செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

அப்பாவு கோஸ்வாமி என இருந்தால்தான் நீதி கிடைக்குமா? ராதாபுரம் தேர்தல் வழக்கு குறித்து திமுக அப்பாவு

Mathivanan Maran - tamil.oneindia.com : சென்னை: தம்முடைய பெயரும் அப்பாவு கோஸ்வாமி என இருந்தால்தான் நீதி கிடைக்குமோ? என ராதாபுரம் தேர்தல் வழக்கை சுட்டிக்காட்டி திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான அப்பாவு சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
2016 சட்டசபை தேர்தலில் ராதாபுரம் சட்டசபை தொகுதியில் திமுகவின் அப்பாவு போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அப்போதே இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் 203 தபால் வாக்குகளை எண்ணவில்லை என்பதை அப்பாவு சுட்டிக்காட்டி இருந்தார். ..மீண்டும் எண்ணப்பட்டன
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 3 சுற்றுகளில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் முன்னிலையிலேயே இந்த வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன.

தடை கோரி வழக்கு ஆனால் இந்த மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் இன்பதுரை தரப்பு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை; ஆனால் முடிவு வெளியிடத்தடை என புதிய உத்தரவை பிறப்பித்தது.

புதியதாக மனு இவ்வழக்கு விசாரணை கடந்த 4-ந் தேதி விசாரணைக்கு வந்த போது மீண்டும் பிப்ரவரி 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை உடனே வெளியிட கோரி அப்பாவு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அப்பாவு கோஸ்வாமி என இருந்தால்.. இம்மனுவை தாக்கல் செய்த கையோடுதான் சமூக வலைதளங்களில், தேர்தல் வழக்குகள் ஆறு மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றமே ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், 5 வருடங்கள் முடியும் தருவாயில் கூட எனது வழக்கில் நீதி கிடைக்கவில்லை!.. என் பெயர் அப்பாவு கோஸ்வாமி என இருந்தால் நீதி கிடைக்குமா? அர்னாப் கோஸ்வாமி வழக்கில் ஒரே வாரத்தில் உத்தரவிடும் உச்சநீதிமன்றம், எனக்கு மட்டும் ஏன் நீதி வழங்க தாமதப்படுத்துகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக