புதன், 24 மார்ச், 2021

இனி வரும் உலகம் – தந்தை பெரியாரின் செல்போன் தீர்க்கதரிசனம் 1943 இல் பெரியார் கூறிய விஞ்ஞான..

கிழக்கையும் மேற்கையும் இணைத்த சூரியன்

1943 ஆம் ஆண்டு திருமண நிகழ்ச்சி யொன்றில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவினை,
பெரியாருடன் அந் நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணா , முழுமையாகக் குறிப்பெடுத்து, பின்னர் தெளிவுடன் எழுதி பெரியாரிடம் காண்பித்து ஒப்புதல் பெற்று தமது திராவிடநாடு இதழில்’ ஏட்டில் 21.1.1943, 28.1.1943 ஆகிய தேதிகளில் வெளியிட்டார்.
    போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும் அதிவேக சாதனமுமாகவே இருக்கும்.
    கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்.
    ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்.
    உருவத்தை தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டி பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.
    மேற்கண்ட சாதனங்களால் ஒரு இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக்கொடுக்கச் சாத்தியப்படும்.
    உணவுகளுக்குப் பயன்படும்படியான உணவு, சத்துப்பொருள் களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக் கூடிய உணவு ஏற்பட்டு விடும்.
    மனிதனுடைய “ஆயுள் நுாறு’ வருஷமென்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம். இன்னும் மேலே போனாலும் போகலாம்.    இனி வரும் உலகம் – பெரியார்


    பிள்ளைப்பேறுக்கு ஆண் – பெண் சேர்க்கை என்பது கூட நீக்கப்படலாம்.
நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக பொலிகாளைகள் போல் தெரிந்தெடுத்து மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி, நல்ல குழந்தைகளைப் பிறக்கச்செய்யப்படும்.
    ஆண் – பெண் சேர்க்கைக்கும், குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டு விடும்.
    மக்கள் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு ஒரு அளவுக்குள் கொண்டு வந்து விடக்கூடும்.

அநுபோகப் பொருள்களும் வெகுதுாரம் மாற்றமடைந்து விடும். அதற்காக ஏற்படும் செலவும் அதை அனுபவிக்கும் முறையும் வெகு சுருக்கமாக மாற்றமடைந்துவிடும்.
ஒரு டன்னுள்ள மோட்டார் கார், ஒரு அந்தர் வெயிட்டுக்கு வரலாம்; பெட்ரோல் செலவு குறையலாம்; பெட்ரோலுக்குப் பதில் மின்சார சக்தியே உபயோகப்படுத்தப்படலாம்; அல்லது விசை சேகரிப்பாலேயே ஓட்டப்படலாம்.
மின்சாரத்தின் உபயோகம் எல்லா மக்களுக்கும் பயன்படக்கூடிய விதமாகவும், மக்கள் வாழ்க்கை வசதிகளுக்குத் துணை செய்யும் விதமாகவும் விரியும் – பெருகும். விஞ்ஞானம் வாழ்க்கையில் இன்பம் அனுபவிக்கப் பயன் படும்படியான அதிசயப் பொருள்களும், கண்டுபிடிப்புகளும் தனிப்பட்டவர் களின் இலாபத்துக்காக என்று முடங்கிக் கிடக்காமல் சகல மக்களும் சவுகரியம் தருகிற பொது சாதனங்களாக அமையும்.


முன்னுரை  :இன்றைய உலகானது. பழங்கால உலகம் என்பதிலிருந்து நாளுக்கு நாள் எப்படி மாறுதலடைந்து வந்திருக்கிறது. இனி, சில நுாற்றாண்டுகளில் எப்படிப்பட்ட மாறுதலை அடையும் என்பனவாகிய விஷயங்கள், பகுத்தறிவு வாதிகளுக்குத்தான் ஏதாவது தெரியக்கூடுமே தவிர, புராண இதிகாச பண்டிதர்கள் என்பவர்களுக்கு அதுவும் நம் கலைகாவியப் பண்டிதர்களுக்கு தெரிவது சுலபமான காரியமல்ல.

ஏனெனில், நமது பண்டிதர்கள் பகுத்தறிவுக்கு ஒவ்வாத புராணங்களையும், ஆராய்ச்சிக்குப் பொருந்தாத இலக்கியங்களையும், பிரத்தியட்ச அனுபவத்திற்குச் சம்பந்தப்படுத்த முடியாத கலைக் காவியங்களையும் படித்து உருப்போட்டு, அவைகளிலிருப்பவைகளை அப்படியே மனத்தில் பதிய வைத்துக் கொண்டிப்பதோடல்லாமல், அவைகளில் சம்மந்தப்பட்ட கதை கற்பனைகளை உண்மையாக நடந்தவைகள் என்றும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் ஆவார்கள்.

பகுத்தறிவுவாதிகள் அந்தப் படிக்கில்லாமல் அனுபவத்தையும், தங்கள் கண்களில் தென்படும் காட்சிகளையும் இயற்கையின் வழிவழித்தன்மை களையும், அவற்றால் கண்டுபிடிக்கப்பட்டு வரும் புதுமை அதிசயங்களையும் மனிதனுக்கு முன் காலத்தில் இருந்து வந்த அறிவாற்றலையும் சிந்தித்து இன்று உள்ள அறிவையும், ஆற்றலையும், இனி ஏற்படும் அறிவாற்றலையும், சாதனங்களையும் மற்றும், இவை போன்றவைகளையும் ஆராய்ச்சிக்கண்களோடு பார்ப்பவர்களாவார்கள்.

பண்டிதர்கள் பழங்காலத்தையே சரியென்று கருதிக்கொண்டு, அதற்கே புது உலகம் என்று பெயர் கொடுத்து அங்கே செல்ல வேண்டுமென்று அவாவுடையவர்கள். பகுத்தறிவுவாதிகள் எவரும் ஒரு ஒரு விநாடியையும் புதிய காலமாகக் கருதி புதிய உலகத்திற்குப் போவதில் ஆர்வமுள்ளவர்கள். பண்டிதர்கள் என்பவர்கள் எந்த நாட்டி லும் இப்படித்தான் இருப்பார்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. நம் நாட்டுப் பண்டிதர்கள் என்பவர்களில் பெரும் பாலோர் களைக் கருதித்தான் நாம் இப்படிச் சொல்கின்றோம். ஏனெனில், நம் நாட்டுப் பண்டிதரென்பவர்களுக்குப் பகுத்தறிவு ஏற்படவோ அது வளர்ச்சி யடையவோ முடியாமல் தடை செய்யத் தகுதியான மாதிரியிலேயே

அவர்களது படிப்பும் பரீட்சையும் இருக்கிறது. ஆதலால், நம் பண்டிதர் என்பவர்களுக்குப் பகுத்தறிவு ஏற்படுவதற்குத் தடையாக இருப்பது அவர்களது படிப்பே ஒழிய, அவர்களது அறிவுக்கு குறைவன்று. தவறிக் கீழே விழுந்த பிள்ளைக்கு அரிவாள் எதிரில் இருந்தால், எப்படி அதிகக் காயம் ஏற்படுமோ, அது போல புராண இதிகாசக் கலைச் சேற்றில் விழுந்த நமது பண்டிதர்களுக்கு இயற்கை வாசனை அறிவால் ஏற்படக்கூடிய பகுத்தறிவையும் பாழ்படுத்தத் தக்க வண்ணம், மூடநம்பிக்கைச் சமய மதங்கள் என்னும் விஷப்பாம்புகள் அவர்களைக் கரையேற விடாதபடி சுற்றிக் கொண்டிருக்கின்றன.

நம் மதவாதிகள், சிறப்பாக இந்து மதவாதிகள் என்பவர்கள் பண்டித மதவாதிகளை விட மோசமானவர்கள். பண்டிதர்கள் ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால் இருந்த உலகத்துக்குப் போக வேண்டுமென்றால், மதவாதிகள் பதினாயிரக்கணக்கான வருஷங்களுக்கும், பல யுகங்களுக்கும் முன்னால் இருந்த உலகத்துக்குச் செல்ல வேண்டுமென்பவர்கள். இவர்கள் இருவருக்கும் பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாததும், மனித சக்திக்கு மீறினதுமான காரியங்களிலும், அசாத்தியமான கற்பனைகளிலுந்தான் நம்பிக்கையும் பிரியமும் இருக்கும். ஆகவே இப்படிப்பட்ட இவர்களால் கண்டறியப்படும் புது உலகம் , காட்டுமிராண்டிகள் வசிக்கும் உலகமாக இருக்கும் என்பதையும், அவர்களை மதிக்கும் மக்கள் பெரும்பாலும் மூட நம்பிக்கையில் மூழ்கிய காட்டுமிராண்டிகளாய் இருப்பார்கள் என்பதையும் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஆதலால் தான், “பழையவைகளுக்கே மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவர்களால், மாறுதலின் சக்தியும், அம் மாற்றத்தின் தன்மையும், அதனால் ஏற்படும் பயனும், உணர்ந்து கொள்ளவோ எதிர்பார்க்கவோ முடியாது’ என்று சொல்ல வேண்டியதாயிற்று.

பழையவைகளை ஏற்கும் அளவுக்கும், நற்பயன் தரவேண்டிய அளவுக்கும், உபயோகித்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை நாம் வலியுறுத்துவதில் பின் வாங்க மாட்டோம். ஆனால், புதியவற்றிலேயே முயற்சியும், ஆராய்வதில் ஆர்வமும் இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், அவற்றினால் தான் இயற்கையைப் படிப்பது என்பதோடு, புதியவற்றைக் கண்டு பிடிப்பதும், முற்போக்கு அடைவதும் (இன்வென்ஷன், ப்ராகரஸ் சுலபத்தில் சாத்தியமாகலாம்.

இன்று உலகத்தின் வேறு பல பாகங்களில் உள்ளவர்களால் கண்டு பிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழைய வற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி, அப்பழைய வற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடு நிலைமை அறிவோடு முயற்சித் ததன் பலனாலேயே ஏற்பட்டவைகளாகும். அவை இன்று எல்லா

மக்களாலும் ஆதரவோடு அனுபவிக்கப்படுகின்றன.

ஆகவே, இதை உணர்ந்தவர்கள் தான் இனி சில நுாற்றுக்கணக்கான ஆண்டுகளில் எப்படிப்பட்ட உலகத்தைக் காணலாம். அதற்கு என்ன முயற்சி செய்யலாம் என்பதை ஒருவாறு கற்பனைச் சித்திரமாகவாவது தீட்ட முடியும்.
– ஈ. வெ . ரா.
இனிவரும் உலகம்

உலகத்தை ஒருவாறு படித்தறிந்த பல பெரியோர்களின் அபிப்பிராயங் களையும், உலகின் பல பாகங்களில் இதுவரை ஏற்பட்டு வந்திருக்கும் காரியங் களையும் ஊன்றிப் பார்ப்போமானால், இனி வரும் உலகமாவது அரசனது ஆட்சி அற்றதாகவே இருக்கும். ஏனெனில் உலகத்தில் தங்கம், வெள்ளி முதலிய (உலோக) நாணயங் களும் தனிப்பட்டவர்களுக்கென்று சொத்து உடைமையும், உரிமையும் இருக்காது. ஆதலால் அப்படிப்பட்ட உலகத்துக்கு அரசனோ இன்றுள்ளது போன்ற ஆட்சியோ எதற்காக வேண்டியிருக்கும்? மக்கள் உயிர் வாழ்க்கைக்கும், ஓய்வுக்கும், அனுபவிப்புக்கும் இன்றுள்ள உழைப்புகள், கஷ்டங்கள், கட்டுக்காவல்கள் இருக்காது.

இன்றுள்ள பெருவாரியான மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து வேலை செய்யும் நேரம் அதிகம் பயன் அனுபவிக்கும் நேரமோ குறைவு.

உண்ணும் உணவுப்பொருள்களுக்கும், அனுபவிக்கும் பொருள்களுக்கும் வசதி அதிகம். போதிய உணவில்லாமலும், குறைந்த பட்ச சுகபோக அனுபவமில்லாமலும் பட்டினிக் கிடக்கும் மக்களும், வறுமையை அனுபவிக்கும் மக்களும் அநேகம் !

சுயேச்சைக்கு வசதியும், சுய நிர்ணயத்துக்கு மார்க்கமும் தாராளமாய் இருக்கும். சுயேச்சையோடு இருப்பவர்களோ தன்னம் பிக்கையோடு இருப்பவர்களோ மிகக்குறைவு.

பொருள் செய்வகைகளும் அவற்றிற்கு வேண்டிய மூலப் பொருள்களும் ஏராளமாயிருக்கின்றன. குறைந்த அளவு அதாவது, இன்றியமையாத , தேவையான பொருள் கூட இல்லாமல் கஷ்டப்படும் வேதனையும் படுகிற மக்கள் அநேகர்.

நிலப்பரப்பு ஏராளம், நிலமில்லாதவர்கள் என்பவர்கள் அநேகர். இப்படிப்பட்ட , சர்வ செல்வமும் நிறைந்து உள்ள உலகில் பட்டினி , வறுமை, மனக்குறைவு , வாழ்வுக்கே போராட்டம் ஏன் உண்டாக வேண்டும்? இவைகளுக்கும், கடவுள்களுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? இவைகளுக்கும், மதங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

அல்லது இவைகளைக் கடவுளர்களுக்குச் சம்பந்தப்படுத்திக் கொண்டிருக்கும் மக்களில் எந்தக் கடவுளையாவது, எந்த மதத்தையாவது நம்பிப் பின்பற்றி, வழிபடுகிற மக்களில் யாருக்காவது மேலே கண்ட குறைபாட்டுணர்ச்சி இல்லை என்று கூறமுடியுமா?

அல்லது கடவுள், மதம் முதலியவைகளைப் பற்றி இலட்சியப்படா விட்டாலும், மனிதனுக்கு மேற்கண்ட குறைகளை நீக்கிக்கொள்ள அறிவு இல்லை என்றாவது சொல்லமுடியுமா? உலக ஜீவராசிக்குள்ளே மனிதனே அதிக அறிவு பெற்றவன். கடவுள்களையும், மதங்களையும், ஞானமார்க்கங்களையும், ஆத்மார்த்த அரிய தத்துவங்களையும், மனிதன்தான் கண்டுபிடித்திருக்கிறான். எத்தனையோ மனிதர்கள் தெய்வீகச் சக்தி பெற்று தெய்வத்தோடு கலந்தும், தெய்வமாகியும், இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களாலும் மேற்கண்ட குறைபாடு , பட்டினி , அவரவர் உணவுக்கே கஷ்டப்படுவது முதலாகிய சாதாரண தன்மைகள் கூட நீங்கப்படவில்லை என்றால், இவற்றிற்கு முக்கியக் காரணம், மேலே குறிப்பிட்ட கடவுள், மதம், ஞானமார்க்கம், நீதி , ஒழுக்கம், அரசாட்சி என்பவைகளும், மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட அதிக அறிவை மேற்கண்டவற்றின் கட்டுப் பாடு களிலிருந்து வேறுபடுத்தித் தனித்திருந்து சிந்தித்துப் பார்க்காததும் தான் காரணங்களாகும் என்பது விளங்கவில்லையா?

இப்போது மக்களில் ஒரு சிலர், மேற்கண்ட ஆத்மார்த்தம் முதலிய சூட்சுமங்களில் உள்ள கவலையையும் மூட நம்பிக்கை களையும் விட்டு, தம் அறிவையும், அனுபவத்தையுமே நம்பிச் சிந்தித்ததன் காரணமாகவே பல அற்புதங்களும், அதிசயங்களும் காண முடிந்தபின், மேல் நாடுகளிலே அதிகம்பேர் அந்தப்படி சிந்திக்க முன் வந்துவிட்டார்கள். பழைய உலகம் இனி நிலைக்காது என்று முடிவு கட்டுகிறார்கள். புதிய உலகத்தைப் பற்றியே சிந்திப்பதும், சித்திரிப் பதும், எதிர்பார்ப்பதுங்கூட இன்று பல அறிஞரின் கவலை யாகப் போய்விட்டது.

ஏன் பிறக்க வேண்டும்? சகல சவுகரியங்களுமுள்ள இப்பரந்த உலகில் உணவுக்காக என்று ஒருவன் ஏன் பாடுபட வேண்டும்? ஏன் சாக வேண்டும்? என்கின்ற பிரச்சினைகள் சிந்தனைக்கு மயக்கமளித்து வந்த சிக்கலான பிரச்சனைகளாக இருந்தவை, இன்று தெளிவாக்கப்பட்டுப் பரிகாரம் தேடப்பட்டு வருகிற காலம் நடக்கிறது. இந்தப்போக்கு சீக்கிரத்தில் மக்களின் பொது வாழ்விலேயே

பெரியதொரு புரட்சியை உண்டாக்கும்படியான புதிய உலகத்தை உண்டாக்கித்தான் தீரும். அப்போதுதான் நான் முன் சொன்ன பணம், காசு என்ற உலோக நாணயமே இருக்காது. அரசு ஆட்சி இருக்காது; இழிவான வேலை என்பது இருக்காது; அடிமைத்தன்மை இருக்காது; ஒருவரையொருவர் நம்பிக்கொண்டு வாழவேண்டிய அவசியம் இருக்காது பெண்களுக்குக் காவல் கட்டுப்பாடு, பாதுகாப்பு என்பவை யான அவசியம் இருக்காது.

காந்தியாரைப் போலவும், மடாதிபதிகளைப் போலவும், அரசர்கள், ஜமீன்தார்கள் முதலிய பெரும்பெரும் செல்வான்கள், போக போக்கியம் அனுபவிப்போர்கள் போலவும் பார்ப்பனர்கள் போலவும், உலக மக்கள் யாவரும் உயர்வாழ்வு வாழ வேண்டும் மானாலும், அவ்வாழ்வு வாழ்வதற்கு வேண்டிய சவுகரியங்கள் ஏற்படவும், நிலைக்கவுமான காரியங்கள் ஏற்பட்ட ஒரு மனிதனுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யவேண்டிய அவசியமே இருக்காது. ஒரு மனிதன் தனது காலுக்கோ காதுக்கோ நாசிக்கோ நயனத்துக்கோ வயிற்றுக்கோ எலும்புக்கோ வலி இருந்தாலும், அவன், “எனக்கு வலிக்கிறது’ என்று சொல்லுவது போல் , உலகில் வேறு எந்தத் தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்தையும் , குறைப்பாடு களையும், ஒவ்வொருவரும் சமூகமே) தங்களுக்கு ஏற்பட்டது போல் நினைக்கும்படியும், அனுபவிப்பது போல் துடிக்கும்படியும், அவ்வளவு கூட்டு வாழ்க்கையும், ஒற்றுமை உணர்ச்சியும் ஏற்படும்.

உலகில் எந்தப் பாகத்திலும் இன்றைய மாதிரியான போர் | நடக்காது. மக்கள், மக்களால், யுத்தம், கொள்ளை, கொலை முதலிய வற்றின் பேரால் மடியமாட்டார்கள். உணவுக்காக வேலை செய்ய வேண்டிய வேலையில்லாத் திண்டாட்டம் இருக்காது. மக்கள், உடற்பயிற்சிக்காக வேலை செய்ய வேண்டுமே என்கின்ற கவலை கொண்டு உழைப்பு வேலைக்காக அலைவார்கள்.

அதிசயப் பொருளும், அற்புதக் காட்சிகளும், அவற்றின் அநுபவங்களும் மக்கள் எல்லோரும் ஒன்றுபோல் அனுபவிப்பார்கள். லேவாதேவிக்காரர்கள், தனிப்பட்ட வியாபாரிகள், தொழிற்சாலை , இயந்திர சாலை முதலாளிகள், இரயில், பஸ் சொந்தக்காரர்கள், கமிஷன் ஏஜண்டுகள், இன்ஷ்யூரன்ஸ் ஏஜண்டுகள், தரகர்கள், விளம்பரங்கள் மற்றும், வேறு எவ்விதமான தனிப்பட்ட லாபமடையும்

மக்களும், தொழில்களும் எவையுமே இருக்காது. சண்டைக் கப்பல், யுத்தப்படை, யுத்த தளவாடங்கள் வேண்டி இருக்காது என்பதோடு, மக்களைக் கொன்று குவிக்கும் சாதனமோ அவசியமோ எதுவுமே இருக்காது.

வாழ்வுக்காக எப்படி எப்படி உழைப்பது என்கின்ற கவலையும், முயற்சியும் மிகச்சிறிய அளவுக்கு வந்துவிடும். சுகம் பெறுவதிலும், போக போக்கியமடைவதிலும் நீண்ட நாள்

வாழ்வதிலும், ஆராய்ச்சியும், முயற்சியும் வளர்ந்து கொண்டே போகும். மக்களின் தேவைகள் எவ்வளவு வளர்ந்தாலும், அவற்றை உற்பத்தி செய்வதற்காக மனிதன் செலவழிக்க வேண்டிய நேரம் , மிக மிகக் குறைவாகவே இருக்கும்.

உதாரணமாக , மக்கள் முன்பு கொஞ்சமான உடை அணிந்து கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் துணி நெய்பவர்கள், ஒரு நிமி டத்திற்குச் சுமார் 150 இழைகள் தான் கோத்து வாங்க (நெய்ய) முடிந்தது. இன்று மக்கள் முன்னைவிட பல மடங்கு அதிகமாகத் துணியை அணிகிறார்கள். என்றாலும், அவ்வளவும் கிடைக்கும்படியான அளவுக்கு மேலே நெசவுத்துறையில் விஞ்ஞானம் அபிவிருத்தி அடைந்து, ஒரு நிமிஷத்துக்கு 45,000 இழைகள் கோர்த்து வாங்கும்படியான இயந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன.

சிகரெட்டுகளைப் பற்றிச் சிந்திப்போமானால், அக்காலத்தில் ஒரு நிமிடத்துக்கு இரண்டு மூன்று சிகரெட்டுகள் தான் ‘சுற்ற முடிந்திருக்கும். ஆனால் இன்று ஒரு நிமிடத்துக்கு 2,500 சிகரெட்டுகள் ஒரு இயந்திரத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதுவும் ஒரு பக்கம் புகையிலையைப் போட்டால் மறுபக்கம் ரயிலில் ஏற்றும்படியான மாதிரியில் சிகரெட்டுப் பேக்குகள் கொண்ட பெட்டிகள் (கட்டாகக் கட்டப்பட்டு விடுகின்றன என்பதோடு, அந்தச் சிகரெட்டுக்கம்பெனியின் பெயர் அந்த ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் சரியாகப் பதியவில்லையானால், பதியாத சிகரெட்டை இயந்திரம் கீழே தள்ளிவிடுகின்றது. இப்படிப்பட்ட நுட்பமான இயந்திரங்கள் இப்போதே கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் போது, இனி வருங்கால இயந்திர உலகம் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும் வேண்டுமா! இம்மாதிரியாகவே வாழ்வுக்கு வேண்டிய எல்லாத் தேவைத் துறைகளிலும் இயந்திர சாதனங்கள் பெருகும் போது நாட்டு மக்களில் ஒவ்வொருவரும் வருஷத்திற்கு இரண்டு வாரம் வேலை செய்வதனாலேயே மக்களுக்கு அவசியமான எல்லாம் தேவைகளும் பூர்த்தியாகி விடலாம்.
வேலை இல்லாமற் போகாது

ஆகவே , ஒரு ஆண்டில் மீதியுள்ள 50 வாரங்களும் மக்களைச் சும்மா சோம்பேறிகளாய் இருக்கச் செய்யுமே என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை.

வாழ்க்கைச் சாதனங்களுக்கு எப்படிக் காலமும், யோசனையும், கண்டு பிடிப்புகளும் தேவை இருக்கின்றதோ, அது போலவே மக்களின் ஓய்வுக்கும், உடற்பயிற்சிக்கும், மகிழ்ச்சிக்கும், போக போக்கியத்துக்கும் யோசனைகளும், ஆராய்ச்சிகளும், சாதனங்களும், அவைகளைச் சுலபமாகச் செய்ய வசதிகளும் கண்டுபிடிப்பதும், அவை நாளுக்கு நாள் மாற்றமடைவதும் ஆகிய காரியங்களில் மீதி நாள்கள் செலவழிக் கப்பட வேண்டி இருக்கும்.

அக்கால நிலை நாம் வரையறுக்க முடியாத அற்புதங்களையும், அதிசயங்களையும் கொண்டிருக்கும் மென்று சொல்லுவது மிகைப்படச் சொன்னதாக ஆகாது, ஆதலால், மக்கள் குறிப்பாக, அறிவாளிகள், சிந்தனையாளர்கள், முற்போக்கில் கவலை உள்ளவர்கள் ஆகியவர் களுக்கு இவற்றின் மூலம் சதா வேலை இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட வேலைகள் இன்று உள்ளது போல் கூலிக்கு வேலை செய்வது போலவோ இல்லாமல் உற்சாகத்துக்காகவும், போட்டிப் பந்தய உணர்ச்சி போன்ற துாண்டுதலுக்காகவும் ஊக்கத்துடன் வேலை செய்வதாக இருக்கும். அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனது வாழ்நாளில் தன்னை என்ன காரியத்தைச் செய்து முடித்து உலகுக்குப் பயன்படச் செய்து கொள்ளுவது என்ற கருத்தே வளரும்.
சோம்பேறிகள்

இப்படியானால் சோம்பேறிகள் வளர்ந்துவிட மாட்டார்களா என்று கேட்கலாம். இப்படிப்பட்ட காலத்தில் சோம்பேறிகள் இருக்கமுடியாது; இருப்பார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் இவர்களால் சமூகத்துக்குத் தேவையான எந்த வேலையும் குறைந்து போகாது. அதனால் ஒரு கெடுதியும் ஏற்பட்டுவிடாது. ஆதலால், அப்படிப்பட்ட இவர்கள் வேலையில் ஈடுபடுவதைவிட சும்மா

இருந்து சாப்பிடுவது அவர்களுக்கே கஷ்டமாயிருக்கும். பொதுவாகவே அந்தக் காலத்தில் மனிதர்கள் உண்மையிலேயே தங்களுக்கு வேலை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே, வீணாக நேரம் கழிகிறதே என்று வேலைக்குப் போராடிக் கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு இச்சோம்பேறிகளால் அனுகூலம் ஏற்படுமே தவிர, கவலை இருக்காது. எல்லா மக்களுக்கும் அவர்கள் ஆசை தீர வேலை கொடுக்க முடியாத காலமாக இருக்குமே ஒழிய அந்தக்காலம் வேலைக்கு ஆள்தேட வேண்டியதாகவோ அவன் வேலை செய்யவில்லை; இவன் வேலை செய்யவில்லை’ என்று கருதுவதாகவோ குறை கூறுவதாகவோ இருக்காது.
இழிவான வேலை

இழிவான வேலைகளுக்கு ஆள் கிடைக்குமா? என்ற கேள்வி பிறக்கலாம் . இழிவான வேலை என்பது வருங்காலத்தில் இருக்க முடியாது. சரீரத்தால் செய்யப்படவேண்டிய எல்லாக் காரியங் களும் அனேகமாக இயந்திரங்களாலேயே செய்யும்படியாக ஏற்பட்டு விடும். கக்கூஸ் எடுக்க வேண்டியதும் , துலக்க வேண்டி யதும், வீதி கூட்ட வேண்டியதுங்கூட இயந்திரத்தினாலேயே செய்து முடித்துவிடும். மனிதனுக்கு பாரம் எடுக்க வேண்டியதோ இழுக்க வேண்டியதோ ஆன காரியங்கள் இருக்கவே இருக்காது. அக்காலத்தில் கவுரவம் வேண்டும் என்பவர்கள் பொது ஜன நன்மை சவுகரியம் ஆகியவைகளைச் செய்ய வேண்டி இருக்கும் என்பதோடு அதில் ஏற்படும் போட்டியினால் “இழிவான வேலைக்கும் எப்போதும் கிராக்கி இருந்து கொண்டே இருக்கும். கவிகளும், இதர சித்திரக்காரர்களும், நாவலர்களும் சிற்பிகளும் போட்டி போட்டுக்கொண்டு புதிய உலகை (தோற்றத்தை) உண்டாக்குபவர்களாகவே இருப்பார்கள். திறமையானவர்களுக்குத்தான் வேலையும், மதிப்பும் கிடைக்கும்; மற்றவர்கள் அலட்சியப் படுத்துப் படுவார்கள்.
ஒழுக்கக் குறைவு

அக்காலத்தில் “ஒழுக்கக்குறைவு’ என்பதற்கு இடமே இருக்காது. ஒழுக்கக்குறைவாய் ஒருவன் நடக்கவேண்டுமானால் , அதனால் அவனுக்கு ஒழுக்கமாய் நடப்பதன் மூலம் கிடைக்கப்படாத ஏதாவது லாபமோ திருப்தியோ ஆசைப்பூர்த்தியோ ஏற்பட வேண்டும். புதிய உலகில் தனிப்பட்டவர்கள் தேவைக்கும் தனிப்பட்டவர்

மனக்குறைக்கும் ஏங்கித்திரியும் ஆசைக்கும் இடமே இருக்காது. தன்னிலும் மேலாகவோ தன்னிடமிருப்பதைவிட அதிகமாகக் கொண்டோ வேறொருவன் இருக்கிறான், அனுபவிக்கிறான் என்கின்ற உணர்ச்சி ஏற்படும்போது தான் அதிருப்தியும் மனக்குறையும் ஏற்படும்;

அதை நிவர்த்தித்துக் கொள்வதற்குத்தான் எந்த மனிதனும் ஒழுக்கக் குறைவாய் நியாய விரோதமாய் கட்டுத்திட்டத்துக்கு மீறி நடக்க வேண்டியவனாகலாம். பொதுவாக இன்று ஒழுக்கம், நியாயம் கட்டுத் திட்டம் என்பவைகளே பெரிதும் உயர்வு தாழ்வுகளும் தனிப்பட்டவர் கள் உரிமைகளையும் சவுகரியங்களையும் நிலைநிறுத்த ஏற்படுத்தப் பட்டவைகளே யாகும். ஆகையால், இவை இரண்டும் இல்லாத இடத்தில் அவை இரண்டிற்கும் இடமிருக்காது. அதுபோலவே, திருட்டுக்கும் இடமிருக்காது. கங்கைக்கரை ஓரத்தில் குடியிருப்பவர்கள் கங்கை நீரைத் திருடவேண்டிய அவசியம் ஏற்படுமா? அல்லது அவர்களது தேவைக்கு மேல் அதிகமாக எடுப்பார்களா? நாளைக்கு வேண்டும் என்று சேகரித்து வைக்க முயற்சிப்பார்களா? ஆதலால், தேவை உள்ள சாமான்கள் தாராளமாய் வழிந்தோடும்போது, திருட்டுக்கு இடமே இருக்காது; அதிகமாய் எடுத்துக்கொள்ள அவசியமும் இருக்காது. பொய் பேச வேண்டிய அவசியமும் இருக்காது. எதற்கும் ஏதாவது இலாபம் இருந்தால் தானே பொய்பேச நேரிடும்? குடியினால் மக்களுக்கு எவ்விதக் கெடுதியும் ஏற்பட இடமிருக்காது. கொலை செய்யும்படித் துாண்டத்தக்க காரியமும் இல்லாமல் போய்விடும். சூதாடுவது என்பது, பந்தயப் போட்டியாய் இருக்கலாமே தவிர, பண நஷ்டமாக இருக்காது.
விபசாரம்

விபசாரம் என்பதும் இருக்க நியாயமில்லை . ஏனெனில் பணத்துக்காகவும், பண்டத்துக்காகவும் விபசாரம் என்பது அடியோடு மறைந்தே போகும். மக்களுக்கு தன்மான உணர்ச்சி ஏற்பட்ட காலத்தில் ஒருவரை யொருவர் அடக்கி ஆளமுடியாது, ஒருவர் தயவைக்கோரி ஒருவர் இணங்கி விட முடியாது. ஒருவரையொருவர் அதாவது ஆணும் பெண்ணும் மனப்பூர்வமான சமவிருப்பமின்றிக் காதல் அனுபவிக்க மாட்டார்கள். கலவி விஷயத்தில் யாவருக்கும் தேர்ந்த அறிவும், கல்வியும் ஏற்படும் . ஆனதால் மனமொத்த உண்மைக்காதல் வாழ்க்கை என்பதைத் தவிர புதுமைக்காக, மாறுதலுக்காக அடிக்கடி மாறும் தன்மை சுலபத்தில் ஏற்பட்டு விடாது. அன்றியும், உடல் நலம் பற்றிய அறிவும், கவலையும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும் – தன்மான உணர்ச்சியும் இருக்கும் விருப்பமில்லாத இடத்தில் சம்பந்தமில்லாத இடத்தில் இச்சை வைப்பது, தனது சுயமரியாதைக் குறைவு” என்றே ஆண் – பெண் இரு பாலாரும் கருதுவார்கள். பெண் அடிமையோ ஆண் ஆதிக்கமோ அல்லாமலும் பலாத்காரமோ வற்புறுத் தலோ உடல் நலத்திற்குக் கேடோ இல்லாமல் ஒத்த காதல், ஒத்த இன்பம், ஒன்றுபட்ட உள்ளம் கொண்ட கலவியால் சமுதாயத்திற்கோ தனிப்பட்ட நபர்களுக்கோ எவ்விதக் கெடுதியும் ஏற்பட்டுவிடாது.  ஆதலால் விபசாரம் என்பதற்கு இடமில்லாது போகும்.

மூளைக் கோளாறான குணங்கள் என்பவைகளை இயற்கையாக உடையவர்கள் யாராவது இருந்தால், அதற்கு மாத்திரம் பரிகாரம் தேட வேண்டிய அவசியமிருக்கலாம். அதுவும் அப்படிப்பட்டவர்கள், பிறருக்கோ தங்களுக்கோ கேடு ஏற்படுவதாய் இருந்தால்தானே? ஆதலால் பஞ்சேந்திரியங்களும் ஒரே துறையில் ஒரே சமயத்தில் இன்பம் தரக்கூடிய இவ்வின்பத்துறையில் இயற்கைக்கேடு , சமுதாயக்கேடு அல்லாமல், வேறு காரியத்திற்குக் கட்டுப்பாடு இருக்காது.
மற்ற சவுகரியங்கள்

    போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும் அதிவேக சாதனமுமாகவே இருக்கும்.
    கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்.
    ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்.
    உருவத்தை தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டி பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.
    மேற்கண்ட சாதனங்களால் ஒரு இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக்கொடுக்கச் சாத்தியப்படும்.
    உணவுகளுக்குப் பயன்படும்படியான உணவு, சத்துப்பொருள் களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக் கூடிய உணவு ஏற்பட்டு விடும்.
    மனிதனுடைய “ஆயுள் நுாறு’ வருஷமென்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம். இன்னும் மேலே போனாலும் போகலாம்.
    பிள்ளைப்பேறுக்கு ஆண் – பெண் சேர்க்கை என்பது கூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக பொலிகாளைகள் போல் தெரிந்தெடுத்து மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி, நல்ல குழந்தைகளைப் பிறக்கச்செய்யப்படும்.
    ஆண் – பெண் சேர்க்கைக்கும், குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டு விடும்.
    மக்கள் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு ஒரு அளவுக்குள் கொண்டு வந்து விடக்கூடும்.

அநுபோகப் பொருள்கள்

அநுபோகப் பொருள்களும் வெகுதுாரம் மாற்றமடைந்து விடும். அதற்காக ஏற்படும் செலவும் அதை அனுபவிக்கும் முறையும் வெகு சுருக்கமாக மாற்றமடைந்துவிடும்.

ஒரு டன்னுள்ள மோட்டார் கார், ஒரு அந்தர் வெயிட்டுக்கு வரலாம்; பெட்ரோல் செலவு குறையலாம்; பெட்ரோலுக்குப் பதில் மின்சார சக்தியே உபயோகப்படுத்தப்படலாம்; அல்லது விசை சேகரிப்பாலேயே ஓட்டப்படலாம்.

மின்சாரத்தின் உபயோகம் எல்லா மக்களுக்கும் பயன்படக்கூடிய விதமாகவும், மக்கள் வாழ்க்கை வசதிகளுக்குத் துணை செய்யும் விதமாகவும் விரியும் – பெருகும். விஞ்ஞானம் வாழ்க்கையில் இன்பம் அனுபவிக்கப் பயன் படும்படியான அதிசயப் பொருள்களும், கண்டுபிடிப்புகளும் தனிப்பட்டவர் களின் இலாபத்துக்காக என்று முடங்கிக் கிடக்காமல் சகல மக்களும் சவுகரியம் தருகிற பொது சாதனங்களாக அமையும்.

இவ்வளவு மாறுதல்களோடு இனி வருங்காலம் இருக்குமாகையால், இன்றைய உலக அமைப்பிலே உள்ள அரசு, உடைமை, நீதி, நிர்வாகம், கல்வி முதலிய பல துறைகளிலும் இப்போது எவையெவைப் பாதுகாக்கப்பட்ட என்னென்ன முறைகள் கையாளப்பட்டு வருகின்றனவோ அம்முறைகளுக் கெல்லாம் அவசிய மில்லாமல் போய்விடும் என்பதோடு அவை சம்பந்தமமாக இன்று நிலவும் பல கருத்துக்கள் அர்த்தமற்றதாகவும் போய்விடும்.
கடவுள்

இனிவரும் உலகத்தில் கடவுள் தன்மை எப்படி இருக்கும் என்று அறிய மக்கள் கண்டிப்பாக ஆசைப்படாமல் இருக்கமாட்டார்கள். கடவுள் தானாக யாருக்கும் தோன்றுவதில்லை. பெரியோர் களால் சிறியோர்களுக்குப் போதிக்கப்பட்டும், காட்டப்பட்டுமே தோற்றமான எண்ணமும், உருவமுமாகும். ஆதலால், இனிவரும் உலகத்தில் கடவுளைப்பற்றிப் பேசுகிறவர்களும், காட்டிக் கொடுப்பவர் களும் மறைந்து விடுவார்கள். யாராவது இருந்தாலும் அவர்களுக்கும் கடவுள் மறக்கப்பட்டுப்போகும். ஏனெனில், கடவுளை நினைக்க ஒரு மனிதனுக்கு ஏதாவது ஒரு அவசியம் இருந்தால் தான் நினைப்பான் – சகல காரண காரியங்களுக்கும் மனிதனுக்கு விவரம் தெரிந்து விடுவதாகவும், சகல தேவைகளுக்கும் மனிதனுக்குக் கஷ்டப்படாமல் பூர்த்தியாவதாகவும் இருந்தால் எந்த மனிதனுக்கும் கடவுளைக் கற்பித்துக்கொள்ளவோ நினைத்துக் கொள்ளவோ அவசியம் ஏன் ஏற்படும்? மனிதன் உயிரோடு இருக்கும் இடமே அவனுக்கு மோட்ச மாய்க் காணப்படுமானால், விஞ்ஞானத்துக்கும், ஆராய்ச்சிக்கும் பொருத்தமில்லாத மோட்சம் ஒன்றை ஏன் கருதுவான்? அதற்கு ஏன் ஆசைப்படுவான்? தேவை அற்றுப்போன இடமே கடவுள் செத்து போன இடமாகும்’ என்பது அறிவின் எல்லையாகும். விஞ்ஞானப் பெருக்கம் ஏற்பட்ட இடத்தில் கடவுள் சிந்தனைக்கு இடம் இருக்காது.

சாதாரணமாக , மனிதனுக்கு இன்று கடவுள் நிச்சயத்திற்கு ஒரே காரணம் தானே இருந்து வருகிறது. அக்காரணம் என்ன? காரண பூதமாய் இருப்பது எது? அதுதான் கடவுள் என்று சொல்லப்படுகிறது. இது விஞ்ஞானிக்குச் சுலபத்தில் அற்றுப்போன விஷயம். நம்முடைய வாழ்வில், நாம் எதைக் கடவுள் செயல் என்று உண்மையாய்க் கருதுகிறோம்? நம் அனுபவத்திற்கு வந்த ஒவ்வொன்றுக்கும் நாம் சமாதானம் தெரிந்து கொள்ளுகிறோம்; தெரியாதவற்றைத் தெரியாது என்று ஒப்புக்கொள்ளுகிறோம். இதுவேதான் உலகத் தோற்றத்துக்கும் உலக நடப்புக்குக் கொள்ளவேண்டிய முறையாகும். ஒரு சமயம் உலக நடப்புக் காரணம் தெரியாவிட்டாலும், அதற்காக ஒரு காரியத்திற்கும் தேவை இல்லாத கடவுளை எவனும் வணங்கமாட்டான்.
மோட்சம் – நரகம்

புதிய உலகத்தில், மோட்சம், நரகத்துக்கு இடம் இருக்காது. நன்மை, தீமை செய்ய இடமிருந்தால் தானே மோட்சமும் , நரகமும் வேண்டும்? எவருக்கும் யாருடைய நன்மையும் தேவை இருக்காது. புத்திக்கோளாறு இருந்தால் ஒழிய, ஒருவனுக்கு ஒருவன் தீமை செய்ய மாட்டான். ஒழுக்கக் கேட்டுக்கும் இடமிருக்காது. இப்படிப்பட்ட நிலையில் மோட்ச – நரகத்துக்கு வேலை ஏது? ஆள் ஏது? எனவே, இப்படிப்பட்ட நிலை புதிய உலகத்தில் தோன்றியே தீரும். தோன்றாவிட்டாலும், இனிவரும் சந்ததிகள் இந்த மாறுதல்களைக் காணவேண்டுமென்றும். இவைகளால் உலகில் மக்களை இப்போது வாட்டி வரும் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, வாழ்க்கை என்றால் பெருஞ்சுமை என்று சலித்துக் கொண்டும், வாழ்க்கை என்றால் போராட்டம் என்று திகைத்துக்கொண்டும் இருக்கிற நிலைமை போய், வாழ்க்கையென்றால் மக்களின் இன்பஉரிமை என்ற நிலைமை உண்டாக வேண்டுமென்றும் ஆவலுடன் பணியாற்றி வருவார்கள்.

‘நம்மால் என்ன ஆகும்? அவனன்றி ஓரணுவும் அசையாதே என்று வாய் வேதாந்தம் பேசமாட்டார்கள். நம் கண்முன் காணப்படும் குறை பாடுகளைப் போக்க, நாம் எப்படி உழைக்க வேண்டும் என்பதே அவர்களின் கவலையாகவும், அவர்களின் எண்ணமாகவும் இருக்கும். என்றோ யாரோ எதற்காகவோ எழுதி வைத்த ஏட்டின் அளவோடு நிற்கமாட்டார்கள். சுய சிந்தனையோடு கூடியதாகவே அவர்களின் செயல்கள் இருக்கும். மனித அறிவீனத்தால் விளைந்த வேதனைகளை மனித அறிவினாலேயே நீக்கிவிட முடியும் என்ற ஆசையும், நம்பிக்கை யும் கொண்டு உழைப்பார்கள். அவர்களின் தொண்டு , மனித சமுதாயத் தை நாளுக்கு நாள் முன்னுக்குக் கொண்டு வந்த வண்ணமாகவே இருக்கும். சுயசிந்தனைக்கு லாயக்கற்றவர்களே இந்த மாறுதல்களைக் கண்டு மிரள்வதும், காலம் வரவரக்கெட்டுப்போச்சு என்று கதறுவதுமாக இருப்பவர்கள்.

இன்றைய மக்களிலே பலருக்கு பழமையிலே இருக்கும் மோகம் அறிவையே பாழ் செய்துவிடுகிறது. புதிய உலகத் தோற்ற வேகத்தைத் தடை செய்துவிடுகிறது. பழைய முறைப்படி உள்ள அமைப்பு களால் லாபமடையும் கூட்டம், புதிய அமைப்பு ஏற்படுவதைத் தடுக்க முயற்சிப்பது இயற்கை. ஆனாலும், பாமரனின் ஞானசூன்யம், சுயநலக் காரரின் எதிர்ப்பு என்னும் இரண்டு பெரிய விரோதிகளைக் கண்டு கலங்காமல், வேலை செய்வோரே, இனிவரும் உலகச் சிற்பிகளாக முடியும். அந்தச் சிற்பிகளின் கூட்டத்திலே நாமும் சேர்ந்து நம்மாலான காரியத்தைச் செய்ய வேண்டுமென்று வாலிபர்கள், பகுத்தறிவாளர்கள் ஆசைப்பட்டு உழைக்க முன்வர வேண்டி இதை முடிக்கிறேன்.

கிபி 1943 ஆம் ஆண்டு திருமண நிகழ்ச்சி யொன்றில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவினை, பெரியாருடன் அந் நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணா , முழுமையாகக் குறிப்பெடுத்து, பின்னர் தெளிவுடன் எழுதி பெரியாரிடம் காண்பித்து ஒப்புதல் பெற்று தமது திராவிடநாடு இதழில்’ ஏட்டில் 21.1.1943, 28.1.1943 ஆகிய தேதிகளில் வெளியிட்டார்.

பின்னர் இனி வரும் உலகம்’ என்ற பெயரில் சிறுநூலாக வெளியிட்ட பெரியார் அந்நூலின் மேலட்டையில் இரசாயன சோதனைக்குழாயில் ( Test tube) குழந்தை வளர்வதுபோல படம் ஒன்றை அப்போதே வெளியிட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக