வெள்ளி, 26 மார்ச், 2021

இந்தியாவிலேயே இலவச சானிட்டரி நாப்கின் திட்டம் தமிழகத்தில்தான் முதலில் .. 2008 இல் திமுக ஆட்சியின்போது ...

 Nandhini Vellaisamy  : அரசு கல்லூரிகளில் சானிட்டரி நாப்கின்களை  இலவசமாக வழங்க உள்ளதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே இந்த திட்டத்தை ராஜஸ்தான் முதலில் தொடங்கியுள்ளதாக,  ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டிருந்தது.
அதற்கு அரசியல் விமர்சகரும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் மருத்துவருமான சுமந்த் சி.ராமன், “2011ஆம் ஆண்டில் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட  தொலைநோக்கு திட்டம் இது. அம்மாவால் தொடங்கப்பட்டு மற்ற மாநிலங்கள் கடைபிடிக்கும் மற்றுமொரு தொலைநோக்கு திட்டம். அதனால், இந்த திட்டத்தை முதலில் தொடங்குவது ராஜஸ்தான் மாநிலம் அல்ல, திட்டத்திற்கு உரிமை கோரும் முன்னர் உண்மையை சோதிக்க வேண்டும்” என ட்வீட் செய்தார்.


உண்மையில் இந்த திட்டம் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டம் அல்ல... இதற்கு 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் தான் அடித்தளமிடப்பட்டது. சென்னை மேயராக மா.சுப்பிரமணியன் இருந்த போது மாநகராட்சி பள்ளிகளில் தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, பள்ளி மாணவியாக நானும் இதனால் பயனடைந்திருக்கிறேன்.
திட்டம் குறித்து மேலும் சிலவற்றை அறிய இணையத்தில் தேடினேன். அதில், The Hindu இணையதளத்தில் அக்டோபர் 23, 2008 இல் இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தி கண்ணில் சிக்கியது.
முதல்கட்டமாக 9 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனால் தொடங்கப்பட்டிருக்கிறது.
அதிலுள்ள புகைப்படத்தை பார்த்ததும் ரொம்ப ஆச்சர்யமாகிடுச்சு. அந்த புகைப்படத்தில் பள்ளி மாணவிகளாக நாங்கள். ஆக, அந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதே பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தான்.
அன்றைய நாள் நினைவுக்கு வருகிறது. சானிட்டரி நாப்கின்கள் குறித்தும், மாதவிடாய் சுழற்சி, அன்றைய நாட்களில் கடைபிடிக்கப்பட வேண்டிய சுகாதாரம், நாப்கின்களை சுகாதாரமான முறையில் அகற்றுவது குறித்து எங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இப்போது சானிட்டரி நாப்கின்கள் ஆரோக்கியமானதா என்பது குறித்த விவாதங்கள் நடைபெறுகிறது. ஆனால், மாதவிடாய் காலத்தில் துணிகளை சுகாதாரமற்ற முறையில் பயன்படுத்தும் காலத்தில் (2008-லும் துணிகள் பயன்படுத்துவது பரவலாக இருந்தது), பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்குவது எவ்வளவு சிறந்த திட்டம் என்பதை எண்ணிப் பார்க்கிறேன்.
மாணவியாக அப்போது அத்திட்டம் எவ்வளவு முன்னோடியான திட்டம் என்பதை அறியாமலேயே பலன்களை அனுபவித்திருக்கிறோம்.
அதன்பிறகு தான் ஜெயலலிதா, அரசு மருத்துவமனைகள், கிராமப்புற பெண்கள், தாய்ப்பாலூட்டும் பெண்கள் என இத்திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறார். இப்போது இந்த திட்டத்தின் அவலநிலை குறித்தும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த திட்டம் குறித்தும், அதன் தற்போதைய நிலை குறித்தும் விரிவாக எழுத வேண்டும். 😇😇
https://www.thehindu.com/.../Free.../article15327390.ece

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக