ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

ஸ்டாலின் : மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து... கசிந்த ரகசியம்?

Jeyalakshmi C  - tamil.oneindia.com : கோவை: திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
பொள்ளாட்சியில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை பெற்றுள்ள நகை கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
 திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு கடன் ரத்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். 
திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அறிவித்தார் மு.க ஸ்டாலின். அந்த அறிவிப்பு வெளியாக சில வாரங்களில் சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். 
கொரோனா, புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில், ரூ.12,110 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதன் மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க ஸ்டாலின் வாக்குறுதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தற்போது தொகுதிவாரியாக பிரச்சாரம் செய்து வருகிறார். மக்களிடம் மனு வாங்கும் அவர் வாக்குறுதிகளை அளித்து வருகிறார். விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும். கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இன்றைய தினம் பொள்ளாச்சியில் பேசும் போது மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகள் அரசு அறிவித்தது போல விவசாயிகளின் பயிர்க் கடன்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்களின் நிலுவை விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடனும் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

கடன்கள் ரத்தாகும் என எதிர்பார்ப்பு கொரோனா லாக்டவுன் காரணமாக தொழில் முடக்கத்தினால் பல்வேறு சுய உதவிக்குழுக்கள் கடன்களை செலுத்தமுடியாத நிலையில் உள்ளதாக அரசுக்கு கோரிக்கை விடுத்தன.மேலும், தனியார் வங்கிகள் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு நெருக்கடி தருவதாகவும் கூறப்பட்டது. சுயஉதவிக் குழுக்களின் கடன்களும் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது

கூட்டுறவு வங்கிகளில் சேகரிப்பு கூட்டுறவு வங்கிகளில் கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல், இந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் நிலுவையில் உள்ள கடன் விவரங்கள், கூட்டுறவுத் துறை பதிவாளர் அலுவலகம் சார்பில் கோரப்பட்டுள்ளது.

அரசு சார்பில் சுற்றறிக்கை மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தொடர்பான விவரங்களை மாவட்ட வாரியாக மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களும், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் இதரகூட்டுறவு சங்கங்கள் தொடர்பான விவரங்களை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர்மற்றும் மண்டல இணை பதிவாளர்களும் அனுப்பும்படி சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரகசியம் கசிவது எப்படி? இந்த நிலையில் இதனை தெரிந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்த உடன் மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடன்கள் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஒருவேளை முதல்வர் பழனிச்சாமி மகளிர் சுய உதவிக்குழுவினரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கும் பட்சத்தில், ஸ்டாலின் சொல்வதை முதல்வர் பழனிச்சாமி செய்கிறார் என்று சொல்லவும் செய்வார். அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகும் முன்னதாகவே அதை தெரிந்து கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுகிறார் என்று சொல்கின்றனர் அதிமுகவினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக