செவ்வாய், 2 மார்ச், 2021

2 சீட்: மமகவில் அதிருப்தி குரல்கள்! சசிகலாவைச் சந்திக்கிறார் ஹைதர் அலி

தி.மு.க. கூட்டணி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-3; மனிதநேய மக்கள் கட்சிக்கு- 2 ; ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகளுடன் பேச்சுவார்த்தை
minnambalm : திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு நேற்று (மார்ச் 1) ஸ்டாலின் பிறந்தநாளன்று அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டார் மமக தலைவர் ஜவாஹிருல்லா. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாட்டு நலனுக்காகவும், தமிழக நலனுக்காகவும் தியாக மனப்பான்மையோடு இதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார். மனித நேய மக்கள் கட்சி இரண்டாம் நிலை நிர்வாகிகள் மத்தியில் இதற்கு கடுமையான வருத்தமும், ஏமாற்றக் குரல்களும் வெளிப்பட்டுவருகின்றன. TMMKMEDIA என்ற அவர்களது முக நூல் பக்கத்திலேயே இதுகுறித்த கடுமையான கருத்துகளை வெளிப்படையாக பதிவிட்டு வருகின்றனர்.

“2 தொகுதிகளையும் அவர்களுக்கே கொடுத்து விட்டு தேர்தலை கௌரவமாக புறக்கணித்து இருந்தால்? தொண்டர்களின் உழைப்பாவது மிஞ்சியிருக்கும். எத்தனை எத்தனை போராட்டங்கள், மாநாடுகள், உடல் உழைப்பு, கைசெலவு செய்த, சாதாரண தொண்டனின் மனம் ஏற்க மறுக்கிறது. இதயத்தில் குடியிருந்தே அடிமையாகி போனவர்கள்? என்று தலைநிமிர்வோமோ!”என்று ஹாஜா முபாரக் என்பவர் பதிவு செய்துள்ளார்.

“ஒப்பந்தத்தை கிழித்து மூஞ்சில் எறிந்து விட்டு வாருங்கள். அறிவாலயம் வட மரைக்காயர் தெருவை தேடி வரும்” என்று மஜித் கான் என்பவர் தெரிவித்துள்ளார்,

முகமது ஷமீர் என்பவர், “பாஜகவையும் அடிமை அதிமுகவையும் எதிர்க்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. அதற்காக மூச்சுக்கு முன்னூறு தடவை தளபதி தளபதி என்றும் அடுத்த முதல்வர் என்று ஸ்டாலினை புகழ்ந்ததை ஏற்றுக்கொள்ள மனம் கனக்கிறது. கூடுதல் இடம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக கூட்டணியில் இல்லாத, கூட்டணிக்கு வர விரும்பிய சகோதர கட்சிகளை கடுமையாக விமர்சிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும், பேசவும் செய்தோம்.

பொருளாதாரத்திலும், உடல் உழைப்பாலும் பல்வேறு போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கூட்டணி கட்சி என்ற பெயரில் முழு ஆதரவு அளித்தோம்.. நமக்கான முழு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதில் நமக்கு கிடைத்த பாடம். பலநாள் கொள்கை கூட்டணியை விட சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டணிக்கு வலிமை அதிகம்.. நமக்கு கொடுத்த இரண்டு இடத்தில் நாம் நூற்றுக்கு ஐநூறு சதவீத உழைப்பை செலுத்தி வெற்றி பெறுவோம் இன்ஷா அல்லாஹ்”என்று கூறியுள்ளார்.

“ ஒரு காலத்தில் முஸ்லிம் லீக் இரண்டு சீட்டிற்கு திமுக ,அதிமுகவிடம் மாறி மாறி பிச்சை எடுக்கிறது கெத்தா பேசி அரசியலில் குதித்த நாம் இன்று என்ன செய்துகொண்டிருக்கிறோம்?” என்று சன்னி என்பவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

யாசின் கே என்பவர் ஒரு படி மேலே போய், “நமக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போதும் மனிதநேய மக்கள் கட்சி தேவையில்லை சீட்டுக்கள் இல்லாமல் களம் ஆடலாம்” என்று கூறியுள்ளார்.

கலீல் ரகுமான் என்பவர், “ திமுக கூட்டணியில் இஸ்லாமிய கட்சிகளுக்கு குறைந்த பட்சம் 12 தொகுதி கொடுக்கலாம். முஸ்லீம் லீக்கிற்கு 4, SDPI 4, மனித நேய மக்கள் கட்சிக்கு 2, மனித நேயஜனநாயக கட்சிக்கு 2, ஆக 12 தொகுதிகளை கொடுத்தால் இஸ்லாமியர்களின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் அந்த ஓட்டு சதவிகிதம் ஓட்டுப்பிரியாமல் திமுகவிற்கு கிடைக்கும்.

இஸ்லாமியர்கள் முன்பு போல் இல்லை. இதயத்தில் கொடுக்கும் இடத்தை ஏற்கமாட்டார்கள். தலைவர்கள் தலையை ஆட்டினாலும் இஸ்லாமிய மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள்”என்று கூறியுள்ளார்.

இப்படி மமகவின் முடிவை எதிர்த்தும் வேதனை தெரிவித்தும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வரும் நிலையில்...

ஏற்கனவே தமுமுக தலைவராக இருந்தவரும், வக்ஃப் போர்டு முன்னாள் தலைவருமான ஹைதர் அலி இன்று சென்னையில் சசிகலாவை சந்திக்க இருக்கிறார் என்கிறார்கள் அவரது வட்டாரத்தில்.

ஜவாஹிருல்லாவுக்கும், ஹைதர் அலிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஹைதர் அலியையும் அவரது ஆதரவாளர்களையும் ஜவாஹிருல்லா தமுமுகவில் இருந்து நீக்கினார். இவர்களுக்கு இடையிலான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது,

இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை சந்திக்க ஹைதர் அலி நேரம் கேட்டிருந்தார். இன்று அவருக்கு நேரம் தரப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. சசிகலாவை சந்தித்துவிட்டு அவர் அமமுக பொதுச் செயலாளர் தினகரனையும் சந்திக்கக் கூடும். ஏற்கனவே தினகரன் தன் தலைமையில் ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஹைதர் அலியின் சந்திப்பு சிறுபான்மை அரசியலில் முக்கியத்துவம் மிகுந்ததாக பார்க்கப்படுகிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக