திங்கள், 15 பிப்ரவரி, 2021

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ இன்று நள்ளிரவு முதல் கட்டாயம்

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ இன்று நள்ளிரவு முதல் கட்டாயம்
dailalythanthi :புதுடெல்லி,சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுவதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. நேரமும் வீணாகிறது.எனவே, இப்பிரச்சினையை தவிர்க்க மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் ‘பாஸ்டேக்’ முறை, கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர்கள் கிடைக்கும். குறிப்பிட்ட தொகை செலுத்தி அந்த ஸ்டிக்கர்களை வாங்கி வாகனங்களில் ஒட்டிக்கொள்ள சுங்கச்சாவடிகளை வாகனம் கடக்கும்போது, சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு கருவி மூலம் அந்த வாகனத்துக்கான கட்டணம் தானியங்கி முறையில் கழித்துக்கொள்ளப்படும். இதனால், சுங்கச்சாவடிகளில் நிற்காமல் பயணத்தை தொடரலாம்.

‘பாஸ்டேக்’ முறைக்கு வாகன உரிமையாளர்கள் மாறுவதற்கு கால அவகாசம் அளிக்கும் வகையில், இதை கட்டாயம் ஆக்குவதற்கான தேதி அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவில் இருந்து நாடு முழுவதும் ‘பாஸ்டேக்’ முறை கட்டாயம் ஆக்கப்படுவதாக மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

‘பாஸ்டேக்’ முறை 15-ந் தேதி நள்ளிரவு முதல் கட்டாயம் ஆகிறது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டண சுங்கச்சாவடிகளில் அனைத்து வழிகளும் ‘பாஸ்டேக்’ வழிகளாக மாற்றப்படுகிறது.

‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் ஒட்டாமலோ, முறையான ஸ்டிக்கர் ஒட்டாமலோ அல்லது செயல்படக்கூடிய ஸ்டிக்கர் ஒட்டாமலோ அந்த வழிகளை கடக்கும் வாகனங்கள், அவற்றுக்கான கட்டணத்தைப் போல் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

மின்னணு முறையில் கட்டணம் செலுத்துவதை ஊக்கப்படுத்தவும், காத்திருக்கும் நேரம், எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவும், தடையற்ற பயணத்தை மேற்கொள்ளவும் இதை அமல்படுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ‘பாஸ்டேக்’ முறை அமல்படுத்தும் தேதி மேற்கொண்டு நீட்டிக்கப்படாது என்று மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:-

ஏற்கனவே இரண்டு, மூன்று தடவை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கொண்டு நீட்டிக்கும் திட்டம் இல்லை.

சில வழித்தடங்களில் 90 சதவீத வாகனங்கள், ‘பாஸ்டேக்’ முறைக்கு மாறிவிட்டன. இன்னும் 10 சதவீத வாகனங்களே விடுபட்டுள்ளன. சுங்கச்சாவடிகளிலேயே ‘பாஸ்டேக்’ வில்லைகள் கிடைக்கின்றன. எனவே, எல்லா வாகன உரிமையாளர்களும் அவற்றை உடனடியாக வாங்கி பொருத்திக்கொண்டு பயணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினாா்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக