சனி, 13 பிப்ரவரி, 2021

வீடு புகுந்து குழந்தைகளை தூக்கிச் சென்ற குரங்குகள்!

வீடு புகுந்து குழந்தைகளை தூக்கிச் சென்ற குரங்குகள்!
minnambalam : தஞ்சாவூர் அருகே வீட்டிலிருந்த இரு பச்சிளம் குழந்தைகளைக் குரங்குகள் தூக்கிச் சென்றதில் ஒரு குழந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மேல அலங்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனா. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் புவனா தனது இரட்டை குழந்தைகளை வீட்டினுள் பாயில் படுக்க வைத்துவிட்டு கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் புகுந்த குரங்குகள், பாயில் படுக்க வைத்திருந்த குழந்தைகளை தூக்கி சென்றுள்ளது. சத்தம் கேட்டு கழிவறையில் இருந்து வந்த புவனா கத்தவே ஒரு குழந்தையை மேற்கூரையில் போட்டு விட்டு மறு குழந்தையை வீட்டின் பின்னே உள்ள பெரிய கோட்டை அகழியில் தூக்கிப் போட்டுவிட்டு குரங்குகள் சென்றுள்ளன.

இந்நிலையில் புவனாவின் கதறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் குழந்தையை தேடி இருக்கின்றனர். இதில் வீட்டின் மேற்கூரையில் இருந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. மற்றொரு குழந்தை வெகுநேரம் தேடியும் காணவில்லை.

இதையடுத்து வீட்டின் பின்புறம் உள்ள அகழியில் இருந்தது தெரியவந்தது. சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் தண்ணீரில் மூழ்கி கிடந்த குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பிறந்து 7 நாள் ஆன குழந்தை, குரங்குகள் தூக்கி சென்று உயிரிழந்தது தாய் தந்தை மட்டுமின்றி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேல அலங்கம் பகுதியில் ஓடுகள் மற்றும் கூரைகள் வேயப்பட்ட வீடுகள் அதிகம் உள்ளன. அப்பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகமாக இருப்பதாக வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தான் இன்று இது போன்ற ஒரு சோக சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக