகளையே உணவு என கருதி மீன்கள் அதிகமாக சாப்பிடுகின்றன. எனவே இந்த நிற பிளாஸ்டிக் கழிவுகள்தான் மீன்களில் அதிகமாக தென்பட்டன. இத்துடன் நீலம், பச்சை, வெள்ளை, ஊதா நிற பிளாஸ்டிக் துகள்களும் மீன்களின் உடலில் இருந்தன.

நாம் துணி துவைக்கும்போது ஆடைகளில் உள்ள பைபர் துகள்களும் தண்ணீரில் கலந்து பின்னர் கடலுக்குச் செல்கிறது. அவையும் மீன்களின் உடலில் காணப்படுகின்றன. இதே போல நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள், பற்பசை, ஃபேஸ் வாஷ் போன்றவற்றிலும் பைபர்கள் கலந்து இருக்கின்றன. அத்துடன் வி‌ஷத்தன்மை கொண்ட பொருட்களும் இவற்றில் அடங்கி உள்ளன.

அவை மீன்களின் உடல்களில் கலந்து நமக்கு உணவாக வருகின்றன. எனவே இவற்றை சாப்பிட்டால் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறுகின்றனர். ஆனால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது தொடர்பாக மேலும் ஆய்வுகளை நடத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பிளாஸ்டிக் கழிவுகள் நம் உடலில் கலக்கும் போது தசைகள் பாதிக்கப்படும். நரம்பு மண்டலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இனப்பெருக்க பிரச்சனைகள் ஏற்படும். தைராய்டு பிரச்சனை, புற்றுநோய் போன்றவையும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

இதுதவிர பிளாஸ்டிக் துகள்கள் பல வகைகளில் நமது உடல்நலத்தை பாதிக்க செய்கின்றன. கடல்களில் கலக்கும் பிளாஸ்டிக் துகள்கள் பல்வேறு வகையிலும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே மீன் இனம் அழியும் நிலை ஏற்படும் என்றும் இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

-ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக